குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் 11 நாள்கள் நடைபெற்று வந்த தசரா திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் 11 நாள்கள் நடைபெற்று வந்த தசரா திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.

இங்கு தசரா திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, அம்மனுக்கு காணிக்கை சேகரித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வீதிதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

விழா நாள்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. கோயில் கலையரங்கில் பரதம், பக்தி இன்னிசை, சமயச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், தசரா குழுக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை (அக். 19) நடைபெற்றது. சிறப்பு அலங்கார பூஜைகளுக்குப் பின்னர், அம்மன் நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் திரண்டிருந்த பல லட்சம் பக்தர்களிடையே சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, சேவல், எருமை, சிங்க உருவங்களிலும், பின்னர் தனது உருவத்திலும் வந்த மகிஷாசுரனை அம்மன் வதம் செய்தார்.
 திரண்டிருந்த பக்தர்கள் "தாயே முத்தாரம்மா, ஓம் காளி, ஜெய் காளி, ஓம் சக்தி முத்தாரம்மா' என விண்ணதிர முழக்கமிட்டனர்.

பின்னர், அதிகாலை ஒரு மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை, கோயில் கலையரங்களில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சனிக்கிழமை காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா சென்று மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தார். இதையடுத்து கொடியிறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து, தங்களது வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தி. பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சு. ரோஜாலி சுமதா, கோயில் செயல் அலுவலர் இரா. ராமசுப்பிரமணியன், பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com