நிகரற்ற நவராத்திரி!

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவன் தேவிக்கு உகந்தது நவராத்திரி என்று சொல்லப்படுவது உண்டு.
நிகரற்ற நவராத்திரி!

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவன் தேவிக்கு உகந்தது நவராத்திரி என்று சொல்லப்படுவது உண்டு. இதில் நவராத்திரி என்பது வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி என இரு வகைப்படும். இவை முறையே பங்குனி மாதம் மற்றும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும். இதைத்தவிர ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி, மாசி மாதத்தில் மாக நவராத்திரி என மேலும் இரு வகை உண்டு. ஆனால் எல்லோராலும் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. 

தேவி அரக்கர்களான சும்பன், நிசும்பன் ஆகிய இருவரையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டிய விழா எனப்படும். நவ என்பதற்கு ஏற்ப ஒன்பது ராத்திரிகள் கொண்டாடுகின்றனர். பராசக்தி ஜகன்மாதா தான் ஒரே சக்தியாக இருந்து உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபமாக இருந்து ஒன்பது நாட்களுக்கு அருள் பாலிக்கின்றாள். இத்துடன், அம்பாள் அசுரனுடன் போரிட்டு, வெற்றி பெற்ற விஜய தசமி நாளையும் சேர்த்து 'தசராத்திரி' அல்லது 'தசரா' என வழங்கப்படுகின்றது பல புராண வரலாறு கதைகளும் இந்த நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகின்றது. உதாரணமாக, ஸ்ரீராமபிரான் நவராத்திரி விரதத்தை மேற்கொண்டு ராவணனை அழித்த நாள் விஜயதசமி எனக் கூறப்படுகின்றது. இந்த நவராத்திரி விழா பாரத தேசம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்த நவராத்திரி நாட்களில் வீடு கோயிலாகி விடுகின்றது. வெறும் கோயிலாக மட்டுமின்றி கொலு பொம்மைகளுடன் கூடிய கலைக் கோயிலாகவே ஆகி விடுகிறது. அதில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான ரசனை வெளிப்படுகிறது.

உதாரணமாக (i) சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் ஆற்காடு தெருவில் இலக்கம் 10 மீனாட்சி நிலையத்தில் ஸ்ரீ ஜஸ்வர்யா சாரீஸ் கடையின மேல் மாடியில் திருப்பதி வெங்கடாசலம் என்ற அன்பரின் இல்லத்தில் திருமாலின் தசாவதாரங்களை முன்படுத்தியும், கொடிமரத்துடன் கூடிய பெருமாள் ஆலய அமைப்பை ஏற்படுத்தியும், திருவிழாக்களின் மேன்மையை கூறும் விதமாகவும் இரண்டு அறைகளில் பக்திபரவசமூட்டும் கொலுவை அமைத்துள்ளார்கள். மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. மாலை நேரங்களில் தரிசிக்கலாம். 

(ii) அசோக்நகர் ஆறாவது அவென்யூவில் ஜி.ஆர்.டி பள்ளிக்கு எதிரில் கோகுல் பிளாட்ஸ் குடியிருப்புகளில் வெங்கடசுப்ரமண்யம் என்ற அன்பரது இல்லத்தில் கண்ணாடி அறை மண்டபத்தில் தாமரை மலரில் மேல் அமர்ந்த ஸ்ரீமகாலட்சுமியை பல எண்ணிக்கைகளில் தரிசிக்கலாம் என்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ள கொலுவைக் காணலாம். பாராட்டத்தக்கது.

கொலுவின் முன் அமர்ந்து பாடுவதால் இசையின் மகிமையை வெளிப்படுத்தப்படுகின்றது. அது மட்டுமா நமது அண்டை வீட்டில் வசிப்பவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் நம்வீட்டு கொலுவைக் காண்பதற்கு அழைப்பதன் மூலம் ஒற்றுமை துளிர்க்கின்றது. பகைமை உணர்ச்சிகள் மறைந்து விடுகின்றன. பரிசுகள் கொடுப்பதும், பெறுவதும் தழைக்கின்றது. இந்த பத்து நாட்கள் தேவிபாகவதம் படித்தல், பூஜைகள் மேற்கொள்ளுதல், செய்யும் தொழிலுக்கு மரியாதையளிக்கும் விதமாக ஆயுத பூஜை செய்தல் போன்ற செயல்களால் ஆன்மீக உணர்வு மேலோங்கி நிற்கின்றது. கொலுவில் காட்சியளிக்கும் பொம்மைகள் ஒரு உயிர்ப்புத் தன்மை பெற்று விட்டதுபோல் தோன்றும். மொத்தத்தில் அம்பாளின் மகிமை மட்டுமே சிந்திக்கப்படுகின்றது. எனவே நவராத்திரிக்கு நிகரான ஒரு திருநாளை காணமுடியாது என்று நாம் ஆணித்தரமாகக் கூறலாம்.

- எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com