மறந்ததை மஹாளயத்தில் செய்!

தமிழ் புரட்டாசி மாதத்துப் பௌர்ணமியிலிருந்து ஐப்பசி மாதத்து அமாவாசை...
மறந்ததை மஹாளயத்தில் செய்!

தமிழ் புரட்டாசி மாதத்துப் பௌர்ணமியிலிருந்து ஐப்பசி மாதத்து அமாவாசை வரை வரும் 15 நாட்களை (ஒரு பக்க்ஷம்) மஹாளய பக்க்ஷம் என்பர்.

முதலில் சிராத்தம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்த்தால் சிரத்தையோடு நம் பித்ருக்களை (முன்னோர்களை) நினைவு கூறும் நாள் என்ற விடை கிடைக்கிறது. ஒரு இல்லறவாசியானவன் ஒரு வருடத்தில் 15 நாட்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டுமென யாக்யவல்கியர் வழிவகுத்துத் தந்துள்ளார். அவையாவன: 

1) அமாவாசை; 2) மார்கழி, தை, மாசி, பங்குனி மாதத்து கிருஷ்ண பக்க்ஷ சப்தமி, அஷ்டமி, நவமி திதிகள்; 3) கிருஷ்ண பக்க்ஷம்; 4) உத்திராயனம், தக்ஷிணாயனம்; 5) நம் வீட்டில் நடக்கவிருக்கும் சுப காரியங்களை முன்னிட்டு செய்யப்படும் நாந்தி  

6) உணவுப் பொருட்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் விளைந்து அறுவடையாகும் காலம் 7) அறிவுசார் வேதம் கற்ற பெரியோர் நம் வீட்டிற்கு வரும் சமயம் 8) சூர்ய சங்கராந்தி 9) ஞாயிறுடன் இணைந்து வரும் அமாவாசை 10) சூரியன் ஹஸ்த நட்க்ஷத்திரத்திலும், சந்திரன் மக நட்க்ஷத்திரத்திலும் வரும் த்ரயோதசி திதி (போதாயனர் அனுஷ்டானம்)

11) மேஷ - துலா சங்க்ரமணங்கள் 12) சந்திர, சூர்ய கிரஹணங்கள் மற்றும் 13) நம் மனதிற்குள் சிராத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றினால், அதற்குப் பெயர் பக்தி சிராத்தம் எனப்படும்.

இது தவிர, தாய் தந்தையாரின் இறந்த நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் செய்யவேண்டும். இதனை ப்ரத்யாத்பிக சிராத்தம் என்பர். இப்படி 13+2 மொத்தம் நம் பித்ருக்களுக்கு 15 சிராத்தம் செய்யவேண்டும் என மனு மற்றும் பிரும்மாண்ட புராணம் கூறுகின்றது. இப்படிச் சொல்வதுபோல் எவனொருவன் செய்கிறானோ கண்டிப்பாக அவன் பாக்யவான், அவனுக்கு ஸ்ரேயஸ் நிச்சயம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் இது நடக்குமா? அவனவன் அமாவாசை தர்ப்பணமாவது ஒழுங்காக செய்தால் போதும் என்ற நிலை. 

இனி மஹாளயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? கஜச்சாயை யோகம் என்பது புரட்டாசி மாதத்துக் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிறது. இதுவே பித்ரு பக்ஷம், மஹாளயம் என அழைக்கப்படுகிறது. அதற்கு மனுஸ்ம்ருதி, தைத்ய ப்ராம்மணம் ஆகியவற்றில் புரட்டாசி மாதத்து கிருஷ்ண பக்ஷத்தில் வருகிற மக நட்சத்திரத்தில் பித்ருக்களை அழைக்கும் விதி கூறப்பட்டுள்ளது. இது கஜச்சாயையில் கூடும் மக நட்சத்திரத்தையே குறிக்கிறது. இந்த நாட்களில் சிராத்தம் செய்தால் பல முறை சிராத்தம் செய்த பலன் கிடைக்கும் என கூறுவதால் அவ்வளவு விசேஷம் இந்த மஹாளயத்திற்கு. இதைத்தான் நம் சனாதன தர்மம் "மறந்ததை மஹாளயத்தில் செய்" என்று கூறுகிறது.

இந்த வருடம் வருகிற 25.9.2018 செவ்வாய்க்கிழமை ப்ரதமையில் ஆரம்பித்து 8.10.2018 திங்கட்கிழமை வரை இந்த மஹாளய பக்ஷம் வருகிறது. இந்த நாட்களில் இந்துக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திலோ; அருகிலுள்ள நீர்நிலைகளிலோ தங்கள் பிதுர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களின் ஆசியினால் நம் குடும்பத்தில் நமக்குத்தெரியாமல் நடந்துவரும் வினைகள் பனி போல் விலகும் என்பது சத்தியம்.

வருடம் ஒருமுறை நம் தந்தைக்கு செய்யும் சிராத்தத்தை காட்டிலும் மஹாளய சிராத்தத்திற்கு ஒரு விசேஷம் என்னவென்றால், வருட சிராத்தத்தில் நம் தந்தை, பாட்டன், முப்பாட்டனார் இவர்களுக்கு மட்டும் தான் திதி கொடுப்போம்; ஆனால், மஹாளயத்தில் இவர்களுடன் சேர்த்து; நெருங்கிய அனைத்து பிதுர்களுக்கும் பிண்ட தானம் செய்யப்படுவதால், மஹாளய சிராத்தம் சால சிறந்தது. மஹாளய சிராத்தம் நாம் செய்வதால் நம் குடும்பத்தில் காரணமே தெரியாமல் உள்ள தடங்கல்கள் நீங்கி வளர்ச்சிக்கு வழி செய்து, நற்பேற்றினை அடையச் செய்யும்.

- S S சீதாராமன் (94441 51068)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com