அவதாரம்! குறுந்தொடர் 6

ராமானுஜரைப் பிரிந்து தமது சீடர்களுடன் காசிக்குச் சென்ற யாதவப் பிரகாசர் கங்கையில்
அவதாரம்! குறுந்தொடர் 6


ராமானுஜரைப் பிரிந்து தமது சீடர்களுடன் காசிக்குச் சென்ற யாதவப் பிரகாசர் கங்கையில் நீராடிக்கொண்டு இருந்தபோது மந்திர சித்து வேலைகள் மூலம் கங்கையில் நீராடிய     கோவிந்தபட்டர் கையில், தீர்த்தத்தோடு ஒரு லிங்கம் வரும்படி செய்தார். கையில் சிவலிங்கத்தைக்கண்ட கோவிந்த பட்டர் ஆசானிடம் காட்டினார். யாதவரும் கங்கையில் நீராடின பலன் உனக்கு கைமேல் கிடைத்தது. நீ இனிமேல் இவரைத் தான் தினமும் பூஜித்துவர வேண்டும். இன்று முதல் உனக்கு "உள்ளங்கை கொணர்ந்த நாயனார்' என்கிற பெயர் வழங்கும் என வாழ்த்தினார். குரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கோவிந்த பட்டரெனும் ஸ்ரீ வைணவ மாணவனும் அவர் சுட்டிய வழியில் தினமும் சிவலிங்கத்தை பூசை செய்யத் துவங்கினார்.

சில நாள்களில் காசியிலிருந்து விட்டு கச்சிக்குத் திரும்பிவரும் கோவிந்த பட்டரான உள்ளங்கை கொணர்ந்த நாயனார், யாதவப் பிரகாசர் அனுமதியோடு தமது ஊரான மதுரமங்கலம் சென்று லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். பின்னர், அவர் கனவில் காளஹஸ்திநாதன் தோன்றி கூறியபடி, காளஹஸ்திக்குச் சென்று சிவபூஜை செய்யத் துவங்கினார்.

காசியாத்திரை சென்ற மகன் இளையாழ்வார் தனியாக வீடு திரும்பியது கண்டு அன்னை காந்திமதி நடந்தவை கேட்டறிந்தாள். ஸ்ரீ வரதராஜன் சந்நிதியில் பணியில் ஈடுபட்டிருந்த திருக்கச்சி நம்பியை அழைத்து வந்து, அவரிடம் ராமானுஜரை காத்தருளும்படி ஒப்படைத்தாள். யாதவரின் சதிச்செயல் குறித்து ராமானுஜர் யாரிடமும் வெளியிடவில்லை. பூவிருந்தவல்லியில் பிறந்த வைசியர் திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் சீடர். காஞ்சி அருளாளனிடம் அளவற்ற அன்புள்ளவர் அவருக்கு ஆலவட்டம் வீசும் (விசிறி) கைங்கர்யம் செய்து வந்தார். இறைவனோடு எப்போதும் தனித்து நெருங்கியிருப்பதால் அந்தரங்கத்தில் அருளாளனுடன் அளவளாவும் தகுதி உள்ளவர். பலரும் வரதனோடு பேசுபவர் என்று உணர்ந்து அவரை மதித்துப் போற்றினர்.

திருக்கச்சி நம்பியின் தொடர்பால் ராமானுஜர் பகவத் கைங்கர்யச் சுவையைக் கண்டார். குரு யாதவப் பிரகாசரை விஞ்சிய ஞானமுடையவர் ராமானுஜர் எனும் புகழ் எங்கும் பரவியிருந்தது. பூவிருந்தவல்லியை அடுத்த பேட்டை என்று அழைக்கப்படும் பச்சை வாரணப் பெருமாள் கோயில் தலத்தில் ராமானுஜரின் சகோதரிக்கு, தாசரதி என்ற ஒரு மைந்தர் இருந்தார். காஞ்சிக்கு அருகில் கூரம் என்னும் ஊரில் செல்வச் சீமானாய் வாழ்ந்து வந்த ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் கூரத்தாழ்வானும் ராமானுஜரின் சீடர்களானார்கள். 

கி.பி. 1037 -ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்திலிருந்து அருளாளனைத் தரிசிக்க நாத முனிகளின் பேரனும், ஸ்ரீ வைணவ உலகின் பரமாசார்யராக விளங்கியவருமான யாமுனமுனி என்னும் ஆளவந்தார் காஞ்சிக்கு வந்தார். அவர் ராமானுஜரைப் பற்றி கச்சி நம்பியிடம் கேட்டறிந்து ராமானுஜரை நேரில் காணவும் ஆவல் கொண்டார். கோயிலில் யாதவப் பிரகாசர் தம் சீடர்களோடு வரதனை தரிசனம் செய்து வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருக்கச்சி நம்பி, ஆளவந்தாரிடம் ராமானுஜரைச் சுட்டிக்காட்டினார்.

ஆளவந்தாரும் ராமானுஜரைக் கண்டு உளம் உவக்க வாழ்த்தி வைணவத்தின் எதிர்காலத்தில் நம் தரிசன நிர்வாகத்துக்கு இவரே ஏற்றவர் என அறுதியிட்டு, கச்சி நம்பியிடம் விடை கொண்டு ஸ்ரீரங்கம் விரைந்தார்.

கி.பி. 1038 -ஆம் ஆண்டு காஞ்சியில் அந்நாட்டு அரசனின் பிள்ளையை ஒரு பிரம்ம ராட்சதன் பிடித்து தொல்லை கொடுத்து வந்தது. யாதவப் பிரகாசரை அழைத்து வரும்படி ஆளனுப்பினான் அரசன். அதற்கு யாதவப் பிரகாசர், "அந்தப் பேயை நாம் போகும்படிச் சொன்னதாகச் சொல்லுங்கள், போய்விடும்'' என்று சொன்னார். அவ்வாறு சொன்னதற்கு அந்தப்பேய், "அந்த யாதவப் பிரகாசனை நான் போகும்படிச் சொன்னதாகச் சொல்லுங்கள்'' என்றது. இதைக் கேட்ட யாதவப் பிரகாசர். தம் சீடர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். மந்திர ஜபங்களைச் செய்ய பேய், "உனது மந்திர ஜபங்களுக்கு நான் பயப்பட மாட்டேன். உன்னுடைய பூர்வ ஜன்மம் தெரிந்த நான் நீ போகச்சொன்னால் போகமாட்டேன்'' என்றது. இதைக் கேட்ட யாதவப் பிரகாசர், "என் முற்பிறவி என்ன? நீ யார்? யார் போகச் சொன்னால் நீ போவாய்?'' என்று கேட்டார்.

"முற்பிறப்பில் மதுராந்தகம் ஏரியில் நீ ஒரு புதரில் ஓர் உடும்பாய் இருந்தாய். சில ஸ்ரீ வைணவர்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து திருமலைக்கு யாத்திரை செல்லும் வழியில் நீராடி திருமாலை வழிபட்டு பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை உண்ணும்போது  கீழே சிதறிய புனிதமான அன்னத்தை நீ நாவால் நக்கினாய். அதனால் உனக்கு இப்பிறவியில் இந்த ஜன்மமும் நல்லறிவும் உண்டாயிற்று''என்றது. மேலும், "நான் சென்ற பிறவியில் அந்தணன். வேத வேதாந்தங்களை நன்கு கற்றுணர்ந்தவன். நான் யாகம் செய்தேன். ஆனாலும் அதில் ஏற்பட்ட தவறால் பேயாகப் பிறந்து உழல்கிறேன். நீ போகச் சொல்லி போகமுடியாது. உன் பக்கத்திலிருக்கும் ராமானுஜன் சொன்னால் போய் விடுகின்றேன். அவரால் எனக்கு நற்கதியும் கிடைக்கும்'' என்று சொல்லி ராமானுஜரை வணங்கியது.   

அரசனும் யாதவப் பிரகாசரும் ராமானுஜரிடம் சொல்ல, சிறிதும் தாமதியாமல் "பேயே நீ சொல்லியது உண்மையானால் மன்னன் மகனை விட்டுச் சென்றுவிடு. நீ செல்வதற்கடையாளமாக அருகிலுள்ள ஒரு மரத்தை முறித்துத் தள்ளிவிட்டுச் செல்'' என்று கட்டளையிட்டார். பேயும் அந்த மன்னனின் மகவை விடுத்து அருகிலுள்ள மரத்தை முறித்து விட்டு மறைந்து விட்டது. இதைக் கண்ட அரசனும் அருகிலிருந்தவர்களும் ராமானுஜரின் மகத்துவத்தை எண்ணி போற்றிப் புகழ்ந்தனர்.  

வயது முதிர்வாலும், மனச்சோர்வாலும் வாழ்வில் நம்பிக்கை குன்றி நிராசையுடன் இருந்த யாதவப் பிரகாசர் திருக்கச்சி நம்பியிடம் சென்று தன் மனக்கவலையைக் கூற, மறுநாள் அருளாளன் வாக்காக திருக்கச்சி நம்பி, "யாதவப் பிரகாசரே! நம் எல்லோருக்கும் உள்ள ஒரே கதி இனி யதிராஜர் தான்'' என்றார்.

விடை தெரிந்த யாதவப் பிரகாசர் அங்கிருந்து கிளம்பி நேரே யதிராஜர் மடத்துக்குச் சென்றார். யாதவப் பிரகாசரை யதிராஜர், மிக்க மரியாதை அளித்து வரவேற்றார். தத்துவ விசாரப் பேச்சுக்களின் முடிவில் தெளிவடைந்த யாதவப் பிரகாசர், யதிராஜர் திருவடிகளில் விழுந்து தன்னை ஆட்கொள்ள வேண்டினார். யதிராஜர் பஞ்ச சமஸ்காரத்துடன் பாகவத சந்நியாசம் தந்தார். சுமார் எண்பதாவது வயதில் கோவிந்த ஜீயர் என்ற துறவுப் பெயர் பூண்ட அவர், "யதிதர்ம சமுச்சயம்' என்ற துறவு பற்றிய நூல் ஒன்றையும் இயற்றினார்.

"குருவாய் இருந்தவரே, உய்ய ஒரே வழி உடையவர் திருவடி' என ஒப்புக் கொண்டார்.
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com