உலக சேமிப்பு தினம்: உங்க பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கணுமா? புத பகவானை வணங்குங்க!

இன்று (30/10/2018) உலக சிக்கனம் மற்றும் சேமிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச சேமிப்பு..
உலக சேமிப்பு தினம்: உங்க பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கணுமா? புத பகவானை வணங்குங்க!

இன்று (30.10.2018) உலக சிக்கனம் மற்றும் சேமிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924-ல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் 'உலக சிக்கன தினம்" என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காகவும், சிக்கனத்தினம் சேமிப்பினது முக்கியத்துவத்தையும் குறிக்கின்றது.

நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் கூட கையில் கிடைக்கும் சொற்ப பணத்தையும் தேவையின்றிச் செலவழிக்க தற்போது ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எளிதாகச் செலவிட்டு வருகிறது. இன்றைய இளைய தலைமுறை. இதற்கு காரணம் சேமிப்புப் பழக்கம் குறித்து அறிந்து கொள்ளாததும், அதை பழக்கப்படுத்திக் கொள்ளாததும்தான்.

"சிறுதுளி பெருவெள்ளம்" என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும்  நம் குழந்தைகளின் மனம், சிறுசேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும்  மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்.

'இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு' என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாகத் திகழ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க  வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசரக் காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள  உதவும். மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த தொகைக்கு உத்தரவாதமும் எதிர்கால  வாழ்க்கைக்குப் பாதுகாப்பும் கிடைக்கும்.

சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது. சிக்கனமும், சேமிப்பும்  ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து  ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாகச் சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லாத் தொழில்களுக்கும் மூலதனம்.

தேசிய பொருளாதாரத்தைப் பொருத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையாக காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு  சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட  வாழ்க்கையிலும் சரி, குடும்ப மட்டத்திலும் சரி, தேசிய மட்டத்திலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.

சிக்கனமும் சேமிப்பும் குறித்து ஜோதிடம் கூறும் கருத்துக்கள்

ஒருவருடைய சேமிப்பை ஆராயும் முன் அவருடைய வருவாயை ஆராய்ந்து அறிதல் வேண்டும். ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாமிடம் என்பது குடும்பம், வாக்கு மற்றும் தனஸ்தானம் எனப்படுகிறது. இரண்டாமிடத்தின் தன்மையைக் கொண்டு ஒருவரின் வருவாய் வரும் விதத்தினையும் அதனை செலவு செய்யும் தன்மையையும் அறிய முடியும். மேலும் வருவாயை பொறுத்தே சிக்கனமும் சேமிக்கும் குணமும் அமைந்து விடுகிறது. ஜாதகத்தில் தனகாரகன் குரு, செல்வச் செழிப்பின் காரகர் சுக்கிரன், செலவழிக்கும் தன்மையை கூறும் சந்திரன் சேமிப்பின் காரகர் புதன் ஆகிய  கிரஹங்களின் பலத்தினை பொறுத்துத்தான் ஒருவரின் சேமிக்கும் தன்மை அமைகிறது என்றால் மிகையாகாது. 

ஒருவர் ஜாதகத்தில் ராஜ கிரஹங்களான சூரியன் மற்றும் சந்திரனின் நிலை பலமாக இருந்தாலே அவருக்கு அனைத்து யோகங்களும் அமைந்துவிடும். ஒரு ஜாதகர் எந்த ஒரு நன்மையை அடையவும் அவருடைய லக்னம் பலமாக இருக்க வேண்டும். லக்னத்தின் பலம் என்பது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு இல்லாமல் லக்னத்தில் இயற்கை சுபர்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய கிரஹங்களின் தொடர்பு பெற்று நிற்பது, அசுப கிரஹங்களின் தொடர்பற்று நிற்பது, லக்னத்திற்கு மற்றும் லக்னாதிபதிக்கு குரு பார்வை இருப்பது, லக்னாதிபதி திரிகோணஸ்தானங்களான  1,5,9 ஆகிய இடங்களில் நிற்பது ஆகியவை ஆகும்.

மேலும் ஜீவனஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனும் பத்தாமிடமும் ஒருவரின் தொழில் மற்றும் வருவாய் ஈட்டும் தன்மையை குறிக்கிறது. பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதியின் தன்மையை  கொண்டே ஜாதகர் சுய தொழில் செய்வாரா அல்லது அடுத்தவரிடம் வேலைக்குச் செல்வாரா? போன்ற விஷயங்களை அறிய முடியும்.

வருமானம் மற்றும் சேமிப்பிற்கான கிரஹ நிலைகள்:

அர்த்த  திரிகோணம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,6,10 ஆகிய வீடுகள் அர்த்த திரிகோணம் எனப்படுகிறது. அர்த்த திரிகோணாதிபதிகளின் பலமான தொடர்புகள் ஒருவருக்கு நிரந்தர தொழில் மற்றும் அதன்மூலம் வரும்  வருவாயை குறிக்கிறது.

பணபர கேந்திரம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2,5,8,11 ஆகிய வீடுகள் பணபர கேந்திரங்கள் எனப்படும். பணபர கேந்திரங்கள், அல்லது அதன் அதிபதிகள் ஸ்திர ராசிகளாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு திடீர்  திடீரென பணவரவு அடிக்கடி அமைந்துவிடுகிறது.

சிக்கனத்தின் காரகர் சனி

சிக்கனத்தின் காரகர் என்றாலே சனைச்சரன் எனும் சனி பகவான் முதன்மை காரகராகவும், புத பகவான் இரண்டாம் நிலை காரகராகவும் கூறலாம். மகர/கும்ப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள்  மற்றும், சனி பன்னிரெண்டில் உச்சமாகும் விருச்சிக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிக்கனவாதிகளாக இருப்பதை காண முடிகிறது.

சேமிப்பை தரும் புதன்

சேமிப்பின் காரகராக புதனைத்தான் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவம் பலமிழந்த நிலையில் புதன் மற்றும் குருவின் தொடர்பு சிறந்த வருமானம் மற்றும் சேமிப்பை தருகிறது. புதன் அசுப தொடர்புகள் பெற்ற நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. புதனோடு சுக்கிரனின் சேர்க்கை குறைந்த கால முதலீடு, புதனோடு குருவின் சேர்க்கை மத்திம கால முதலீடு மற்றும் புதனோடு சனியின் சேர்க்கை நீண்ட கால முதலீடு ஆகியவற்றை குறிக்கிறது.

தவறான சேமிப்பு மற்றும் முதலீடு

பலமிழந்த சூரியன், குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகியவை தவறான வழிகளில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் குறிக்கிறது. முக்கியமாக புதனோடு ராகு சேர்க்கை பெறும்போது சேமிப்பும் முதலீடும் தவறான பாதையில் சென்று நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவருக்கு 8 மற்றும் 11-ம் வீடுகள், அதன் அதிபதிகள் மற்றும் பலமிழந்த புதன் மற்றும்  குருவின் நிலைகள் ஜாதகர் எவ்வளவு சம்பதித்தாலும் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சுக்கிரனும் தேய்பிறை சந்திரனும்

ஒரு ஜாதகர் அதிக செலவாளியாக திகழ சுக்கிரன் முக்கிய காரகர் ஆகும். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் அநேக விஷயங்களை ஆடம்பரமாக அனுபவிக்க விரும்புவர். சுக்கிரனின் பலம்  வருமானத்தை குறித்தாலும் சுக்கிரன் தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு/கேது போன்ற அசுப கிரஹங்களோடு தொடர்பு கொள்ளும்போது சம்மாதித்த பணம் அனைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்ய  நேரும்.

சிக்கனமும் சேமிப்பும் பெற தெய்வ வழிபாடுகள்

1. சிக்கனம் மற்றும் சேமிப்பை ஒருவர் கடைப்பிடிக்க புதனின் அதிபதியான ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மியை வணங்குவது சிறந்த வழியாகும். மாலை வேளைகளில் கோதூளி லக்கின  காலத்தில் வீட்டில் விளக்கேற்றி, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம், ஸ்ரீ ஸூக்தம், ஸ்ரீ மஹாலஷ்மி அஷ்டகம் ஆகியவை பாராயணம் செய்வது வருமானத்தை பெருக்குவதோடு சிக்கனம் மற்றும் சேமிப்பையும் ஏற்படுத்தும். சந்திர சகோதரியான ஸ்ரீ மஹாலஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் வலம்புரி சங்கோடு வணங்கிவர லக்ஷ்மி கடாக்ஷ்ம் பெருகும்.

2. மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம(ஆமை) அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும். பொதுவாகவே விஷ்ணு புத கிரஹத்தின் அதிதேவதையாவார். கூர்மாவதார கோலத்தில் சனி மற்றும் புதனின் இணைவு பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் உறையும் மஹாலக்ஷ்மி சுக்கிரனின் அதிதேவதையாவார். மேலும் சனைஸ்வர பகவானுக்கு  புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் கூர்மாவதார தரிசனம் தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை போக்கி வியாபார அபிவிருத்தி மற்றும் செல்வ செழிப்பு ஏற்படும்.

3. அடுத்து வர இருக்கும் கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய சோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று  வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

4. செல்வ வளமும் சேமிப்பும் பெருக லக்ஷ்மி குபேர பூஜை தீபாவளி திருநாளில் செய்வது உகந்ததாகும். லக்ஷ்மி குபேர பூஜை என்பது அன்னை மகாலக்ஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். இந்த பூஜை ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோஷ வேளையிலும் கோதூளி லக்ன காலத்திலும் செய்யப்படுகிறது.  பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. சூரியன் துலா மாதத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சந்திரனை சந்திக்கும் அமாவாசை நாளில் லக்ஷ்மியை ஆராதனை  செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை,  வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லக்ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிப்பாடு செய்தால் பலன் கிடைக்கும்.

5. சோமவார பிரதோஷ நாளில் பிரதோஷ காலம் எனும் கோதூளி லக்ன காலத்தில் சந்திரனை தலையில் சூடிய நிலையில் காட்சி தரும் ரிஷபாரூட மூர்த்தியையும் சோமாஸ்கந்த மூர்த்தியையும்  தரிசிப்பது சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருளால் வாழ்வில் செல்வ செழிப்பு, சிக்கனம். சேமிப்பு, சந்தோஷம் மற்றும் மனநிம்மதியும் பெறமுடியும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com