தில்லை பெருங்கோயில்! பகுதி மூன்று

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலும் பாழுடலம் கொழுத்து செத்தாலும் மெலிந்து
தில்லை பெருங்கோயில்! பகுதி மூன்று

‘பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலும் பாழுடலம் கொழுத்து செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப்படினும் புழுத்துசெத்தாலும் புதைத்தாலும் காலில் புரியை கட்டி இழுத்து செத்தாலும் சிதம்பரத்தே சென்று இறத்தல் நன்றே’ 

மூன்றாம் பிரகாரத்தின் தென்கோபுரத்தின் வழி வரும்போது எதிரில் தென்முக கடவுளும் அருகில் விநாயகரும் ஒன்றாய் அமர்ந்திருக்கும் சிற்றாலயம் ஒன்று தென் திசை நோக்கி உள்ளது அதன் பின்னர் நடராஜப் பெருமானின் நேர் எதிரில் வைக்கப்படும் பலி பீடம், மற்றும் மிகப் பெரிய காளை ஒன்று உயர்ந்த மேடையில் உள்ளது.

வாங்க அப்படியே வலமாக வரலாம்.தென்மேற்கில் முக்குருணி விநாயகர் கோயில் , வடக்கில் பாண்டியநாயகர் கோயில் நவலிங்க கோயில், சிவகாம சுந்தரி கோயில், சிவகங்கை தீர்த்த குளம் ஆயிரங்கால் மண்டபம் ஆகியனவும் உள்ளது.

முக்குருணி விநாயகர் மூன்றாம் பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். எட்டு அடி உயரமும் ஆறு அடிக்கும் அதிகமான அகலத்தில் உள்ளார். எப்போது யாரால் கோயில் கட்டப்பட்டது என்ற தகவல் இல்லை. தற்போது விரிவு படுத்தப்பட்டு குடமுழுக்கு கண்டுள்ளது.

மேற்கு கோபுரத்தினை தாண்டியதும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் 

இது கிழக்கு நோக்கியது, மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழரை வெற்றிகொண்ட போது இங்கு மகுடாபிஷேகமும் வீராபிஷேகமும் செய்துகொண்டான் என கல்வெட்டுக்கள் கூறுகிறது அவர்கள் மீனாட்சி-சொக்கநாதர் முன்னிலையில் தான் முடிசூடுவது வழக்கம் அதனால் இந்த கோயிலை இங்கு கட்டுவித்தான்.

அருகில் முடிசூடிய பெருமைக்குரிய நூற்றுக்கால் மண்டபம் உள்ளது இதற்கு விக்கிரம சோழன் மண்டபம் என்று பெயருண்டு ஆயினும் சில தூண்களில் வீரபாண்டியன் திருமண்டபம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தின் எதிரில் உள்ளது திருமூலநாத விநாயகர் சிற்றாலயம். ஒற்றைக்கால் மண்டபம் கொண்ட இந்த கோயில் மிக பழமையானது.

வடக்கு கோபுரத்தினை ஒட்டி திருதொண்டதொகை ஈச்சரம் என்று திருதொண்ட தொகையில் பாராட்டப்பெற்ற தனி அடியார் அறுபத்து மூவரும், தொகையடியார் ஒன்பதின்மருமாக உள்ள பெருமக்களில் தொகையடியார்களுக்கு அமைக்க எண்ணி ஒன்பது லிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது, தொகையடியார்களை சிவலிங்க திருமேனி வாயிலாக தரிசனம் செய்ய திருதொண்டதொகை ஈச்சரம் என அமைத்து உள்ளனர். திருதொண்டதொகை பாடிய சுந்தரர் இந்த வடக்கு வாயிலின் வழி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாலயம் தற்போது நவலிங்க திருக்கோயில் என வழங்கப்படுகிறது. இதன் மையத்தில் உள்ள லிங்கம் தாரா லிங்கம் எனப்படும்.பதினாறு பட்டைகள் கொண்ட பாணம் உள்ளது. பிற லிங்கங்களும் ஆறு பட்டை எட்டு பட்டை என பல வகையில் உள்ளன. 

இந்த நவலிங்க கோயிலின் அருகில் உள்ளது பாண்டிய நாயகர் கோயில் இக்கோயில் முருகனை வண்ணசரபம் தண்டபாணி சாமிகள் பாடியுள்ளார் இதற்கு திருமுருகப் பெருமான் பிள்ளைத்தமிழ் என பெயர். 

இவருக்கு பாண்டிய நாயகர் என ஏன் பெயர் வந்தது? 

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் சிவன் சோமசுந்தரனாகவும், அம்பிகை தடாதகை பிராட்டியாகவும் தோன்றிய போது முருகன் அங்கே உக்கிரகுமார பாண்டியன் என்ற பெயரில் அவதரித்ததும், சங்க புலவரிடையே வாதம் நேர்ந்தபோது உருத்திர சன்மராக தோன்றி கலகம் தீர்த்ததால் பாண்டிய நாயகன் என வழங்கப்பட்டார்.

இக்கோயில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு முகப்பு மண்டபம் மிக அழகான தூண்களுடன் உள்ளது இந்த மண்டபத்தினை யானைகள் இழுப்பது போன்ற தோற்றம் கொண்டு கட்டப்பட்டது.அருணகிரிநாதர் பாடலும் இவருக்கு உள்ளது. கோயில் தற்போது சிதிலமடைந்து உள்ளதால் பூசை நேரம் தவிர பூட்டி வைக்கப்பட்டுள்ளது. 

சிவகாம சுந்தரி திருக்கோயில் - இது கிழக்கு நோக்கியது தரைமட்டத்தில் இருந்து பத்து அடிகள் கீழே உள்ளது இதில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. விக்கிரமசோழனால் கற்றளி ஆக்கப்பட்டு இவனது மகன் இரண்டாம் குலோத்துங்கனால் நிறைவு செய்யப்பட்டது. இதன் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள இரண்டடுக்கு சுற்றாலை மண்டபம் மிகுந்த அழகுடையது அதனை சுற்றி வரும்போது நாம் பல நூற்றாண்டுகள் பின்நோக்கி சென்று வருவதை போல் உணர்வோம் அம்பிகையின் முகப்பு மண்டபம் மிகுந்த அழகுடையது, இதில் இருபது அடிகள் உயரம் கொண்ட தூண்கள் அறுபது அணிசெய்கின்றன. இதன் விதானத்தில் அழகிய சித்திர கதை சொல்லும் ஓவியங்கள் நிறைந்துள்ளன.இந்த மண்டபம் முன்பு மேற்கு கோபுரத்தின் எதிரில் இருந்துள்ளது என்றும் அதனை பிரித்து பின்னர் இங்கு கட்டினர் எனவும் ஒரு தகவல் உள்ளது.

இடைத்தாங்கல் ஏதுமின்றி இவ்வளவு அகலமான கருங்கல் மண்டபம் வேறு எங்கும் காண முடியாது. கருங்கல் தூண் மரத்தூண் போல வேலைப்பாடு அமைந்திருப்பதும், சிற்ப வேலைப்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை. இங்கு அம்பிகை கருவறைக்கு உள்ளே நுழையும் இடத்தில் 12 அடிகள் உயரமும் அகலமும் கொண்ட பிரம்பிலான பெரிய அலங்கார வளைவு ஒன்று இருந்தது முப்பது வருடங்களின் முன் யாரோ ஒரு பக்தர் ஏற்றிவைத்த விளக்கு அதனை முற்றிலும் எரித்து நாசமாக்கியது. இதனால் இந்த முகப்பு மண்டபத்தில் விதானத்தில் இருந்த ஓவியங்கள் பாழ்பட்டுள்ளன. இங்குள்ள விதான ஓவியங்கள் நாயக்கர் கால ஓவியங்கள் ஆகும்.

அம்பிகை திருக்கோயில் உள்சுற்றிலும் பல விநாயகர், லிங்க மூர்த்திகள் உள்ளனர் தற்போது அம்பிகையின் அறுபத்து மூன்று வடிவங்களை சுதை வடிவில் செய்ய பணிகள் நடைபெறுகின்றன.அம்பிகை சிவகாம சுந்தரி நின்ற கோலத்தில் அழகுற உள்ளது சிறப்பு. ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதுகையில் உமம் ஹைமவதிம் என்ற பதத்திற்கு பொருள் எழுத இயலாம ல் திகைக்க தன பொருள் தாமே என்றுணர்த்திய அம்பிகை.

வேறு எத்தலத்திலும் இல்லாத சித்ரகுப்தர் சந்நிதி இக்கோவிலில் அமைந்துள்ளது. 

இக்கோயில் எதிரில் உள்ளது சிவகங்கை தீர்த்தம் 

சிவகங்கை தீர்த்தம் 

ஹேம புஷ்கரணி, அம்ருதவாபி, சந்திர புஷ்கரணி என்றெல்லாம் தல புராணங்களில் வர்ணிக்கப் படும் இந்தக் குளம் பண்டைக் காலம் தொட்டே இருந்து வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின் காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள் இறங்கும் சுற்று படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

பல ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும், விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. தென்பகுதியில் தண்ணீருக்குள் ஜம்புகேஸ்வரர் லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாயும், சொல்கிறார்கள் சிம்மவர்மன் உடல்நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி வியாக்கிரபாதரின் ஆலோசனையின் பேரில் இந்தக் குளத்தில் புனித நீராடி, நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று வழிபட்டதாயும், அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே, தான் பெற்ற பயன் அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும், அகலப் படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். நடராஜர், சிவகாம சுந்தரி இவர்களின் அபிஷேக நீர் எவர் கண்ணிலும் படாமல் இந்த குளத்தில் கலக்கிறது, மேலும் பத்தாம் நூற்றாண்டில் இக்குளம் திருப்பாற்கடல் எனும் திருவீதி அடுத்த தெருவில் உள்ள குளத்தில் சென்று சேர்வதாக ஒரு வடிகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து உள்ளது ஆயிரம்கால் மண்டபம் 

ஆயிரம் கால் மண்டபம் இங்கு தான் நடராஜர் வருடத்தின் ஆணி, மார்கழி மாதங்களில் வீதி உலா சென்று திரும்பி வந்து அபிஷேகம் கண்டு பக்தர்களுக்கு ஆனந்த நடனம் காட்டி பொன்னம்பலம் செல்வார். இங்கு தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதியதாக சொல்லப்படுகிறது, சேக்கிழார் திருமுறைகளை தொகுத்தது இந்த மண்டபத்தில் தான் 986 தூண்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது இரு புறமும் பெரிய யானைகள் தெற்கு இழுப்பதை போன்று கட்டப்பட்டுள்ளது. சோழ மன்னர்கள் இந்த மண்டபத்தில் தான் முடிசூட்டி கொள்ளும் இடமாகவும் இருக்கிறது. இது விக்கிரமசோழன் காலத்தில் விரிவு படுத்தப்பட்டது. 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com