திருமலையில் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது
பிரம்மோற்சவ நிறைவு நாளில் தீர்த்தவாரியைக் காண திருக்குளத்தில் திரண்டிருந்த பக்தர்கள். (உள்படம்) சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.
பிரம்மோற்சவ நிறைவு நாளில் தீர்த்தவாரியைக் காண திருக்குளத்தில் திரண்டிருந்த பக்தர்கள். (உள்படம்) சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.


திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. 
பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி மாலை கொடியேற்றதுடன் தொடங்கியது. விமரிசையாக நடைபெற்று வந்த இந்த உற்சவம் வெள்ளிக்கிழமை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. அதற்காக ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமி உற்சவமூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஏழுமலையான் கோயிலிலிருந்து திருக்குளக்கரைக்கு தங்கப் பல்லக்கில் கொண்டு செல்லப்பட்டனர். 
அங்கு அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வார் சிலையை அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு திருக்குளத்திற்கு சென்று தீர்த்தவாரி நடத்தினர். சக்கர ஸ்நானம் எனப்படும் இந்த நிகழ்வின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். அதன் பின் உற்சவமூர்த்திகள் ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தார். இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருடக் கொடியை அர்ச்சகர்கள் இறக்கினர். இந்த நிகழ்ச்சியில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com