திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 6

போர்த்துக்கீசியர்கள் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்து விட்டுச் சென்றபோது அங்கிருந்த...
திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 6

தல அருமை

போர்த்துக்கீசியர்கள் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்து விட்டுச் சென்றபோது அங்கிருந்த பக்தர்கள் மூல மூர்த்தியை இரவோடு இரவாக எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று தம்பலகமத்தில் இருந்த கழனிமலை என்ற ஒரு மலை உச்சியில் வைத்து ரகசியமாக வழிபட்டார்கள். அதன் பின் அந்தப் பக்தர்களும் மரணம் அடைந்து விட்டபின் இந்த ஆலயம் இருந்த இடம் யாருக்குமே தெரியாமல் இருந்தது.

பல காலம் கழித்து இந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க பலரும் பெரும் அளவிலான முயற்சி செய்து ஆலயம் இருந்ததாகக் கூறப்பட்ட மலைச் சிகரத்தை அதுவும் வெகு தொலைவில் இருந்து மட்டுமே கண்டுபிடித்தார்கள். ஆனால் எவராலும் அந்த ஆலயத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதற்குக் காரணம் அந்த மலை உச்சிக்குப் ஏறிப் போவதும் மிகக் கடினம்‌ என்பதே.

பாதையும் இல்லாமல் இருந்தது ஒரு காரணம். ஆகவே இந்த ஆலயத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி செய்யாது விட்டிருந்தார்கள். இப்படிப்பட்ட காலத்தில்தான் ஒரு சிவபக்தருக்கு ஒரு அதிசய அனுபவம் அந்த காட்டுப் பிரதேசத்தில் காட்டு மான் வேட்டை ஆடச் சென்றபோது நேரிட்டது.

இந்தச் சம்பவம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்மஜோதி என்ற ஒரு புத்தகத்தில் கழனி மலையில் நடந்த அற்புதம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. மயில்வாகனர் எனும் ஒரு சிவபக்தர் ஒருநாள் மதியம் தனது நண்பர்களுடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த அடர்ந்த வனத்துக்கு வேட்டை ஆடச் சென்றிருந்தார்.

அடர்ந்த காட்டு மத்தியில் வழியையும், நண்பர்களையும் தவற விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார். எங்குச் சென்று விட்டோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் எங்கோ சென்று விட்டிருந்ததும் வேட்டையில் மும்முரமாக இருந்த அவருடைய நண்பர்களுக்கும் தெரியவில்லை. இதனால் மயில்வாகனனார் எத்தனைக் குரல் எழுப்பியும் அவரால் அவர் நண்பர்களையோ அல்லது வேட்டை நாயையோ அருகில் அழைக்க முடியவில்லை.

இருட்டத் துவங்கியது. பயமாகி விட்டது அவருக்கு. ஆங்காங்கே காட்டு விலங்குகளின் ஓசையும் பயத்தை அதிகமானது. என்ன செய்வது என யோசித்தார். உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். பசியும் வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. நடு ஜாமம் ஆகியிருந்த நேரம். பயத்தினால் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடியே மரத்தின் மீது அமர்ந்திருந்தவர் தன்னை மறந்து கண்மூடி தூங்கிப் போனார்.

அப்படியே மரத்தின் மீது அமர்ந்து இருந்தவர் திடீர் என மத்தள ஓசையைக் கேட்டு விழித்தார். தூரத்தில் சிலர் மத்தளத்தை அடித்தவாறும், கையில் விளக்குகளுடன் அந்த மரத்தின் பக்கமாக வந்து கொண்டு இருந்தார்கள். அவருக்குச் சற்று உயிர் வந்தது. அவர்களை உதவிக் கேட்டு தன் ஊருக்குச் செல்லலாம் என நினைத்தவாறு அந்த ஊர்வலம் மரத்தின் அருகில் வந்ததும் அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினான். கீழே இறங்கியவன் அதிசயித்து நின்றான். அந்த மனிதர்கள் பொன் மேனியுடன் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.

மௌனமாக எதோ உச்சரித்தபடியே நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுக்க மயில்வாகனனார் முயன்றாலும் அவர்கள் அவரை லட்சியமே செய்யாமல் நடந்து கொண்டு இருந்தார்கள். ஆகவே வேறு வழி இன்றி எங்குதான் செல்கிறார்கள் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். அவர்கள் அனைவரும் காட்டின் மத்தியில் அமைந்து இருந்த ஒரு ஆலயத்தில் நுழைந்தார்கள். அவனும் அதில் நுழைந்தான்.

என்னே அவர் கண்ட அந்தக் காட்சி!! ஆலயத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்துக் கொண்டு இருந்தார் ஒருவர். அனைவரும் அந்தப் பூஜையில் பக்திபூர்வமாக கலந்து கொண்டார்கள். மயில்வாகனனாரும் அந்த பூஜையில் கலந்து கொண்டார். பல மணிநேரம் பூஜை நடந்து முடிந்தது. பூஜை முடிந்ததும் பூஜை செய்தவர் அனைவருக்கும் திருநீறு, சந்தனம் எனப் பிரசாதத்தை தந்த பின் அன்னப்பிரசாதம் தந்தார்கள்.

பசியால் துடித்தவர் அந்த அன்னப் பிரசாதத்தை அதிகமாகவே பெற்றுக் கொண்டு மறைவிடத்தில் சென்று அமர்ந்து கொண்டு சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்த பின், அயர்ச்சியினால் மீண்டும் தன்னை மறந்து அங்கேயே உறங்கி விட்டார். காலை விடிந்ததும் திடீர்ரென கண் விழித்து எழுந்தார். எழுந்தவர் அந்த ஆலயத்தில் முன் இரவில் தான் பார்த்த யாரையுமே காணாமல் தான் மட்டுமே இருப்பதைக் கண்டு திகைத்தார்.

தீபம் மட்டும் ஆலயத்தில் எரிந்து கொண்டு இருந்தது. பயந்து போய் வெளியில் ஓடி வந்தவர், அங்கும் யாரையும் காணாமல் திகைத்தார். நல்ல வேளையாக முதல் நாள் இரவில் தனக்கு பிரசாதம் கொடுத்தவரிடம் தனது நிலையை சுருக்கமாகக் கூறி திரும்பிச் செல்லும் வழியைக் கேட்டபோது அவருக்குச் செய்கை மூலம் மட்டுமே அவர் செல்ல வேண்டிய பாதையை காட்டினார். ஆகவே நன்கு விடிந்ததும், பூஜை செய்த அர்ச்சகர் கூறிய வழியில் செல்லத் துவங்கினார். ஆனால் தான் கண்ட அந்த ஆனந்தமான காட்சியையும், ஆலயத்தையும் குறித்து அனைவருக்கும் காட்ட வேண்டும் என நினைத்துச் சென்றார்.

திரும்பிப் போகும்போது பாதையை அடையாளம் காட்டும் விதமாக இருக்கட்டும் என மரக் கிளைகளை உடைத்து அதில் இருந்த பச்சை இலைகளுடன் கூடிய கிளைகளை பத்து அடிக்கு ஒன்றாகப்  பூமியில் பாதை நெடுங்கிலும் நட்டுக் கொண்டே சென்றார். அவர் சென்றுகொண்டிருந்த பாதை எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. நல்ல வேளையாக சில மணி நேரம் கழிந்த பின் கவலைக் கொண்டு அவரைத் தேடிக்கொண்டு இருந்த நண்பர்களைச் சந்திக்க நேரிட்டது.

அவர்களிடம் நடந்த அத்தனை விஷயத்தையும் கூற, இதைக் கேட்டவர்களும் வியந்து நின்றார்கள். அவர்களும் அந்த ஆலயத்தைக் காண விருப்பத்தைத் தெரிவிக்க அவர்களுக்கும் அந்த ஆலயத்தைக் காட்டுவதாகக் கூறிவிட்டு அவர்களை அழைத்துச் சென்றார். அவர் நெற்றியில் காணப்பட்ட சந்தனத்தின் மணமும், விபூதியும் அவர்களை அவர் கூறியதை  நம்ப வைத்தது. அனைவரும் மயில்வாகனார் நட்டு வைத்து இருந்த பச்சை மரக் கிளைகளை பின் தொடர்ந்து அந்த நல்ல பாதையிலேயே சென்றார்கள்.

ஆனால் அவர்களால் துரதிஷ்டவசமாக ஒரு அளவுக்கே செல்ல முடிந்தது. அதற்கு மேல் அவர் நட்டு வைத்திருந்த மரத்தின் கிளைகளைக் காணாமல் திகைத்தார்கள். அடர்ந்த வனமே சுற்றிலும் இருந்தது. எந்தப் பாதையும் காணப்படவில்லை. ஆனால் அதெப்படி அந்த இடத்துக்கு வந்தவரை நட்டு வைத்திருந்த மரக் கிளைகள் இருக்க அதற்கு மேல் மரக் கிளைகளைக் காண முடியவில்லை?

அங்கும் இங்கும் எத்தனை அலைந்தும் அவர்களால் அந்த அடர்ந்தக் காட்டு மத்தியில் இருந்த ஆலயத்தை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் சில இடங்களில் சாம்பிராணியின் மணமும், ஊதுபத்தியின் மணமும் மட்டும் எங்கிருந்தோ வந்து அவர்களின் மூக்கைத் துளைத்தது. அதுவும் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் திகைத்தார்கள். அடுத்தடுத்து சில நாட்கள் பலரும் அந்த அடர்ந்த காட்டில் வந்து கோணேஸ்வரர் இருந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றும் இன்றளவும் அந்த ஆலயம் இருந்த இடத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் பெரிதும் வியப்பான செய்தி. மயில்வாகனார் மட்டுமே அதிருஷ்டவசமாக அதைப் பார்த்து இருந்துள்ளார்.

சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி பண்டைய வரலாறு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஆலயம் ஒன்று திரிகோண மலையில் கடற்கரையின் அடிவாரத்தில் இருந்ததாகவும், பின்னர் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக அந்த ஆலயத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கி விட்டதாகவும் அதில் ஒரு பகுதியே மலைக் குகை போன்று மலையின் அடிப்பகுதியில், யாராலும் போக முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அதுவே பல்லவர்கள் கட்டியிருந்த குகை ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்றும் நம்புவதினால் தம்பலகமத்தில் மயில்வாஹனார் பார்த்ததாகக் கூறும் ஆலயம் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்த சிவன் ஆலயமாக இருந்திருக்க வேண்டும். அந்த ஆலயமே தற்போது மலையின் அடிவாரப் பகுதியில் எங்கோ குகைக்குள் உள்ளதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

ஆகவே அதுதான் கோணேஸ்வரரின் மூன்றாவதான ஆலயம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். திருகோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட பிறகு அங்கிருந்த சிலைகளை பக்தர்கள் ரகசியமாகச் சென்று ஒழித்து வைத்து பூஜைகளை செய்தவாறு இருந்தார்கள். சில காலம் கழித்து, அதாவது சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜசிங்கம் என்ற மன்னனின் கனவில் தோன்றிய கோணேஸ்வரர் தான் சுயம்புவாக எழுந்திருந்த சிலை ஒன்று கழனி மலையில் வழிபடப்பட்டு வருவதாகவும் அதை எடுத்து ஒரு ஆலயம் கட்டி வழிபடுமாறும் கட்டளை இட்டாராம்.

ஆகவே அந்த மன்னனும் கழனி மலைக்கு வந்து அங்கு ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த அழிக்கப்பட்டு இருந்த கோணேஸ்வரர் ஆலய சிலைகளைக் கண்டுபிடித்து தம்பலகமத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பி அதில் அவற்றைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இதுவே இன்றும் தம்பலகமத்தில் உள்ள இரண்டாவது கோணேஸ்வரர் ஆலயம் ஆகும்.

போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்திருந்தார்கள். அப்படி அவர்கள் இடிப்பதற்கு முன்னால் திருகோண மலைப்பகுதியில் மூன்று ஆலயங்கள் இருந்துள்ளன என்றும் அவற்றில் ஒன்று மாதுமை அம்பாள் எனப்படும் பார்வதி தேவியின் பிரும்மாண்டமான ஆலயமும் ஆகும்.

இந்த ஆலயத்துக்கு கீழ்ப் பகுதியில் சிவனாரை தரிசிக்க அவ்வப்போது அங்கு வந்த விஷ்ணுவிற்காக ஏற்பட்டிருந்த ஸ்ரீ நாராயணர் ஆலயம், மற்றும் மாதுமை அம்பாள் எனப்படும் பார்வதி தேவியுடன் கோணேஸ்வரர் வீற்றிருந்த ஆலயம் (அழிக்கப்பட்ட திருகோணேஸ்வரர் ஆலயம்) என மூன்றும் இருந்துள்ளது.

திருகோணேஸ்வரர் ஆலயத்தைச் சிதைத்த போர்த்துக்கீசியர்களினால் மற்ற இரண்டு ஆலயங்களையும் அழிக்க முடியவில்லை என்பதின் காரணம், அவை இருந்த இடங்களுக்கு அப்போது அவர்களால் எளிதில் செல்ல முடியவில்லை என்பதே. மேலும், அவற்றைக் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவும் இல்லை. மாதுமை அம்பாள் ஆலயத்தின் அருகில்தான் பாபநாச கிணறும் உள்ளது. இது என்றுமே வற்றாத கிணறாக இருந்து வருகிறது. 

1950-ல் அழிக்கப்பட்டிருந்த கோணேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் புனரமைக்க பக்தர்கள் ஏற்பாடு செய்தார்கள். அப்போது ஆலயத்தின் அருகில் இருந்த கிணறு ஒன்றை தோண்டிக் கொண்டு இருந்தபோது அங்குப் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சந்திரசேகரர் என்ற பெயருடன் இருந்திருந்த சிவபெருமான், மாதுமை அம்மன் எனும் பெயரில் பார்வதி, விநாயகர் போன்றவர்களின் சிலைகள் கிடைத்தனவாம். இவை இன்றுள்ள கோணேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்னர் 1944-ல் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போது விஷ்ணு மகாலட்ஷ்மி போன்றவர்களின் சிலைகளும் கிடைத்தனவாம். மேலும் சில சிலைகள் இன்னும் பல இடங்களில் கிடைத்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, 1952-ல் புதுப்பிக்கப்பட்ட திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ஆனால் ஆலயப் பணிகள் அனைத்தும் 1963-ல் முடிவடைந்தது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நல்ல முறையில் நடந்து முடிந்தன. முந்தைய ஆலயத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலயம் அதில் நான்கில் ஒரு பங்கு கூட இருக்காது. தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. வருடாந்திர விழாக்கள் சுமார் பதினெட்டு நாட்கள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் தல விருஷம் ஆல மரம் என்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஆலயத்தில் குளக்கோட்டான் பிரதிஷ்டை செய்திருந்த சிவலிங்கம் இன்னமும் கண்டெடுக்கப்படவில்லை என்பது கவலையான செய்தி.

சம்பந்தர் தேவாரம்
பண்: புறநீர்மை.

1. நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. 

சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமாலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

2. கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே. 

விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

3. பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. 

சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த சடைமுடியில் அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியைச் சிவபெருமான்ஒரு பாகமாக உடையவர். மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக் கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

4. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே. 

இறைவர் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின் வேகத்தைக் குறைத்து அதனைச் சடையில் தாங்கியவர். அழகிய மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தவர். பின் அவன் தேவி வேண்ட அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும் தெரியும்படி அருள்செய்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். தாமரை போன்ற திருவடிகளை உடையவர். ஆரவாரத்துடன், செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி இவற்றைத் திரளாக அலைகள் கரையிலே சேர்க்கத் திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

5. தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. 

தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர் அடியார்களின் வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல கோலங்களை உடையவர். தம்மை வழிபடும் தொழிலுடைய அடியவர்கள்பால் நோய், பிணி முதலியன தாக்காவண்ணம் காப்பவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். இவ்வுலகில், திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும் திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

6. பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத் திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார் விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே. 

பக்தி பெருகும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை, இறை வழிபாடு வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக் கொள்கைக்கு முரண்படாவண்ணம் உதைத்துப் பாலனுக்கு அருள் புரிந்த செம்மையான திறமுடையவர் சிவபெருமான். ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர். அப்பெருமான் விரிந்துயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

7. இப்பதிவு காணக்கிடைக்காது ஈசனருள் இலாது ஆக்கினான்.

8. எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே. 

கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவபெருமான். பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும் அறியாதவர். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர். உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையும், வாழ்வும் கொடுத்தவர். அத்தகைய பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

9. அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும் குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே. 

அருவருப்பு இல்லாமல் பிரமனின் வெண் தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில் துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியா வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து நின்றவர். திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சிக்க, ஒரு பூக் குறைய, அதற்காகத் தாமரை போன்ற தம் கண்ணையே இடந்து அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர். அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம் திருவடிகளை வணங்கும் வண்ணம் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

10. நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித் துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே. 

நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதவனவற்றைப் புறங்கூறுகின்றனர். சிவபெருமானோ நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமையுடையவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச் சோலை விளங்கக் கடலலைகள் கரையில் மோதுகின்றன. கடற்சோலைகளின் மணம்வீசும் திருக்கோணமலையில் சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றார்.

10. குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீர்காழி வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர். 

இத்துடன் கோணேஸ்வரர் திருக்கோயில் தொடர்  மகிழ்ந்து நிறைந்தது.

- கோவை.கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com