அவதாரம்! குறுந்தொடர்: 3

தன் தந்தையிடம் தமிழ், வடமொழி ஆகிய உபய வேதங்களை கற்ற பிறகு, தத்துவங்களை
அவதாரம்! குறுந்தொடர்: 3


தன் தந்தையிடம் தமிழ், வடமொழி ஆகிய உபய வேதங்களை கற்ற பிறகு, தத்துவங்களை உணர்ந்து சிறக்க காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் ஊரில் அப்போது கல்வி கேள்விகளில் புகழ்பெற்று, ஆசிரியராக விளங்கிய யாதவ பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார்.

தொடக்கத்தில் இளையாழ்வாரின் தோற்றமும் அறிவும் இன்மொழியும் யாதவப் பிரகாசரை மிகவும் கவர்ந்தது. அவரிடம் கல்வி கற்கும்போதே தனது 16 ஆவது வயதில் தஞ்சமாம்பாள் என்பவளைத் திருமணம் செய்து கொண்டு இல்லறத்திலும் ஈடுபட்டார்.

ஒருமுறை தன் குருவிற்கு இளையாழ்வார் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் அங்கு வந்து சில உபநிடத வாக்கியங்களுக்கு பொருள் கேட்க அவரும் சொல்லி கொண்டிருந்தார். அப்போது யாதவ பிரகாசர் கண்களை மூடிக் கொண்டு இறைவனின் கண்களை ஒப்பிட்டுச் சொல்லும் போது கபி என்றால் குரங்கு, ஆசம் என்றால் அதன் பின்பாகம் எனப்பொருள் கொண்டு குரங்கின் பின்பாகத்தை ஒத்த சிவந்த தாமரை புஷ்பங்களைப் போன்ற கண்களை உடையவன் இறைவன் என பொருள் கூறினார்.

அப்போது யாதவபிரகாசரின் தொடை மீது இரு சொட்டு சூடான நீர்த்துளிகள் விழுந்தன. கண் திறந்து பார்த்த யாதவப்பிரகாசர், அந்த நீர்த்துளிகள் இளையாழ்வாரின் கண்ணிலிருந்து ஆசிரியர் மீது விழுந்தது என்பதை அறிந்து திகைத்துக் காரணம் கேட்டார்.

ஒரு பொருளுக்கு உதாரணம் எடுத்து காட்டும்போது உயர்ந்த பொருளையே காட்ட வேண்டும். தாழ்ந்தவற்றைக் காட்டக்கூடாது என்று கூறினார். சீடனின் சந்தேகத்தை விளக்க குரங்கின் பின்பாகம் எனப்பொருள் கொண்டது தவறு. சூரிய மண்டலத்துள் உறையும் இறைவனின் கண் அக்கதிரவனால் அலையப்படும் நீரிலே இருக்கக் கூடிய தாமரை போன்றவை என பொருள் வரும் எனத்தெரிவித்தார். யாதவருக்கு அழகிய பொருள் பொதிந்த இக்கருத்து சரியானதாக இருந்தாலும் ஏற்க மனம் வரவில்லை. மாறாக சினம் பொங்கக் கடிந்தார்.

மற்றொரு முறை தைத்திரிய உபநிஷத்தில் ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம என்ற முக்கியமான வாக்கியத்துக்கு, அதிலுள்ள சொற்கள் அனைத்தும் பிரம்மம் ஒன்றையே பொருளாகக் கொண்டவை என்றார் யாதவர். அதைக்கேட்ட ராமானுஜர், அதனைச் சிறிது மாற்றி அச்சொற்கள் பிரம்மத்தின் ஸ்வரூப இயல்பான குணங்களைச் சொல்வன என்று வாதிட்டார்.

ஒரு மலருக்கு, செம்மை, மென்மை, மணம் வடிவழகு, நிறை போன்ற பல குணங்கள் இருக்கலாம். குணங்களின் இந்த பல அம்சங்கள் அந்த அதே மலரின் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது இல்லை.

அதுபோல் பல்வேறு பண்புகளுடைய பிரம்மம் ஒன்றே என்பதில் சந்தேகமில்லை என்பது இளையாழ்வாரின் விளக்கம். ராமானுஜரின் அறிவுக் கூர்மை, ரசிப்புத்தன்மை, நாவன்மை யாதவரின் மனத்தில் தான் புறந்தள்ளப்பட்டு விடுவோமோ என சந்தேகத்தை எழுப்பியது. கி.பி 1036 ஆம் ஆண்டில் காசி யாத்திரை என்று பெயரிட்டு, அழைத்துச்சென்று புனித கங்கையில் அறிவுச்சுடர் ராமானுஜரை அழுத்திக் கொல்ல வேண்டும் என்று யாதவர் சதித்திட்டம் தீட்டி இறை அருளால் அந்தச் சூழலில் இருந்து தப்பி காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

தன் அருமைப் புதல்வன் உயிர் மீண்டதில் ஆறுதல் பெற்ற காந்திமதி, ஸ்ரீ வரதராஜன் சந்நிதியில் பணியில் ஈடுபட்டிருந்த திருக்கச்சி நம்பியை அழைத்து வந்து, அவரிடம் ராமானுஜரை காத்தருளும்படி ஒப்படைத்தாள். திருக்கச்சி நம்பி காஞ்சி வரதராஜனிடம் அளவற்ற அன்புடன் அவருக்கு ஆலவட்ட (விசிறி) கைங்கர்யம் செய்து வந்தார். இறைவனோடு நேரில் பேசுபவர். திருக்கச்சி நம்பியின் தொடர்பால் ராமானுஜர் பகவத் கைங்கர்யச் சுவையைக் கண்டார். கி.பி 1037 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்திலிருந்து அருளாளனைத் தரிசிக்க நாதமுனிகளின் பேரனும், ஸ்ரீ வைஷ்ணவ உலகின் பரமாசார்யராக விளங்கியவருமான யாமுனமுனி என்னும் ஆளவந்தார் காஞ்சிக்கு எழுந்தருளினார். காஞ்சி திரும்பிய இளையாழ்வார், தன் வாழ்வை செப்பனிட வேண்டிய கல்வியை அறிய விரும்பினார். பெருமாளுடன் பேசும் அருள்பெற்ற திருக்கச்சி நம்பியிடம் தாம் கேட்டுத் தெளிய வேண்டிய ஆறு விஷயங்கள் உள்ளன என்று ராமானுஜர் கூறினார். அவை குறித்து அருளாளன் விளக்கத்தைக் கேட்டுத் தமக்குத் தெரிவிக்க திருக்கச்சி நம்பியை வேண்டினார். மறுநாள் ராமானுஜரிடம் திருக்கச்சி நம்பி, ராமானுஜர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கொள்கைகளாக அருளாளன் கூறிய இவற்றை வெளியிட்டார்.

1. அஹமேவ பரம் தத்வம்: நானே அருளாளன் எனப்படும் (திருமாலே) முழு முதற்கடவுள்.

2. தர்சனம் பேதயேவச: ஜீவாத்மாக்களினின்று பரமாத்மா வேறுபட்டவன்.

3. உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத்: இறைவனை அடையும் முக்திநெறி முழு சரணாகதியே.

4. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்: இறைவனடி சேர்ந்தார்க்கு மரணம் பற்றிய அச்சம் தேவையில்லை.

5. சரீர அவஸôதே முக்தி: உடல் சாய்ந்த பிறகே மனிதருக்கு முக்தி.

6. மஹாபூர்ண ஸமாச்ரயணம்: மகாபூர்ணர் என்னும் பெரிய நம்பியை ஆசார்யராகப் பின் பற்றுக.


என்ற இந்த ஆறு வார்த்தைகளும் இறைவன் கற்றுக் கொடுத்த பாடங்களாகி ராமானுஜரின் கொள்கைகளையும் வாழ்க்கை நெறிகளையும் முறைப்படுத்தி விட்டன. இந்தக் கொள்கைகளே பாரத தேசம் முழுவதும் கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப உருக்கொண்ட ஸ்ரீவைணவமாகும்.

குருகுலவாசம் அவருக்கு பாடங்களை மட்டும் போதிக்கவில்லை. மக்கள் உய்ய வழிகாட்டியது.

- இரா. இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com