ஆனந்த வடிவே ஆனை முகனே!

கணபதி, கஜானன், ஆனைமுகத்தான், விநாயகர், என்றெல்லாம் நம்மால் போற்றித் துதிக்கப்படும்..
ஆனந்த வடிவே ஆனை முகனே!


கணபதி, கஜானன், ஆனைமுகத்தான், விநாயகர், என்றெல்லாம் நம்மால் போற்றித் துதிக்கப்படும் பிள்ளையாரின் வழிபாடு ஒரு சமயம் உலகம் முழுவதும் பரவியிருந்திருக்கிறது. திபெத்தியர்களால் ட்ஸோக்ப்டாக் என்றும், மங்கோலியாவில் தோத்கார் அவுங்காரகன் என்றும் கம்போடியாவில்  ப்ராஹ்கெனேஸ் என்றும், பர்மாவில் மகாபைனி என்றும் அழைக்கப்படும் இவர், ஜாவாதீவில் கபால மாலையணிந்து காணப்படுகிறார். இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.

விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு. 

விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இன்று பாரதத்தின் எல்லா இடங்களிலும் பரவலாகக் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி விழாவை விடுதலை வீரர்களில் ஒருவரான பால கங்காதரத் திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு எதிராக பாரத மக்களைத், திரட்டுவதற்காக ஒரு சமூக திருவிழாவாக 1900-களில் நடைமுறைப்படுத்தினார்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரைப் போற்றுவார்கள். விநாயகர் அவ்வளவு எளிமையானவர். "மஞ்சளிலே செய்யினும், மண்ணினிலே செய்யினும் அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும்பிள்ளையார" எனும் வரிகள் அவரின் எளிமையை விளக்குவதாகும். மஞ்சள், சாணம், புற்றுமண், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் என எதிலும் அவரை ஆவாஹனம் செய்து வணங்கலாம். பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராக வைத்து அருகம்புல் சாற்றிவிட்டால் ஓடி வந்துவிடுவார் நம் குறை தீர்க்க. எந்த ஒரு ஓவியராலும் ஓவியரல்லாதாரும் எளிதில் வரையக்கூடிய உருவம் நம் விநாயகரின் உருவம்தான். அவரை எப்படி வரைந்தாலும் பார்ப்பவர் கண்களைப் பொருத்து அழகாகக் காட்சியளிப்பார்.

பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கை நாயகன்  கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது ’கணேச புராணம்’.

கிருத யுகத்தில் மகாகடர் என்ற பெயருடன் காஷ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் தேஜஸ்வி என்ற பெயரில் மகனாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். திரேதா யுகத்தில் பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம் பெற்றார். துவாபர யுகத்தில் கஜானனன் என்ற திருநாமத்துடன் பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவுக்கு மகனாகப் பிறந்தார். கலியுகத்தில் ஈஸ்வரனுக்கும் பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது.

ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘‘சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்கிரக வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

அவருடைய திருவுருவம் பார்ப்பவர் எல்லோரையும் பரவசப்படுத்துவதாகும். ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகர், யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக விளங்குபவர். விநாயகரை முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 

ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன. பெருமானின் பெருவயிறு, ஆகாசம் உட்பட எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது. அவரது ஐந்துகரங்கள் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. எனவே, இவா் ருத்ரா் ஆகிறார். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார். அவரது துதிக்கையோ எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்கிறது. அகங்காரத்தின் வடிவான மூஞ்சூறு இவருக்கு அடங்கி அவரது வாகனமாக இருக்கிறது.

அவர் மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது, உலக நன்மைக்காகத் தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பதைத் தெரிவிக்கிறது. அவரது பெரிய முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

விநாயகர் என்ற சொல்லுக்கு “வி” – இல்லாமை. “நாயகன்” – தலைவன். விநாயகர் – மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள்.

ஓம் அநீஸ்வராய நம: என்னும் மந்திரத்திற்கு – தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கனேச பஞ்சரத்னத்துள் “அநாயகைக நாயகம்” என்று கணபதியை போற்றுகின்றார்.

கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தைக் குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.

கணபதி திருவருவை வலது காது முதல் தொடங்கி தலையைச் சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு கழித்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் புலப்படும்.

அவருக்கு போடும் தோப்புகரணம் என்பது குண்டலினி யோகத்தின் ஒரு அங்கமாகும். தலையில் குட்டிக் கொள்வது நினைவாற்றலை மேம்படுத்துவதாகும். “கம்”மென்று இரு – காரியம் ஆகும் என்பது உலக வழக்கில் உள்ள ஒரு பழமொழி. இதற்கு சும்மா இரு என்பது பொருளன்று. “கம்” என்பது கணபதியின் மூல மந்திரமாகும் கணபதியைப் பற்றிக்கொள் – காரியம் கைகூடும் என்பதே இதன் பொருள்.

தமிழ் நாட்டின் எல்லா ஊர்களிலும் எந்தக் கோயில் இல்லாவிட்டாலும் ஒரு பிள்ளையார் கோயிலாவது இருக்கும். கோயில் என்றால் பெரிய கட்டிடமும் விமானமும் இருக்க வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.

முருகனைப் போலவே இவருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. அவை; 

1, திருவண்ணாமலை – நுழைவு வாயில் வடக்கு பார்த்த வினைதீர்க்கும் விநாயகர். 

2, விருத்தாசலம் – கோயில் நுழைவு வாயில் ஆழத்து பிள்ளையார். 

3, திருக்கடவூர் – கள்ளவாரண பிள்ளையார். 

4, மதுரை மீனாட்சி – சன்னதி நுழைவு மண்டப சித்தி விநாயகர். 

5, காசி – துண்டி விநாயகர். 

6, திருநாரையூர் – பொல்லாப்பிள்ளையார்

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது. திருமாலின் உறைவிடம் பாற்கடல் கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல். சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோம கணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.  ஆனைமுகன் உறைவிடம் கயிலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவன் ஆகும். சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரைத் துளசியால் பூஜிக்கலாம். உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதையாக இவர் விளங்குகிறார். மனிதமுக விநாயகரை {ஆதி விநாயகர்} நிலதர்ப்பணபுரியில் காணலாம். 

ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி கழித்து நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்களும் நிவர்த்தியாகும். மாசி,ஆவணி மாதத்தில் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய் கிழமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும். ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், விநாயக சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடும் மிக மிக முக்கியமானது. 

பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்தச் சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார் என்கிறது புராணம். ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.  இவருடைய பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்யும் பேறு பெற்றவர். தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.  சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றான் என்பது புராண வரலாறு.

வரும் செப்டம்பர் 13.09.2018 அன்று விநாயக சதுர்த்தி. மூவுலக முதல்வனின் பிறந்தநாள். அன்று நாமும் அவரை வழிபட்டு, இன்னல்கள் நீங்கி ஆனந்த வாழ்வு பெறுவோம்.

- ரஞ்ஜனா பாலசுப்பிரமணியன் - 9444016789

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com