பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. குடைவரை கோயில்களில் ஒன்றானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 
ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். இதனை கண்டுதரிசிக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்கு வருகை தருவர்.
இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா வேதமந்திரங்கள் முழங்க செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.10 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்தது. அதனுடன் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் கும்பம் வலம் வந்தது.
பின்னர் கொடிமரத்தில் வலமாக கொண்டுவரப்பட்ட வெண்பட்டு சுற்றப்பட்டு கொடி மரத்துக்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
இரவு ஒவ்வொரு நாளும் சிம்மம், மூஷிகம், கருடன், மயில், ரிஷபம், கமலம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். வரும் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கஜமுஹாசுர சம்ஹாரமும், 12 ஆம் தேதி திருத்தேரோட்டமும் அன்று மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவர் வருடத்துக்கு ஒருமுறை காட்சி தரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் தருவார்.
அதைத்தொடர்ந்து 10-ஆம் திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று காலை கோயில் திருக்குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவமும், நண்பகலில் முக்குருணி எனப்படும் மெகா கொழுக்கட்டைப் படையலும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும். 
விழாவில் தினமும் திருமுறை பாராயணமும், நாகஸ்வர இன்னிசையும் நடைபெற உள்ளது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகர் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு சுப.அருணாச்சலம் செட்டியார், அரிமளம் நா.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com