தில்லை பெருங்கோயில்! பகுதி 2

வடக்கு திக்கு சமய வாழ்வில் சிறப்புடன் போற்றப்படுகிறது. வடக்கு கோபுரம் கயிலாய
தில்லை பெருங்கோயில்! பகுதி 2

வடக்கு நெடுமாடம்

வடக்கு திக்கு சமய வாழ்வில் சிறப்புடன் போற்றப்படுகிறது. வடக்கு கோபுரம் கயிலாய கோபுரம் எனவும் அழைக்கப்படுவதில் இருந்து அதன் பெருமையை உணரலாம். மேலும் இந்த தில்லையில் உள்ள பிற கோபுரங்கள் பத்தாம் நூற்றாண்டில் இரண்டு அடுக்கு மரக்கோபுரமாக இருந்த போதே வடக்கு கோபுரம் ஏனைய கோபுரங்களை காட்டிலும் சிறப்பானதாக ராஜ சிம்மனால் கட்டப்பட்டிருந்ததாக கூறுகின்றனர். 

பின்னர் 1516 ல் கிருஷ்ணதேவராயர் தனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாக அதனை மாற்றி கட்டினார். ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் ஸ்ரீ வீரப்பிரதாப ஸ்ரீ கிருஷ்ண தேவராயன் தர்மம் ஆகா சிம்ஹாத்திரை பொட்டுனூருக்கு எழுந்தரு ஜெயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பலத்தானை சேவித்து வடக்கு கோபுரம் கட்டுவித்த சேவை’ எனும் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் கல்ஹாரம் உயரம் நாற்பது அடி, நீள அகலம் 108x70 அடிகள், உயரம் 107அடிகள், மொத்த உயரம் 147அடிகள், கலசத்தின் உயரம் 7.11”அங்குலம், கலசங்களின் எண்ணிக்கை மொத்தம் 13ஆகும். 

இதனை இறைவன் தனக்கு தானே கட்டிக்கொண்ட கோபுரம் என கூறுவார் காரணம் இது கல்ஹாரத்துடன் கட்டுமான பணிகள் நின்றுவிட்டதாகவும் பின்னர் அச்சுதராயன் செய்த முயற்சியும் இறைவன் அருளும் கைகூடிய பின்னரே நிறைவடைந்தது என்பதால் இவ்வாறு கூறுகின்றனர். கோபுர உள்மாடத்தில் ஒரு அரசனது சிலை உள்ளது இதனை அச்சுதராயன் என்றும் கிருஷ்ணதேவராயர் என்றும் கூறுகின்றனர். 

இந்த கோபுரத்தின் வடக்கில் சிறிய சப்த முனிஸ்வரர் சன்னதி உள்ளது இதில் பைரவரை ஒத்த ஒரு உருவில் கையில் பத்திரம் கொண்டு உள்ளார். கோயிலை காக்கும் பணியில் தனது இன்னுயிரை ஈந்த பெருமக்களின் உருவங்களை சப்தமுனி எனும் பெயரில் ஏழு உருவங்கள அல்லது இது போன்று ஒரே உருவில் அமைப்பது வழக்கம் அப்படிப்பட்டவர் தான் இந்த சப்த முனி.

இங்கு கோட்டத்தில் திகழும் தெற்கு நோக்கிய முருகனின் சன்னதி ஒன்றுள்ளது கோபுர மாடத்தில் உள்ள முருகனுக்கு முன்னிழுக்கப்பட்ட மண்டபம் கட்டி அழகு படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு இந்த கோபுரத்தினை கட்டிய ஆசாரிகள் ஆறு பேரின் சிற்ப்பங்கள் உள்ளன. இதில் சிலருக்கு பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு திருப்பிரைகொடை ஆசாரி, அவன் தம்பி, காரண ஆசாரி, விருத்தகிரி செவகப்பேருமால், அவன் மகன் விசுவமித்று என்பது அந்த சிற்பங்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் இந்த வடக்கு வாயில் வழியே வழிபட வந்தார் என கூறுகின்றனர்

தில்லை பெருங்கோயில்- மேற்கு நெடுமாடம்

கிபி 1251ல் சோழர்களை வெற்றி கொண்ட ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் சிதம்பரத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்துகொண்டான் அந்த வெற்றியின் அடையாளமாக மேற்கு கோபுரத்தினை கட்டினான் என்பது ஒரு வரலாறு. 

சோழர்கள் அமைத்த கோபுரத்தினை புனரமைத்து தனது பெயரிட்டு அமைத்துகொண்டான் என்பது ஒரு கருத்து. இந்த மேலை கோபுரத்தின் மேற்கு பகுதியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு குலோத்துங்க விநாயகர் என பெயர், அதனால் இது சோழ கோபுரம் என ஒரு தரப்பு வாதம்.

இதன் அடிப்பகுதியான கல்ஹாரம் 37அடிகள் தெற்கு வடக்கில் 112அடிகள் கிழக்கு மேற்கில் 60அடிகள் ஆகும் இதன் மொத்த உயரம் 152அடிகளாகும். கலசங்கள் எண்ணிக்கை பதின்மூன்று ஒவ்வொரு கலசத்தின் உயரம் 6.9”அடிகள் கொண்டது. 

மேல வீதியின் கண் இருந்து உள்ளே நுழையும்போது காவல் கூடம் உள்ளது அதனை அடுத்து நூறடிகள் இடைவெளி கொண்டு இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தென் புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இவரே தல விநாயகர் ஆவார் இவருக்கு எதிரில் வில்வமரம் கொண்ட மேடை உள்ளது. இவரை கற்பக விநாயகர் என்றும், வன்னி விநாயகர் என்றும் போற்றுகின்றனர். கல்வெட்டுக்கள் இவரை குலோத்துங்க விநாயகர் என கூறுகின்றன. 

இதனை குலோத்துங்கன் தொடங்கி சுந்தரபாண்டியன் நிறைவு செய்தான் என்றே நாம் கொள்வோம். கோபுர உட்பகுதியில் உள்ள திருவுருவம் சுந்தரபாண்டியன் என்றே கூறுகின்றன. இவன் அமைத்ததே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் சுந்தரபாண்டியன் மண்டபமும் ஆகும்.

இப்பகுதியை இருபத்தோறு ஆண்டுகள் அவன் ஆண்டதாக தெரிகிறது., இது மற்றைய கோபுரங்களை போலவே இரு அடுக்குகள் கொண்டது, மேல் அடுக்கில் மகேச்வர வடிவங்களும், பைரவர் வடிவங்களும் உள்ளன. கீழ் அடுக்கில் சந்திரன், கிரியாசக்தி, சனி, வாயு அக்னி சேத்ரபால விநாயகர், காமதேவன், கங்காதேவி, அகஸ்தியர், திரிபுரசுந்தரி, ஆதி சண்டேசர், தேவேந்திரன் நாகன், கணநாதர், யமுனை, பத்ரகாளி, நிருதி, புதன், ஞானசக்தி, ருத்ரர், நாரதன்,அழகேஸ்வரன் ஆகியோர் உள்ளனர். மாடங்கள் மீது இவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

கிழக்கில் கோபுர கோட்டத்து முருகனுக்கு முகப்பு மண்டபம் கட்டி பெரிய சன்னதியாக காட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலில் 108நாட்டிய கரணங்ககள் செதுக்கப்பட்டுள்ளன. 

‘தெய்வப் புலியூர் திருவெல்லையிற் புக்கு பொன்னம் பலம் பொலிய 

யாடுவாவர் பூவையுடன் மன்னுந் திருமேனி கண்டு மனங் களித்து’ என்ற சுந்தரபாண்டியனின் மெய்கீர்த்தி  கூறுவது போல் நீங்களும் பொன்னம்பலத்தானை கண்டு வணங்கி வாருங்கள்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com