தில்லை பெருங்கோயில் - பகுதி நான்கு

சிதம்பர ஆலயத்தின் பெருமை மிகுந்த, ஸ்தல புராணங்களில் சொல்லப்பட்ட, புனிதம்
தில்லை பெருங்கோயில் - பகுதி நான்கு

தச தீர்த்தம் 

சிதம்பர ஆலயத்தின் பெருமை மிகுந்த, ஸ்தல புராணங்களில் சொல்லப்பட்ட, புனிதம் வாய்ந்த பத்து நீர்நிலைகளை (தச தீர்த்தம்) இப்பதிவில் காண்போம்.

1. சிவகங்கை

'தீர்த்தம் என்பது சிவகங்கையே' என்று குமரகுருபரரால் போற்றப்பட்ட தீர்த்தம். ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் தங்க மேனியில் தவழ்ந்த நீர் சிவகங்கையில் தான் கலக்கின்றது. ஆகையால் தான் சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது.

ஒரு சமயம், ஆதிசேஷனின் அரவணையில் துயில் கொண்ட மஹாவிஷ்ணு, திடீரென தனது யோக நித்திரை களைந்து, களிப்புற்றார். அனுதினமும், ஹரியைத் தாங்குகின்ற பாம்பு வடிவனான ஆதிசேஷன், மஹாவிஷ்ணுவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் கேட்க, முன்னொரு சமயம் ஸ்ரீ நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தை நினைக்கையிலேயே ஆனந்தம் பொங்குகின்றது, அவ்வானந்தமே அரிதுயிலை நீக்கச் செய்தது என்க, ஆர்வ மிகுதியில், ஆதிசேஷன், ஆனந்த நடனத்தை அடியேனும் காண வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு வரம் அளிக்கின்றார். பூவுலகத்தில், தில்லை மரங்கள் சூழ்ந்த, சிவகங்கை எனும் தடாகத்தின் அருகில், தில்லை வனத்தில், சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அங்கே சென்று தவமியற்றி, ஆடல்வல்லானின் ஆனந்த நடனத்தைக் காணலாம் என்றும் வழிகாட்டுகின்றார்.

ஆதிசேஷனும், பதஞ்சலி முனிவராகப் பிறப்பெடுத்து, தில்லை வனத்தில் தவமியற்றுகின்ற புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதருடன் சேர்ந்து பூஜைகள் புரிந்து, ஆடல்வல்லானின் ஆனந்த திருநடனக்காட்சியைப் பெறுகின்றனர்.

கௌளடதேசத்து அரசனாகிய சிம்மவர்மன் எனும் அரசன் தனது உடல் முழுதும் ஏற்பட்டிருக்கும் தோல்நோய்க்கு மருந்து தேடி உலகமெங்கும் சுற்றி வருகின்றான். அவன் பதஞ்சலி வியாக்ரபாதர்களை சந்தித்து தனது குறையைச் சொல்ல, அதற்கு அவர்கள் சிவகங்கை எனும் குளத்து நீரே உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்க வல்லது என்று வழிகாட்டி, அவ்வாறேச் செய்யச் செய்தனர். சிவகங்கையில் குளித்த சிம்மவர்மன், சிவபெருமானின் திருவருளால், பொன்னார்மேனியனின் மேனியில் தவழ்ந்த தண்ணீரால், தோல் நோய் அனைத்தும் நீங்கி, உடல் பொலிவு பெற்று, தங்கமேனியனாக, ஹிரண்யவர்மனாக எழுந்தான்.

ஆலயத்தைச் செப்பனிட்டு பொன்னார் மேனியனின் கருவறைக்குப் பொன்வேய்ந்தான்.

நோய்களை நீக்கவல்லதாக அமைவது சிவகங்கைத் தீர்த்தம்.

2. பரமானந்த கூபம்

பூஜைக்கு அம்பலவாணருக்கு அபிஷேகம் செய்ய, அவர் இருக்கும் பொன்னம்பலத்தின் கிழக்குபகுதியில் சண்டேசர் சன்னதி அருகில் காசியிலுள்ள கங்கையையே அந்தர்வாஹினியாக - பூமிக்கு அடியில், காசியிலிருந்து சிதம்பரத்திற்கு வரவழைத்தார். அந்த இடத்திலிருந்து தான் தினமும் அபிஷேகத்திற்கான தீர்த்தம் எடுக்கப்படும். வருடத்தின் ஆறு அபிஷேகங்களுக்கும் காசிக்கும் சிதம்பரத்திற்கும் தொடர்பான அந்தக் கிணற்றிலிருந்த்து தான் தீர்த்தம் சேகரிக்கப்பட்டு, ஆடல்வல்லப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். அந்த தீர்த்தம் பரமானந்த கூபம் எனப்படும்.

அனுதினமும் ஆனந்த நடனம் ஆடுபவர் அல்லவா, அவருக்கு ஆனந்தமாக அபிஷேகம் செய்யப்பட பரம ஆனந்த கூபம் எனும் காசிக் கிணறு தீர்த்தம் அமைந்திருக்கின்றது. 

பரமானந்த கூபத்திலிருந்து எடுக்கப்பட்ட தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு, அந்தத் தீர்த்தத்தை நமது சிரசில் தெளித்துக்கொள்வது என்றும் ஆனந்தத்தை வழங்கக்கூடியது.

அந்தக் காசிக் கிணற்றிலுள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்வது கங்கையை தரிசனம் செய்வதற்கு சமம் என்ற நம்பிக்கை உண்டு.

வற்றாத ஜீவ நதியாக விளங்கும் கங்கையைப் போன்று, இந்தக் கிணற்றில் எந்த நாளும் தண்ணீர் வற்றுவதில்லை. 

3. புலிமடு (மத்யந்தினீஸ்வரம்)

மத்யந்தினர் எனும் மஹரிஷி சிவபெருமானை அனுதினமும் பிரார்த்தனை செய்துவந்தார்.

(மத்தியந்தினர் வழிபட்ட சிவலிங்கம் சிதம்பரம் ஆலயத்திலிருந்து தெற்கு புறத்தில் அம்மாப்பேட்டை செல்லும் வழியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றது.)

மத்யந்தினர், சிவவரத்தினால் ஒரு மகவு பெற்றார். 

அவர் தன் மகனுக்கு நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுணர்த்தினார்.

இவையனைத்தையும் கற்ற மகன், ஆத்ம ஞானம் பெற ஏது வழி என தந்தையைக் கேட்க, அதற்கு மத்யந்தினர், ஆத்ம ஞானம் பெற ஒரே வழி, தில்லை வனத்தில் உறையும் - அருளுகின்றார். புலியின் கால்களைப் பெற்றதால் வியாக்ர (புலி) பாதர் எனப் பெயர் பெற்றார். வரம் பெற்ற வியாக்ரபாதரைக் கண்டு மத்யந்தினர் மனமார மகிழ்கின்றார். 

மத்யந்தினர் பூஜை செய்த சிவலிங்க ஆலயத்தின் எதிரில் உள்ள தீர்த்தமே புலிமடு என பெயர் பெற்றது.

இந்தத் தீர்த்தக் கரையில் சுடலைமாடன் கோயில் உள்ளது. 

இறந்தவர்கள் மோட்சம் பெறும் பொருட்டு, எலும்புகளைக் கரைக்க இங்கு வந்து தான் வழிபாடு செய்வார்கள்.

இந்தக் குளத்தின் மற்றும் ஒரு சிறப்பு அம்சம். இங்கு இடப்படும் எலும்புகள் கரைந்துவிடுகின்றன. 

இனி மனிதப் பிறப்பு இல்லை எனும் நிலையான மோட்சத்தை அருளும் தீர்த்தம் புலிமடு தீர்த்தம்.

4. சிவப்ரியா (பிரம்ம தீர்த்தம் - தில்லைக் காளி கோயில்)

சிதம்பர ஆலயத்தின் வடபால் அமைந்த தில்லைக் காளி அம்மன் ஆலயம் (சுமார் 2 கி.மீ.) - சிவப்ரியா எனும் தீர்த்தத்தின் கரையில் தான் அமைந்துள்ளது.

பதஞ்சலி, வியாக்ரபாதர்களின் பூஜைகளுக்கு இணங்க, தில்லை வனத்தில் ஆடல்வல்லான் ஆனந்தத் தாண்டவமாடினார்.

முன்பொரு சமயம் பெற்ற ஒரு வரத்தின் காரணமாக, சிவனுக்கு பிரியமான அம்பிகை பார்வதி, தில்லைவனத்திற்கு அதிபதியாக, கரிய நிறத்தினளாக 'காளி' என பெயர் பெற்று விளங்கினாள். 

பிரம்மா முதலான தேவர்கள் வந்து தேவியை சாந்தப்படுத்தினர். அந்த அம்பிகையே 'பிரம்ம சாமுண்டி' - தில்லையம்மனாக, தில்லை வனத்திற்கான காவல் தெய்வமாக தில்லையின் எல்லையில் அமர்ந்தாள்.

காளி கோயில் தீர்த்தமே - சிவப்ரியா தீர்த்தம். 

இங்கு ஸ்நானம் செய்வது - ஆத்ம சாந்தியை தரும்.

5. நாகசேரி 

ஆதிசேஷன், மஹா விஷ்ணுவிடம் வரம் பெற்று, கைலாசத்தை வந்தடைந்தார். ஆதிசேஷன், ஆனந்த நடனத்தைத் தானும் காண வேண்டும் என்ற பேராவலை பெருமானிடம் வைத்தார். அதற்கு கைலைநாதன், தென்புறத்தில் உள்ள தில்லை வனம் சென்று, அங்கிருக்கும் வியாக்ரபாத முனிவருடன் சேர்ந்து வழிபாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படியே, ஆதிசேஷன் பாம்பு வடிவம் கொண்டு, தென்புறத்திலுள்ள தில்லை வனத்தைச் சேர்ந்தார். தில்லைவனத்தின் ஒரு பிலத் துவாரத்தின் (hole) வழியே எழுந்தார்.

பதஞ்சலியாக உருமாறி வியாக்ரபாதருடன் ஆதிமூலநாதரைக் கண்டு தவமியற்றி, தாண்டவக்கோனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பேறு பெற்றார்.

இதுவே நாகன் (ஆதிசேஷன்) சேர்ந்த புரி - நாகசேரி தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது.

சிதம்பர ஆலயத்தின் வடமேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

6. பிரம்ம தீர்த்தம் வசிஷ்ட்ட தீர்த்தம் 

கௌடதேசத்து அரசனாகிய ஐந்தாம் மனுவின் குமரனாகிய சிம்மவர்மன், தன் தோல் நோய்கள் நீங்க, பதஞ்சலி வியாக்ரபாதர்களின் ஆலோசனைக்கேற்ப, சிவகங்கை தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, தன் உடல்நோய்கள் நீங்கி, ஹிரண்யவர்மனாக (தங்க மேனியனாக) எழுந்தான். 

கௌட தேசத்தின் இளவரசனாக சிம்மவர்மன் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்டாலும், தன் உடல் நோய் காரணமாக, சிம்ம வர்மன், தன் சகோதரர்களாகிய வேதவன்மன் மற்றும் சுமதி ஆகியோரிடம் யுவராஜ்ய பரிபாலனத்தைக் கொடுத்து விட்டு, நோய் நீங்க தீர்த்த யாத்திரை மேற்கொண்டான்.

சிதம்பரத்தில் வந்து நோய் நீங்கிய சமயம், கௌடதேசத்தின் அரசனாகிய சிம்மவர்மனின் தந்தை உயிரிழக்க, இவனின் சகோதரர்களும், மூத்தவனாகிய சிம்மவர்மன் தான் அரசனாக வேண்டும் என்க, நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. 

இக்குழப்பத்தை நீக்க, கௌடதேசத்து ராஜ குருவாகிய வசிஷ்டர், தான் சென்று சிம்மவர்மனை அழைத்துவருவதாகக் கூறி, தென்புலத்திற்கு தன் குடும்பத்துடன் வந்தார். 

வசிஷ்டர் மிகச் சிறந்த சிவபக்தர். சிதம்பரம் தலத்திற்கு வந்து, கோயிலின் வடமேற்கு திசையில், திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த இடத்தில், ஆசிரமம் அமைத்துக் கொண்டு, சிவ வழிபாடு செய்துவந்தார். 

பிரம்ம ஞானத்தை தரும் வகையில், அங்கு பிரம்மபுரீசுவர் எனும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜைகள் செய்து வந்தார். 

அது சமயம், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத ரிஷிகள் வசிஷ்டரை முறைப்படி வணங்கி, வந்த காரணம் கேட்க, ஹிரண்யவர்மனாகிய சிம்மவர்மனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யவேண்டிய கட்டாயத்தினை எடுத்துரைக்கின்றார். இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த இருவரும், சிதம்பரத்திலேயே ஹிரண்யவர்மனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்துவைக்கின்றனர்.

ராஜ்யபரிபாலனம் மேற்கொண்ட ஹிரண்யவர்மன், கௌடதேசம் சென்று, முறைப்படி அரசனாக முடிசூடிக்கொண்டு, தன் படைகளையும், செல்வங்களையும் எடுத்துவந்து, சிதம்பரம் கோயிலை விரிவுபடுத்தினான்.

வசிஷ்டர் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த இடத்தில் அமைந்த 

அந்த அருமையான தீர்த்தமே பிரமதீர்த்தம் அல்லது வஸிஷ்ட தீர்த்தம் என்று பெருமையாகப் போற்றப்படுகின்றது. அழகுமிகுந்த தோப்புக்குள் அமையப் பெற்றதால் அந்த இடம் சிங்காரத்தோப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. பிரம்மபுரீசுவரர் ஆலயத்திற்கான தீர்த்தம் என்பதால் அது பிரம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இங்கு நீராடுவதால் பிரம்மஞானம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

7. திருப்பாற்கடல்

வசிஷ்டர் தன் குடும்பத்துடன் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த சிங்காரத்தோப்பில், தவம் செய்து கொண்டிருக்கின்றார். 

தம்மை வந்து தரிசித்த பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளைக் கண்டு மகிழ்ந்தார்.

வியாக்ரபாதரின் தவ சிரேஷ்டத்தைக் கண்டு வியப்புற்று, தன்னுடன் அழைத்து வந்திருந்த தன் தங்கையை, வியாக்ரபாதருக்கு மணம் முடித்து வைத்தார்.

வசிஷ்டரின் தங்கையும், வியாக்ரபாதரும் - தம்பதி சமேதராக நடராஜப் பெருமானை வழிபட்டுவந்தனர். இருவரின் குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக சூரியனையொத்த பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு என்று பெயரிட்டனர்.

உபமன்யு, வசிஷ்டரின் ஆசிரமத்தில், அருந்ததியின் அரவணைப்பில், தெய்வப்பசுவாகிய காமதேனுவின் பால் அருந்திக் கொண்டு, வனப்புடன் வளர்ந்துவந்தான். சில காலம் சென்று, உபமன்யுவையும் அவன் தாயையும் அருந்ததி, வியாக்ரபாதரின் இல்லம் கொண்டு சேர்ப்பிக்கின்றாள்.

இங்கு வந்த குழைந்தைக்கு வியாக்ரபாதர் தனது ஆசிரமத்திலிருந்த பசுவின் பால் தர, தெய்வப்பசுவாகிய காமதேனுவின் சுவைமிக்க பால் அருந்திய அந்த பாலகன், வியாக்ரபாதர் தந்த பாலைத் துப்பிவிட்டு, காமதேனுவின் பால் தான் வேண்டும் என அடம்பிடித்து, பசியால் துடிக்க, செய்வதறியாது திகைத்த வியாக்ரபாதர் நடராஜரை வேண்ட, தன் பக்தனின் துயர் துடைக்க, குழந்தை குடிப்பதற்காக பால் அலையென அடித்துவரும் வகையில் பாற்கடலையே உண்டாக்கினார். அதை உண்ட உபமன்யு, திருப்தியடைந்து, தந்தையிடம் பாடங்கள் பயின்று பெரும் ஞானியானார்.

பாலுக்குப் பாலகன் வேண்டியதிடப் பாற்கடல் ஈந்த பிரான் - என்று திருப்பல்லாண்டிலும், அப்பர் தேவாரத்திலும் இச்சம்பவம் இடம்பெறுகின்றது.

நடராஜரால் ஏற்படுத்தப்பட்ட திருப்பாற்கடல், கோயில் வடதிசையில் அமைந்திருக்கின்றது.

8. அனந்த தீர்த்தம் (அனந்தேஸ்வரம்)  

ஸ்ரீ பதஞ்சலி ரிஷி தனது ஆத்மார்த்த பூஜைக்காக, ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபாடு ஆற்றிவந்தார். அது சிதம்பரத்திற்கு தெற்கு திசையில் அமைந்துள்ளது. அனந்தன் என்றால் ஆதிசேஷனைக் குறிக்கும். ஆதிசேஷனின் அம்சமாக அமையப்பெற்ற பதஞ்சலியால் ஏற்பட்ட ஈஸ்வர ஆலயம் ஆகையால் அது அனந்தேஸ்வரம் என்று போற்றப்படுகின்றது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஆலயத்திற்குள் அமைந்த குளம் அனந்த தீர்த்தம். இதில் ஸ்நானம் செய்தால் ஸஞ்சித பாபங்கள் (வினைகள்) அனைத்தும் நீங்கும் என்கின்றது கோயில் புராணம்.

பதஞ்சலி நாக உருக்கொண்டு, கைலாயத்திலிருந்து சிதம்பரத்திற்கு வந்து பூமிக்கடியிலேயே பயணித்துவந்து, சிதம்பரத்தினருகே ஒரு துவாரத்தின் வழியே எழுந்த இடம் தான் நாகசேரி. தான் எழுந்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே தனக்கான ஆத்மார்த்த பூஜைக்கான கோயில் அமைத்தார் பதஞ்சலி.

9. வியாக்ரபாத தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில்)

பதஞ்சலி மஹரிஷியைப் போன்று, அவருடன் நடராஜரை அனுதினமும் வழிபாடாற்றிய வியாக்ரபாத முனிவரும் தனது ஆத்மார்த்த பூஜைக்கென ஒரு ஆலயம் அமைத்தார். அது புலிக்கால் முனியான வியாக்ரபாதர் அமைத்ததால், அது திருப்புலீசுவரம் என்று அழைக்கப்பட்டது. அக்கோயிலுக்கு எதிரில் அமைந்த ஒரு பெரிய குளம் - வியாக்ரபாத தீர்த்தம் - என்று போற்றப்படுகின்றது.

63 நாயன்மார்களில் ஒருவர் திருநீலகண்ட நாயனார். இவர் தம் மனைவி ஒரு சமயம் இவர் மீது கோபம் கொண்டு, என்னை எப்பொழுதும் தீண்டக்கூடாது என்று திருநீலகண்டத்தை உடைய சிவபெருமான் மீது ஆணை எனக் கூற, அதன் படி, திருநீலகண்டரும் மனைவியைத் தொடாது குடும்பம் நடத்திவந்தனர். காலம் கடந்தது. முதுமை அடைந்தனர். சிவபெருமானின் திருவிளையாட்டால், முதுமை பெற்ற தம்பதியினர், இக்குளத்தில் ஒரு சேர மூழ்கி எழ, இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் அதிர்ந்தனர். இக்குளத்திலிருந்து எழுந்த இருவரும் முதுமை நீங்கி இளமையுருவம் கொண்டனர். ஆகவே இக்குளம் இளமையாக்கினார் குளம் என்று பெயர் பெற்றது. நோயற்ற நீடித்த நல்வாழ்வு வாழ இக்குளம் வரம் அருளுகின்றது.

10. குய்ய தீர்த்தம் (பாசமறுத்த துறை - கிள்ளை)

வருண பகவான் தண்ணீருக்கு அதிபதியாக விளங்கக் கூடியவர். ஒரு சமயம் இவர் தமது எதிரி ஒருவனை வெல்ல ஒரு மந்திராஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள எண்ணி தமது இடத்திற்கு அஸ்திர (அம்பு) சாஸ்திரம் அறிந்த ஒருவரை, குருவாக ஏற்று வரவழைக்கின்றார். மாலை நேரத்து இருள் கவியும் நேரத்தில், செடிகள் சூழ்ந்த வருணன் வசிக்கும் இடத்திற்கு, வருணனுக்கு அம்பு சாஸ்திரம் கற்றுத்தர குரு வருகை தர, வருணன் தனது பகைவன் தான் தன்னைக் கொல்ல வருகின்றான் என்று தவறாக எண்ணி, ஒரு அம்பினைப் போடுகின்றான். அந்த அஸ்திரம் குருவைக் கொன்றுவிடுகின்றது. குருவைக் கொன்ற பாபம், பிரம்மஹத்தி தோஷமாக வருணனைப் பீடிக்கின்றது. அச்சமயம் ஒரு பூதம் ஒன்று தோன்றி, குருவைக் கொன்றதால் வருணனுக்குத் தண்டனையாக, வருணனின் கை, கால், கழுத்து இவை அனைத்தையும் ஒரு சேர பாசக்கயிற்றினால் கட்டி, கடலில் போட்டுவிடுகின்றது.

வருணன் இல்லாததால் வறண்டன நிலங்கள். 

இதையறிந்த தேவர்கள், வியாக்ரபாதரிடம் முறையிட, அவர் வருணனை, நடராஜப் பெருமானை வேண்டச் சொல்ல, அவ்வகையில் வருணன் ஆனந்த நடராஜப் பெருமானை அனுதினமும் வேண்டிக்கொண்டிருக்க, மாசி மாதத்து, மகம் நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் வருணனுக்கு இடபாரூடராகக் காட்சி தந்து, பிரம்மஹத்தி தோஷம் நோக்கி, வருணன் கட்டப்பட்டிருந்த பாசக்கயிற்றையும் அறுத்து எறிந்தார்.

ஈசன் கிளர்ந்து (விரைந்து தோன்றிய) இடம் கிள்ளை. பாசக் கயிற்றினை அறுத்ததினால் அது பாசமறுத்த துறை.

வருணன் பிறகு தவமிருந்து வருணாஸ்திர தந்திரம் அறிந்துகொண்டு, பகைவனை வென்றார். 

கிள்ளை - சிதம்பரத்திற்கு வடகிழக்கில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. சுனாமி அலைகளைத் தடுக்கவல்ல மாங்குரோவ் காடுகள் நிறைந்த - சிறந்த சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. 

நிச்சயம் ஒரு முறையேனும் அமாவாசை நாளில் நீராட செல்லுங்கள்.

தில்லை பெருங்கோயில்- ஆலயமணிகள்

ஆலயமணி 

ராமலிங்க அடிகள், நந்தனார், ஒலியுலா சுவாமிகள் போன்றோர் ஒலி நிலையைத் தொடர்ந்த ஒளி நிலையில் திகழ்ந்தவர்கள். இவ்வாறு ஒலியை ஒளியாக மாற்றும் தெய்வீக நிலைகளாக அமைந்தவையே சிதம்பரம் திருத்தலத்தில் அமைந்த ஆலய மணிகளாகும்.

சபாநாயகர் எழுந்தருளிய பிரகாரத்திற்கு அடுத்த பிரகாரத்தில் அமைந்துள்ளதே நிருத்த கண்டா என்ற கால மணியாகும். காலத்தை விரயம் செய்த குற்றத்திற்கு ஓரளவு பரிகாரம் தருவதே இந்த நிருத்த கண்டா மணி ஓசையும், அதன் வழிபாடும். 

உதாரணமாக, ஓம் பூர் புவ சுவஹ தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத் என்ற பிரம்ம காயத்ரீ மந்திரத்தை ஓதும் போது வார்த்தைகளுக்கு இடையே சிறிது மந்திரம் ஓதாத நேரம் அமையும் அல்லவா? இந்த நேரமும் கால விரயம் என்ற கணக்கில் சித்ர குப்தரால் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

அத்தகைய கால விரயத்தையும் சரி செய்ய மனிதர்களுக்கு வழிகாட்டுவதே சிதம்பர திருத்தலத்தில் அமைந்த நிருத்த கண்டா மணியாகும். அம்மணியைக் கொண்டு கால விரயத்தை எப்படித் தவிர்ப்பது? 

நீங்கள் காயத்ரீ மந்திரத்தை ஓதும்போது 'ஓம்' என்று உச்சரித்து 'ம்' என்ற ஒலியை நீட்டி, தீர்கமாக இசைக்கிறீர்கள் அல்லவா? அப்போது அந்த ஒலியுடன் இந்த நிருத்த கண்டா மணி ஓசையை இணைத்துக் கொண்டால் மந்திரம் ஓதுவதில் ஏற்படும் கால விரயக் குற்றத்திற்கு நிருத்த கண்டா மணி ஓசை ஒரு தெய்வீக பிராய சித்தமாக அமைந்து நீங்கள் கால விரயம் செய்த குற்றத்திலிருந்து விடுதலை பெறுகிறீர்கள். 

ஒவ்வொரு முறை காயத்ரீ மந்திரத்தை ஓதும்போதும் அந்த பிரணவ ஒலியை நிருத்த கண்டா மணி ஓசையுடன் இணைக்க வேண்டும் என்பது முக்கியம். எல்லா திருத்தலத்திலும் அமைந்த ஆலய மணியும் இவ்வாறு கால விரயக் குற்றத்தை நீக்கும் சிறப்புடையது என்றாலும், இதுவரை ஓதிய காயத்ரீ மந்திரத்தில் சேர்ந்த கால விரய தோஷத்தை நீக்க வல்லது சிதம்பரத்தல நிருத்த மணி ஓசையே ஆகும்.

ஒரு முறையாவது சிதம்பர திருத்தலத்தில் ஒலிக்கும் இம்மணி ஓசையை நன்றாகக் கவனித்து கேட்டு விட்டால், அதன் பின்னர் நீங்கள் எங்கு காயத்ரீ மந்திரத்தை ஓதினாலும் அத்துடன் மானசீகமாக இந்த நிருத்த கண்டா மணி ஓசையை எளிதில் இணைத்துக் கொள்ளலாம். 

இவ்வாறு ஒலியை ஒளியாக்கும் தெய்வீக வித்தையை நிருத்த கண்டா, சிகண்டி பூர்ண ஆலய மணிகள் இணைந்து விளங்குவதால் இன்றும் சிதம்பர திருத்தல பூஜையில் இவ்விரு மணிகளின் இணைந்த மணி ஓசையே பூஜை விதானமாக அமைந்து பிரபஞ்சம் எங்கும் அற்புத இறை சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அது போல எந்த அளவிற்கு சிதம்பர திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிகண்டி பூர்ண மணி ஓசையை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கேட்டு உணர்ந்து பக்தி கொள்கிறானோ அந்த அளவிற்கு அவன் என்றும் மாறா இளமையுடன் திகழ்வான் என்பது உறுதி. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிகண்டி பூர்ண மணியைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முன்னால் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக உண்மைகளில் ஒன்றே ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாடு. 

ஒலிக்கும் ஓசைக்கும் என்ன வித்தியாசம்? ஒலி என்னும் சொல் ஒரு பொருளிலிருந்து எழும் எல்லா வித சப்தத்தையும் குறிக்கும். ஓசை என்பது முறைப்படுத்தப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட ஒலியாகும். சப்த ஸ்வரங்களில் நெறிப்படுத்தப்பட்ட ஒலியை நாம் சங்கீதம், இசை, நாதம் என்கிறோம். இறை சக்தியுடன் மிளிரும் மணி ஒலியை நாம் ஆலய மணி ஓசை என்று அழைக்கிறோம். குறிப்பிட்ட வேத சக்திகளை ஆரவார வருண கீதமாக அள்ளி வீசும்போது அதை அலை ஓசை என்று வர்ணிக்கிறோம். 

எனவே ஒரு மனிதன் நெறியுடன், ஒழுக்கமுடன் வாழ்ந்து இறை மார்கத்தில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்குத் தேவையானது மணி ஓசையே. இவ்விதத்தில் முதன்மை இடத்தைப் பெறுவதே தில்லை சிதம்பரேசனின் ஆலய மணி ஓசையாகும். இந்த மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டு அது கூறும் உண்மையை ஆத்ம விசாரம் செய்து தன்னை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் எளிதில் தங்களை இறை நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு சிதம்பரம் திருக்கோயிலின் ஆலய மணி ஓசையைத் தொடர்ந்து கேட்கும் பாக்கியம் பெறாதோர் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த சிகண்டி பூர்ண மணியைக் கேட்டு ஆனந்தப் பரவசம் கொண்டு எஞ்சிய தங்கள் வாழ்நாளில் இறை பூஜையை மேற்கொள்ளும்போதெல்லாம் இந்த ஆலய மணி ஓசையை தங்கள் உள்ளத்தில் நிரப்பி வந்தால் அதுவே அனைத்து பூஜை பலன்களையும் நிறைவு செய்து உத்தம பலன்களை எல்லாம் வர்ஷிக்கும்.

முடிந்தால் உங்களது கைபேசியில் இந்த சிகண்டி பூர்ண மணியின் ஓசையினை பதிவு செய்துகொண்டு செல்லுங்கள் வாழ்வில் மன அழுத்தம் நேரும்போதெல்லாம் பதினைந்து நிமிடங்களாவது கண்ணை மூடி இந்த ஓசையினை கேளுங்கள் பரமானந்த அனுபவத்தில் மூழ்குங்கள்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com