மருத்துவனாய் அருளிய மகேஸ்வரன்!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவிலும்
மருத்துவனாய் அருளிய மகேஸ்வரன்!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவிலும், பேராவூரணி நகரத்தில் இருந்து கிழக்கே 6 கி.மீ. தூரத்திலும், மருங்கப்பள்ளம் என்ற கிராமத்தில் அருள்மிகு ஒளஷதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மனிதர்களின் மனதில், உடலில் தோன்றுகின்ற நோய்களுக்கு அருமருந்தாக இத்தல இறைவன் விளங்குவதால், ஒளஷதபுரீஸ்வரர் என்றும் மருந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்திருத்தலம் அமைந்துள்ள ஊரைச் சுற்றிலும் சித்த வைத்தியத்திற்கு பயன்படக்கூடிய நாற்பதுக்கும் மேற்பட்ட அரிய மூலிகைச்செடிகள் பரவியுள்ளன. இதனால் முற்காலத்தில் மருந்துப்பள்ளம் என்று அழைக்கப்பட்ட இக்கிராமம், தற்போது மருங்கப்பள்ளம் என்று அழைக்கப்படுகின்றது.

தஞ்சையை அரசாண்டு வந்த இரண்டாம் சரபோஜி மன்னர், ஆங்கிலேயரின் மேலாதிக்கத்தின் கீழ் தம் அரசை நடத்தி வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். அதே சமயம் அவர்களுடன் நல்ல நட்பும் பாராட்டி வந்தார். ஆங்கிலேயர்கள் அந்த சமயம் பிரெஞ்சுப் பேரரசன், நெப்போலியன் போனபார்ட்டை போரில் தோற்கடித்திருந்தனர். ஆங்கிலேயர்களின் நண்பரான இரண்டாம் சரபோஜி அவர்களின் வெற்றிக்கு ஒரு நிரந்தர நினைவுச்சின்னம் எழுப்ப விரும்பினார். அப்படி  உருவானதுதான் மராட்டிய கட்டிடக்கலைக்கு இன்றைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் "மனோரா' என்னும் அற்புத நினைவுச்சின்னமாகும். இது பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மன்னர் சரபோஜி, மனோரா கட்டுமானப்பணிகளையும் மற்றும் பல பணிகளையும் பார்த்துக்கொண்டிருந்தபோது மிகவும் நோய்வாய்பட்டார். ஒருநாள் நோயின் தாக்கம் அதிகமான நிலையில் அவர் மருங்கப்பள்ளம் அருகில் முகாமிட்டு இருந்தபோது இறைவன் மருத்துவர் உருவில் அவர் கனவில் தோன்றி, "மருந்துப்பள்ளம் போ,  உன் நோய்கள் நீங்கும்; மன்னருக்கு உதவ மச்ச முனிவர் சாதாரண மானிட வடிவத்தில் வருவார்' என்றும் கூறினார். அதன்படி, மன்னர் மறுநாள் மருங்கப்பள்ளம் சென்றார். அங்கிருந்த தீர்த்த குளத்தில் நீராடி, மச்சமுனிவர் கொடுத்த மூலிகைகளை உண்டு அங்கு கோயில் கொண்டுள்ள இறைவன், இறைவியை மனதார வணங்கினார். மன்னரை வாட்டி வதைத்த நோய் நீங்கியது. அதற்கு நன்றிக்கடனாக மன்னர் சிறிய அளவில் இருந்த ஆலயத்தை விரிவுப்படுத்தி, கருங்கல் திருப்பணி செய்து, முன் மண்டபம் கட்டி உருவாக்கினார். அத்துடன் திருக்கோயில் நித்தியபடி பூஜைகள் மற்றும் விழாக்கள் தடையில்லாமல் நடக்க நிலங்களையும் கோயிலுக்கு வழங்கினார்.

மகாசிவம், வசிஷ்டர், அகத்தியர் ஆகிய முனிவர்கள் அருளிய ஓலைச்சுவடிகளில் இத்தலம், சனீஸ்வரபகவானுக்கு உரிய பரிகாரத்தலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல நாடி ஜோதிடத்தில் வரும் சில பரிகாரங்களுக்கு உரிய தலமாகவும் விளங்கி வருகிறது.  இதை மெய்ப்பிக்கும் விதமாக நவக்கிரகங்களில் இங்கு சனீஸ்வரபகவான் மட்டும் தனியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். எனவே, இத்தலம் திருநள்ளாருக்கு அடுத்தபடியாக சனிபகவானுக்கு உரிய பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. நாடி ஜோதிடம் மூலம் இத்தல சிறப்புகளை உணர்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சோக்கோ மோட்டோ, மசாக்கோ தம்பதியினர் 1008 அகல் தீபமேற்றி வழிபட்டு தங்களுக்கு இருந்த வாதநோய் நீங்கப்பெற்றனர்.

இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டு அரசு மான்யம் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. விரைவில் திருக்குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கேற்று நலம் பெறலாம்.  
தொடர்புக்கு: 99430 30104 / 94437 53808.
- டி. கோவிந்தராஜு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com