உலக பார்வை தினம் - பார்வை பிரச்னைகள் பற்றி வேதத்தின் கண்ணான ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக..
உலக பார்வை தினம் - பார்வை பிரச்னைகள் பற்றி வேதத்தின் கண்ணான ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் உலகப் பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று அக்டோபர் 11-ஆம் தேதி உலக பார்வை தினமாக அமைந்திருக்கிறது.  இந்நாளில் கண் நலம் பற்றிய செய்திகளை விழிப்புணர்வினை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது. 

கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகைக் காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட. ஆனால் இந்தக் கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு போகின்றன. இரவு அதிக நேரம் கண்விழித்து இருப்பது, அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்றவற்றைக் காண்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்க கூடியவையாகும். 

கண் பார்வை இழப்பைத் தடுப்பதே இந்த உலக கண் பார்வை தினத்தின் நோக்கமாகும். பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்கள், உணவு குறைப்பாட்டால் காலப்போக்கில் பார்வை இழப்பவர்கள் சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே உலக சுகாதார அமைப்பின் முயற்சியால் உலக கண் பார்வை தினத்தில் நடத்தப்படும் முகாம்கள் மூலம் பார்வை குறைபாடுகள் தீர்க்க  வழிவகுக்கப்படுகின்றது. மேலும், இதன் மூலம் பார்வை குறைப்பாட்டிற்கு முக்கிய காரணிகளான கண் புரை, கண் அழுத்த நோய், கண்ணில் பூ விழுதல் போன்றவற்றிற்கு இலகுவான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 

உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ள "விஷன் 2020" திட்டத்தில் 2020-ம் ஆண்டிற்குள் மேற்கண்ட நோய்களால் எவரும் பார்வை இழக்கக்கூடாது என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகின்றது. மேலும், உலக கண் பார்வை தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றது. சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கண்ணின் முக்கியத்துவம்

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்னைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் நமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காகவே உலக பார்வை தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும்.

சாலேசரம் என்னும் வெள்ளெழுத்து

நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கருப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாகத் தெரியுமாம். இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். `தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப் போல, வெள்ளெழுத்துப் பிரச்னையும் வயதாவதால் வருவது தான். புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரைப் பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல். இவைகள் எல்லாமே நாற்பது வயதை நெருங்கியவர்களுக்கும், நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்துப் பிரச்னையாகும்.

சர்க்கரை நோயால் பார்வையிழப்பு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ளுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு சர்க்கரை கண்களைப் பாதிக்கும். 20 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளவர்களுக்குப் பார்வை இழப்பிற்கு சர்க்கரை நோய் முதல் மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது. சிறிய அளவில் ஆரம்பிக்கும் கண் குறைபாடுகள் சர்க்கரை நோயினால் அதிகரிக்கக்கூடும். அதனால் பார்வையில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும் கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஜோதிட காரணங்கள் என்ன?

பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர் என்றாலும் கண்களையும் பார்வையைப் பொருத்தவரை காரக கிரகம் யார் தெரியுமா?  காலபுருஷ இரண்டாம் ராசியான ரிஷபத்தின் அதிபதியான சுக்கிரபகவானேதாங்க!

அசுப தொடர்பு இல்லாமல் சுக்கிரன் லக்னத்தில் அமைந்துவிட்டால் அவர்களுக்குக் களையான முகமும் அதில் அழகான கண்களும் அமைந்துவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சுக்கிரனோடு சனி இனைவு பெற்றவர்களுக்கு கண்கள் சிறியதாக இருக்குமாம். பார்வை குறைபாடு உள்ளவர்கள் அணியும் கண்ணாடியின் காரகரும் சுக்கிரன்தான். கண் மருத்துவராகவோ அல்லது கண்ணாடி கடை வைத்திருப்போர்களுக்கும் சுக்கிரன் பலமாக இருந்து தொழில் மற்றும் ஜீவன ஸ்தானதான பத்தாமிடத்திற்கும் தனஸ்தானமான இரண்டாமிடத்திற்கும் தொடர்பு கொண்டிருப்பார் என்கிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள். 

இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். பலமான சுப தொடர்பு பெற்ற இரண்டாம் வீட்டதிபதி அமையப்பெற்றால் அழகான ஆரோக்கியமான கண்கள் பெற்றிருப்பர். ஆனால் இரண்டாம் வீடு அல்லது இரண்டாம் வீட்டதிபதி 6/8/12 பாவ தொடர்பு பெற்றுவிட்டால் கண்களில் ஏதாவது ஒரு குறைபாடு ஏற்பட்டுவிடும். சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் அமைந்தால் இடது கண்ணிற்கும் சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் அமைந்தால் வலது கண்ணிற்கும் பாதிப்பு ஏற்படும்.

இரண்டாம் இடத்திலும் - பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும்.

1. சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும். சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும்.

2. பலமிழந்த நீசம் பெற்ற சந்திரன் சனி தொடர்பு பெற்று குரு தொடர்பு பெறாமலிருந்தாலும் பார்வையிழப்பு ஏற்படும்.

3. சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

4. சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைக்கண் நோயை ஏற்படுத்தும்.

5. கும்ப லக்னமாகி சந்திரன் 6ம் வீட்டதிபதியாகி வக்கிரம் பெற்ற கிரகம் நின்ற ராசியில் இணைவு பெற்றால் விபத்தினால் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

6. எந்த கிரகம் 6-ம் வீட்டதிபதியாகி வக்கிரம் பெற்ற கிரகத்துடன் இணைவு பெற்றாலும் பார்வை இழப்பு ஏற்படும்.

7. சூரியனும் சந்திரனும் 2/12 ஆக அமைவது நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

8. நீசம் பெற்ற சந்திரன் 6ம் வீடு அல்லது 12ம் வீட்டில் அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது அல்லது தொடர்புடன் இருப்பது.

9. லக்னாதிபதி 6/8/12ம் வீட்டில் இருப்பது, அசுபர்களின் வீட்டில் இருப்பது மற்றும் ராகு/கேதுவுடன் இனைந்து நிற்பது.

10. செவ்வாய் சந்திரனுக்கு 6-மிடத்தில் நிற்பது. 

11. பிறவியிலேயே பார்வையற்று இருப்பது கர்மவினையே என்றாலும் பார்வை இன்மைக்கான கிரக நிலை அமையப்பெற்றுப் பல வற்க சக்கரங்களில் அந்த நிலை அமைவது உறுதி செய்கிறது.
 

12. கண் பார்வை குறைபாட்டிற்கான கிரகநிலை பெற்று சுக்கிரன் சுப தொடர்புகள் பெற்றிருந்தால் அவர்கள் கண்ணாடி (லென்ஸ்) அணிவதன் மூலம் பார்வையை பெற முடியும்.

13. பார்வை குறைபாட்டினை நீக்க ஆங்கில மருத்துவத்தில் விட்டமின் A மிக முக்கியமானது என்கிறது. விட்டமின் Aவின் காரக கிரகம் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்பார்வைக்கான ஸ்தலங்கள் மற்றும் பரிகாரங்கள்

1. கண்பார்வைக்காக பல ஸ்தலங்கள் அமைந்திருந்தாலும் சுக்கிர ஸ்தலங்களான கஞ்சனுர், ஸ்ரீரங்கம் மாங்காடு வெள்ளீஸ்வரர் மற்றும் திருமயிலை எனப்படும் சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் ஆலயம் மிகவும் முக்கியமானதாகும்

2. சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர பார்வை கோளாறுகள் நீங்கும். மேலும், சூரியனார் கோயில், ஆடுதுறை போன்ற சூரிய பரிகார ஸ்தலங்கள், சூரியன் சிவனை வழிபட்ட ஸ்தலங்கள், சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் ஆகிய ஸ்தலங்களில் சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமையில் சூரிய ஹோரையில் வணங்கி வர பார்வை கோளாறுகள் நீங்கும். மேலும் சூரிய நமஸ்காரம் செய்வது, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்வது ஆகியவையும் கண் பார்வை கோளாரிலிருந்து நம்மைக் காக்கும் வழிகளாகும். 

3. ஜோதிடத்தில் இரண்டாம் பாவம் வலது கண்ணையும் பன்னிரண்டாம் பாவம் இடது கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். மேலும் சூரியனை வலது கண்ணிற்கு காரகராகவும் சந்திரனை இடது கண்ணிற்கு காரகராகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷத்தை லக்கினமாகக் கொண்ட கால புருஷ ராசிக்கு பன்னிரண்டாம் இடமான மீனத்தில் சந்திர பகவான் நின்று மூன்றாம் பிறை பார்க்கும் போது பார்வை கோளாறுகள் நீங்கும். முக்கியமாக இடது கண்ணில் பார்வை கோளாறு உள்ளவர்கள் அமாவாசை முடிந்த இரண்டாம் நாள் திருதியை திதியில் சந்திர தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும். 

4. சனி, மாந்தி போன்ற அசுப கிரகங்கள் சூரியன், சந்திரன் மற்றும் இரண்டாம் பாவாதிபதி மற்றும் பன்னிரண்டாம் பாவாதிபதியோடு தொடர்புகொண்டு பார்வை கோளாறு அடைந்தவர்கள் வசதியற்ற வயதான முதியவர்களுக்குக் கண் ஆபரேசனுக்கு உதவுவது, மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுப்பது போன்றவை பார்வை கோளாரிலிருந்து நம்மைக் காக்கும் பரிகாரங்களாகும்.

5. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையைத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும். மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்குக் கண் பார்வை வேண்டிப் பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கெளமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.

6. சர்க்கரை நோயால் பார்வை இழப்பு பெற்றவர்கள் நவகிரஹ குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கி வர சர்க்கரை நோய் கட்டுப்பட்டு அகக்கண் புறக்கண் இரண்டிலும் உள்ள பார்வை கோளாறுகள் நீங்கும்.

7. காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் மருந்தீஸ்வரர் விருந்தீஸ்வரர் கோயிலும் கண் நோய்களுக்கான சிறந்த பரிகார ஸ்தலமாகும்

8. கேரளாவில் உள்ள மீன் குளத்தி பகவதியம்மன் கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில்களும் அழகிய மீன் போன்ற கண்கள் அமையப் பிரார்த்தனை தலங்களாகும். என்றாலும் பிறப்பிலேயே பார்வை இழந்தவர்களுக்கு கர்ம வினையே காரணம் என்பதால் அவர்களுக்குப் பரிகாரம் ஏதுமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com