கே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2018: (தனுசு முதல் மீனம் வரை)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி..
கே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2018: (தனுசு முதல் மீனம் வரை)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடைவோம்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். இருப்பினும் சில நேரங்களில் செலவுகளைத் தவிர்க்க முடியாது போகும். தனிப்பட்ட முறையிலும் கூட்டுத்தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும். தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச்சார்ந்து செய்துவந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். கவனமாக இருந்து போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். கொடுக்கல்வாங்கல் விஷயங்களில் கவனமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உடன்பிறந்தோருக்கும் சிறிது செலவு செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களைச் செய்ய வேண்டாம். பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிக வருமானத்தைப் பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணத்தைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம், மனவளம் ஓங்க யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உற்சாகத்துடன் செயல்படும் காலகட்டமிது.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சகஜ நிலைமை உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். சேமிப்பு கணிசமாக உயரும். செய்தொழிலில் நிலைமைகள் அனைத்தும் சாதகமாக அமையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வழங்குவீர்கள். சிறிய தூரப்பயணங்களைச் செய்ய நேரிடும். குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். மிடுக்கான தோற்றத்தால் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் புத்திசாலி என்று பெயரெடுப்பீர்கள். ஆழ்ந்து சிந்தித்து தெளிவாக முடிவெடுப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நிலைமை உண்டாகும். சிலருக்கு அரசாங்க வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பெற்றோர் வழியில் இருந்த உடலுபாதைகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். சமூகத்தில் உங்கள் பெயர் பிரபலமடையும். ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்து பிறருக்கு ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பேராதரவு கிட்டும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் வேலைகளைத் தாமாக முன்வந்து பகிர்ந்துக் கொள்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பீர்கள். பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும், கொள்முதலிலும் அதிக லாபங்களைக் காண்பீர்கள். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பி அடைப்பீர்கள். வயல் வரப்பு சண்டைகளில் சாதகமான தீர்வுகளைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிக்குச் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் தேடி வரும். ஏற்றுக் கொள்ளுங்கள். அதிதீவிர முயற்சியுடன் வேலைகளைத் தொடங்குங்கள். வழக்குகளில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கட்சிமேலிடத்தின் ஆதரவுடன் வெளிநாடு செல்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை பக்குவமாகச் சமாளிப்பது மிக அவசியம். மனதையும் உடலையும் நேர்த்தியாக பராமரிக்க பிராணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்யவும். 

பெண்மணிகள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற நல்லதொரு சந்தர்ப்பம் இது. உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாங்களாகவே அனைத்து செயல்களையும் செய்வது நல்லது. நன்றாகப் படித்து பெற்றோர் மற்றும் ஆசிரியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}


மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் அகன்று நன்மைகள் மேலோங்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் காண்பீர்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்ப்பீர்கள். துணிவுடன் செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள். நெருங்கிய உறவினர்கள் தேடிவந்து ஆதரவு கொடுப்பார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் நீங்கும். குடும்பத்தில் தடைபட்டிருந்த திருமணப் பேச்சு மறுபடியும் துளிர்விடும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். 

சுயமரியாதையை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். புதிய கடன் வாங்கி வீடு வாகனம் வாங்குவீர்கள். நெடுநாளாக செய்யாமல் விட்டிருந்த குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் தனித்து முடிவெடுக்காமல் அனைவரையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பீர்கள். பொருளாதாரம் வளர்ச்சியடையும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் தந்தை வழி உறவுகள் சீர்படும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். தொலைதூரச் செய்திகள் நற்செய்திகளாக வரும். எதிர்பாராத வகையில் குரு கடாட்சமும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடும் உண்டாகும். சமுதாயத்தில் பிரபலஸ்தர் என்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உடலுழைப்பிற்கு இரட்டிப்பு வருமானம் வரும்.
13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய நுணுக்கங்ளைக் கற்றுக்கொள்வீர்கள். அதை தகுந்த நேரத்தில் உபயோகித்து வெற்றி பெற ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டும் புகழும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவும். புதிய உறவுகளிடம் எச்சரிக்கையாகப் பழகவும். நண்பர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். புதிய வம்பு வழக்குகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளும் உதவிகரமாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.சிலர் விரும்பிய இடமாற்றங்களைக் காண்பீர்கள். விரும்பிய பதவி உயர்வும் தேடிவரும். பொருளாதார அபிவிருத்தியைக் காண்பீர்கள். 

வியாபாரிகள் சற்று பின்னடைவுகளைச் சந்திக்க நேரிட்டாலும் புதிய யுக்தியையும் முயற்சியையும் மேற்கொண்டு உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். அலைச்சல்கள் உண்டானாலும் உங்கள் மதிப்பு வியாபாரிகள் மத்தியில் நிறைவாகவே இருக்கும். விவசாயிகள் பயிர் விளைச்சலில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். சக விவசாயிகளின் மத்தியில் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். பழைய குத்தகை பாக்கிகள் திரும்பக் கிடைக்கும். பொருளாதார வசதிகள் மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். உங்கள் தைரியமும் ஆற்றலும் கூடும். எதையும் சமாளிப்பீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவீர்கள். கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதக தீர்ப்பைக் காண்பீர்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ற புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். பணவசதி சரளமாக இருக்கும். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 

பெண்மணிகளுக்கு புத்திசாலித்தனம் கூடும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் கௌரவத்தைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் பெற்றோர்களால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சீராகவே இருக்கும். எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டை மீறி போக வாய்ப்பில்லை. அனைத்து செயல்களிலும் முழு முயற்சியினால் வெற்றி பெறுவீர்கள். சில போராட்டங்களையும் சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கற்பனை பயத்திலிருந்து விடுபடுவீர்கள். 

செய்தொழிலில் வளர்ச்சியடைய கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தாமதப்பட்டிருந்த திருமணங்கள் துரிதமாக நடக்கும். சோதனைகளை பொறுமையுடன் இருந்து சாதனைகளாக மாற்றுவீர்கள். காரணமில்லாமல் உங்களை எதிர்த்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். உபரி வருமானத்திற்கான வாய்ப்புகளையும் தேடிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல்நலமும் மனவளமும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் செல்வாக்கு உயரும். வீடு மாற்றம் செய்ய நினைத்தவர்கள் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். செய்தொழிலில் இருந்த இடர்பாடுகள் நீங்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. அனைவரையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்களும் அதனால் வருமானமும் கிடைக்கும். மனதை அரித்துக் கொண்டிருந்த கவலைகள் மறைந்து தெளிந்த நீரோடைப் போல் மாறும். 

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத இடங்களிலிருந்து பொருள் வரவுக்கு இடமுண்டாகும். உடன்பிறந்தோர் நன்மை செய்வார்கள். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சாதனையாளர் என்று பெயர் பெறும் யோகம் உண்டாகும். பழைய விரோதிகள் நண்பர்களாக நேசக்கரம் நீட்டும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் மனந்திறந்து அனைத்தும் பேசவேண்டாம். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் வியாபாரத்திலேயே குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்து செயல்படுத்தவும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். 

விவசாயிகள் சுமாரான அபிவிருத்தியைக் காண்பார்கள். பயிர்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தி விவசாயத்தைப் பெருக்குவர். சிலர் கிணறுகளை ஆழப்படுத்துவது நல்லது.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணைப்பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்திருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. கலைத்துறையினர் தேவைக்கேற்ற வருமானத்தைக் காண்பார்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். புதிய சொத்துகள் வாங்கும்போது கவனம் தேவை. 

பெண்மணிகளுக்கு பிதுராஜித சொத்துகள் கைவந்து சேர இழுபறி ஆகும். பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். கணவருடனான அன்யோன்யம் சாதாரணமாகவே காணப்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்லும் நேரமிது. மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பிரியங்களுக்கு ஆளாவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெற, கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். விளையாட்டுகளிலும் கவனம் தேவை. 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் அகன்று சீராக நடக்கத் தொடங்கும். அலைந்து திரிந்து செய்த காரியங்கள் அனைத்தும் சுலபமாக நிறைவேறும். வருமானம் படிப்படியாக வளரும். வெளிநாடு சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். சேமிப்பு உயரத் தொடங்கும். 

அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கர்வத்தை விட்டொழித்து உழைத்தால் எதிர்பார்த்த பலனைப் பெறமுடியும். இதுவரை பாராமுகமாக நடந்துகொண்டிருந்தவர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் உங்களுடன் அனுசரித்து நடந்து கொள்வர். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் தைரியம் கூடும். வெளிவட்டாரத்தில் புகழ், பெருமை உண்டாகும். குழந்தைகள் வகையில் ஒற்றுமை, அனுகூலம் உண்டாகும். தெய்வ வழியில் சில முக்கிய பிரார்த்தனைகளை முடிக்க எடுக்கும் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். சமுதாயத்தில் முக்கிய புள்ளி என்கிற அந்தஸ்தையும் பெறுவீர்கள்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவும் நிலையில் இருப்பார்கள். தீயவர்களுடன் இருந்த நட்பை விலக்கி விடுவீர்கள். முயற்சிகளை சரியான வேகத்தில் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் தகர்த்தெறிவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தைப் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் சில கடினமான விஷயங்கள் முடிவுக்கு வரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு மாற்ற முயற்சிகள் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான சகல பொருள்களையும் வாங்கும் நேரமிது. தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தலைவலி கொடுத்துவந்த நண்பர்கள் தானாக விலகி விடுவார்கள். 
அனனவரையும் வசப்படுத்திக் கொள்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். பங்குவர்த்தகத் துறையில் ஈடுபட்டு லாபமீட்டுவீர்கள். அரசாங்கத்திலிருந்து ஏதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவார்கள். வேலைகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகநிலை உண்டாகும். சக ஊழியர்களுக்கு நீங்கள் ஒரு தலைவர் போல் காட்சியளிப்பீர்கள் என்றால் மிகையாகாது. பதவி உயர்வு கிடைக்கும். தொட்டவைகள் அனைத்தும் பொன்னாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சரியான நேரத்தில் கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கேட்ட இடத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். போட்டியற்ற சந்தைகளைக் காண்பீர்கள். அபரிமிதமான வியாபாரம் நடைபெறக்கூடிய காலகட்டமிது. 

விவசாயிகள் நூதன யுக்தியைப் புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவார்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்குமளவிற்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகளைத் திரும்பிச் செலுத்தி விடுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டுகள் வந்த வண்ணம் இருக்கும். கட்சித்தொண்டர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். கட்சியில் உயர் பதவிகள் தேடிவரும். பாராட்டு மழையில் நனைவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். சக கலைஞர்களின் உதவிகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் இருமடங்காகக் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு நினைத்தது நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெறும். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் மேம்படும். மாணவமணிகள் படிப்பில் திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவர். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com