தில்லை பெருங்கோயில் - பகுதி 5

தில்லை பெருங்கோயில் - பகுதி 5

தில்லை நடராஜப்பெருமான் ஓயாது நடனமிடும் சபை இந்த பொன்னம்பலம் நிலம், நீர்,

தில்லை பெருங்கோயில்- பொன்னம்பலம்

தில்லை நடராஜப்பெருமான் ஓயாது நடனமிடும் சபை இந்த பொன்னம்பலம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்பர். இந்த ஐந்தின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது. பரம்பொருளாகிய இறைவன் ஐந்து பூதங்களிலும் கலந்து நின்று நம்மை வழிநடத்துகிறார். இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்திற்குரிய சிதம்பரமே முதன்மையாக இருக்கிறது. பஞ்சபூதத் தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி, காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்று யாத்திரையை நிறைவு செய்வது மரபாகும். 

சிதம்பர ரகசியம்

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும். சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சன்னல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது உணர்த்துகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

தெற்கு நோக்கிய நிலையில் இந்த பொன்னபலத்தின் கீழ் அமர்ந்து நடராஜர், சிவகாமி அருள்பாலிக்கின்றனர். ஆதிரை நட்சத்திரத்தின் வடிவே நடராஜரின் வடிவும் ஆகும் அதனால் தான் அதனை திருஆதிரை என அழைக்கிறோம்.

நடராஜர் சன்னதி அமைப்பு

நடராஜப்பெருமான் இடைவிடாமல் ஆடிக் கொண்டே இருக்கும் தலம் சிதம்பரம். ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் சிதம்பரம் கோயிலுக்கு மட்டுமே கோயில் என்று பெயர்.. சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறார்.  இடைவிடாத இதயத்துடிப்பினை மையமாகக் கொண்டே மனிதனின் இயக்கம் நடக்கிறது. அதைப் போலவே, ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே அண்டசராசரங்களும் இயங்குகின்றன 

பொன்னம்பலத் தத்துவம்

சிதம்பரத்தில் கனகசபையும், சித்சபையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடமே பொன்னம்பலம். இதற்கு சிற்றம்பலம், ஞானசபை, சித்ரசபை என்ற பெயர்களும் உண்டு. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது. இந்த நடராஜர் சபையினை பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் பொன்வேய்ந்துள்ளனர். இந்த கருவறையின் கிழக்கில் பரமானந்தகூபம் கிணறு உள்ளது. 

கருவறையினை சுற்றி இரண்டடுக்கு திருமாளிகை மண்டபம் உள்ளது இதில் கீழ் தளத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளது. வடகிழக்கில் பைரவர் உள்ளார். இந்த பைரவருக்கு இரவு அர்த்தசாம பூசை நடைபெறும் பின்னர் அர்த்தசாம அழகர் எனும் மூர்த்திக்கு பூஜை நடைபெற்று நடை அடைக்கப்படும். இரண்டாவது தளத்தில் ஆகாய லிங்கம் உள்ளது.

ரத்தின சபாபதி 

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு நெருப்பில் தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இப்படி செய்யும்போது பின்புறம் காட்டும்போது நெருப்பு பிழம்பு போலவும், முன்புறம் காட்டும்போது கருநிறத்தில் காட்சி தரும்.

பூஜைகள் 

அதிகாலை நேரத்தில் கண்டாமணி ஒலிக்க இறைவனது திருப்பாதம் பொன்னம்பலத்தினை அடையும், அங்கே எம்பெருமானும் எம்பெருமாட்டியும் திருமுன் பால் பழம் பொரி வைத்து பூசை நடைபெறும் இதற்கு திருவனந்தல் என பெயர், அடுத்து காலை சந்தி- கும்ப பூஜை செய்து ஹோமம் செய்து பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு ஸ்படிக லிங்க பூசை நடைபெறும், அடுத்து முதல் காலம் - ஸ்படிக லிங்க பூசை, ரத்தின சபாபதி அபிஷேகம் தீபாராதனை அடுத்து உச்சிகாலம் - ஸ்படிக லிங்க பூஜை, நடராஜர் தீபாராதனை, திருக்கதவு சார்த்துதல், சாயரட்சை மாலை ஐந்து மணிக்கு - ஸ்படிக லிங்க பூசை சோடச தீபாராதனை, மாலை இரண்டாம் காலம்-ஸ்படிக லிங்க பூசை அருவுருவமான ரகசியத்திற்கு பூஜை அனைத்து கதவுகளும் சார்த்தப்பட்டு பூஜை செய்பவர் மட்டுமே உள்ளிருந்து பூஜை செய்து தீபாராதனை, அடுத்து அர்த்த யாமம்- ஸ்படிக லிங்க பூசை நடராஜர் தீபாராதனை பல்லக்கில் பாதுகைகள் பள்ளியறைக்கு கொண்டு செல்லப்பட்டு பதிகங்கள் பாடி நாடி சார்த்துதல்- பிரம்மா சண்டேசர் பூஜை - பைரவர் பூஜை - அர்த்தஜாம அழகர் பூஜை உலகில் உள்ள எல்லா கோயில்களிலும் உள்ள கலைகள் அனைத்தும் இந்த தில்லை திருக்கோயிலில் வந்து சேரும். 

அதனால் காலை முதல் இரவு வரை இருந்தால் கயிலாயத்தில் இருந்த பலன் கிடைக்கும்.

இந்த தில்லை பெருங்கோயில் சில காலம் முஸ்லிம் மன்னராட்சியில், பின் ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் யுத்த அரணாகவும் இருந்தது

மாலிக்கபூர் போன்ற இந்துஎதிர்ப்பாளர்கள் கையில் நடராஜர் திருமேனி சிக்காமல் தில்லைவாழ் அந்தணர்கள் இதனை திருவாரூர், தஞ்சை என பல இடங்களில் மறைத்து வைத்திருந்தனர். பின்னர் கிபி 1174 ல் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் மூல நட்சத்திர நாளில் நடராஜர் மீண்டும் தில்லையை அடைந்து தற்போது வரை அருளாட்சி செய்கிறார்.

பல சிதிலங்களுக்கு உட்பட்ட இப்பெருங்கோயில் இறைவன் அருளாலும் தில்லைவாழ் அந்தணர்தம் அர்ப்பணிப்பினாலும், சிதம்பரம் நகர மக்களின் அன்பினாலும் தற்போதைய நிலைமையில் திருப்பணி செய்யப்பட்டு அழகுடன் உள்ளது.

{pagination-pagination}

தில்லை பெருங்கோயில்- தீட்சதர்கள்

தில்லை பெருங்கோயில் பற்றி சொல்லிவிட்டு அதன் சிறப்புக்கு காரணகர்த்தர்களான தில்லைவாழ் அந்தணர்களை பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியுமா?

சிதம்பரம் கோயிலில் பூசை செய்பவர்கள் தீட்சதர்கள் எனப்படும் தில்லைவாழ் அந்தணர்களே ஆவர்.சிதம்பரம் கோவிலில் தினசரி வழிபாடு வைதிக முறைப்படி தீட்சிதர்களால் நடை பெறுகிறது. இதுவும் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்லமுடியாது.

‘ஆகம வழிபாடு’ என்பது பின்னாட்களில் வந்தது. கி.பி.யில் வந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வைதீக வழிபாடு அதற்கும் முன்னேயே தோன்றியது. 

சிதம்பரம் தீட்சிதர்கள் ஸ்ரீநடராஜராலேயே நேரடியாக அவருடைய வழிபாட்டிற்காகக் கொண்டு வரப் பட்டவர்கள் என்றும், கோவில் வழிபாட்டு முறை  ‘பதஞ்சலி முனிவர்’ ஏற்படுத்திக் கொடுத்த முறைப்படி நடக்கிறது என்றும் சொல்கிறார்கள். Tamilian Antiquary, Vol.1 and  ‘The Cholas’ Prof. K.A.Nilakanda Sastri, இருவரும் எழுதியுள்ள சரித்திர ஆதாரங்களின் படியும், கோவிலின் உள்ளே கிடைத்துள்ள சில கல்வெட்டுக்களில் இருந்தும், கோவிலின் பழமையில் இருந்தும் இது எந்தக் காலத்தில் ஏற்பட்டது எனச் சொல்ல முடியவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கயிலையில் இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து, அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, அந்தணர்களாக மாறி, அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும், இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். 

அந்தச் சிவ கணங்களே ‘தில்லை வாழ் அந்தணர்கள்’ என்று கருதப்படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.

சிதம்பர நடராசருக்கு அகம்படித் தொண்டு (பூசனை) செய்யும் திருவுடை அந்தணர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். அவர்கள் பூசையன்றிப் பிறதொழில் புரியாதவர். தம்மில் யாரேனும் பிறதொழில் செய்யப் புகுவரேல் அவரைப் பூசனை புரிவதற்கு அனுமதியளியாத வழமையைப் பேணுபவர்கள். 

திருஞானசம்பந்தப் பிள்ளையார் தில்லை வாழ் அந்தணர்களைக் கணநாதர்களாகக் கண்டனர். தாம் கண்ட காட்சியை திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு காட்டியும் வைத்தனர்.

சிவனையும் தம்முள் ஒருவராகக் கொண்டவர் சிவபெருமான் தில்லை மூவாயிரருள் தாமும் ஒருவர் என அருளியவர்.

திருத்தொண்டர் கூட்டத்து முதற்பொருளாயுள்ளவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு சிவபெருமான் தில்லைவாழ் அந்தணர்களையே முதற்பொருளாகக் கொண்டு அடியெடுத்துத் கொடுத்தமை மூலம் அறியலாம்.

ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில், காசி நகரில் ‘அந்தர்வேதி’ என்னும் இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே ஈசனை நாட அவர் தம் பூத கணங்களை வைத்துச் செய்யச் சொல்ல கணங்களே தீட்சதர்கள் என்பதை முன்னர் பார்த்தோம் அல்லவா அதனால் இந்தச் சிதம்பரம் தீட்சிதர்களையே தன் யாகத்துக்காக பிரம்மா நாடினார். அவர்களை வரவழைத்தார். அவர்களும் அவர்களின் குருவான வியாக்ரபாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர். யாகமும் இனிதே முடிந்தது. நடு மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை உபசரித்து ‘வைஸ்வதேவம்’ என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார் பிரம்மா. 

ஆனால் தீட்சிதர்களோ தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்ட பின்னரே தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல் தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறியாத பிரம்மா சிவபெருமானின் உதவியை நாடினார்.

சிவனே அந்த யாக நெருப்பில் ரத்தின சபாபதியாக தோன்றினார். தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. தீட்சிதர்கள் திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். அன்று முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது. நடராஜர் ‘மாணிக்ய மூர்த்தி’ என்ற பெயரையும் பெற்றார். 

‘தில்லை பெண் எல்லை தாண்டாது’ என்ற சொல்வழக்கின் பொருள் தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் உறவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வர் வெளியில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார்கள் என்பதாகும்.

இவர்கள் தங்களுக்கென ஒரு கமிட்டி அமைத்து அந்த கமிட்டியின் உத்தரவுகளின்படி அனைத்து பூஜைகளையும் திருவிழாக்களையும் செவ்வனே நடத்திவருகின்றனர்.

முற்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com