கல்லூரி மாணவி சரிகாஷா மரணத்தைத் தொடர்ந்து கொணரப்பட்ட  கேலிவதை தடுப்புச் சட்டம்,1997!

தமிழ்நாட்டில் மாணவி சரிகாஷா மரணத்தை தொடர்ந்து கேலி வதையிலிருந்து பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 
கல்லூரி மாணவி சரிகாஷா மரணத்தைத் தொடர்ந்து கொணரப்பட்ட  கேலிவதை தடுப்புச் சட்டம்,1997!

கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி, சென்னை, எத்திராஜ் கல்லூரியில் பிபிஎம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரிகாஷா, கல்லூரி அருகேயுள்ள ஜூஸ் கடைக்கு தோழிகளுடன் சென்றிருந்தபோது, ஆட்டோவில் வந்த ரெளடிகள்... இவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அவர்களின் ஒருவன் அப்படியே சரிகாஷாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுக்க... நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சில நாட்களில் உயிரிழந்தார். அன்றுதான் அவருக்கு பிறந்த நாளும்கூட!

தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர். இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த வழக்கை நீதியரசர் கிருஷ்ணன் விசாரித்தார். இதில் 14, மார்ச், 2008  அன்று குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் மாணவி சரிகாஷா மரணத்தை தொடர்ந்து கேலி வதையிலிருந்து பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 

கேலிவதை தடுப்புச் சட்டம்,1997
The Tamil Nadu Prohibition of Ragging Act, 1997
சட்ட எண்: 7/1997

இந்தச் சட்டம் 1996- ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19 ஆம் நாளன்றே நடைமுறைக்கு வந்துவிட்டது.

பிரிவு 2. 
பொருள் வரையறைகள்: 

இந்தச் சட்டத்தில் சூழல் வேறு பொருள் குறித்தாலன்றி, “கேலிவதை செய்தல்” என்றால், கல்வி நிலையம் எதிலும் உள்ள மாணவரொருவருக்கு எதிராக இரைச்சல் கூடிய ஒழுங்கு     முறையற்ற நடத்தையை வெளிப்படுத்துவது என்றும், அவருக்கு உடலளவில் அல்லது மன அளவிலான கேட்டினை அல்லது அவமானத்தை அல்லது மனக்குழப்பதினை உண்டாக்குவது என்று பொருள்படும். மற்றும் அது,
(a) அத்தகைய மாணவரை சிறுகுறும்பு செய்து வெறுப்பூட்டுவதை தவறாகப் பயன்படுத்துவதை, அவரிடம் செயற்குறும்பு செய்து விளையாடுவதை, அல்லது அவருக்கு காயத்தை உண்டாக்குவதை; அல்லது,
(b) புதிய மாணவரை, செயல் எதனையும் செய்யுமாறு அல்லது சாதாரண நிலையில் அத்தகைய மாணவர் விரும்பிச் செய்யாத செயல் எதையும் செய்யுமாறு கேட்பதை உள்ளடக்கும். 

பிரிவு 3. 
கேலிவதை செய்தலை தடை செய்தல்:

கல்வி நிறுவனம் எதற்குள்ளுமோ அல்லது அல்லது வெளியேயோ “கேலிசெய்வதை” தடை செய்யப்படுகிறது. 

பிரிவு 4. 
கேலிவதை செய்வதற்குத் தண்டனை: 

கல்வி நிறுவனம் எதற்குள்ளுமோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலிவதை செய்கின்ற, அதில் பங்கு கொள்ளுகினற, அதற்கு உடந்தையாயிருக்கின்ற அல்லது அதனைப் பரப்புகின்ற எவரொருவரும், இரண்டாண்டுகளுக்கு நீடிக்கக்கூடியதொரு கால அளவிற்குச் சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்கப் பெறுதல் வேண்டும் என்பதோடு அவர் பத்தாயிரம் ரூபாய்கள் வரை நீட்டிக்கக்கூடிய பணத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுதலும் வேண்டும். 

பிரிவு 5. 
மாணவரைக் கல்வி நிறுவனத்திலிருந்து நீக்குதல்:

4-ஆம் பிரிவின்படியான குற்றச் செயலைச் செய்துள்ளதாக தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மாணவர் எவரும், கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய மாணவர் பிற கல்வி நிறுவனம் எதிலும் சேர்த்துக் கொள்ளப்படுதல் கூடாது. 

பிரிவு 6. 
மாணவரைத் தற்காலிகமாக கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கி வைத்தல்: 

(1) முன்சென்ற வகைமுறைகளுக்கு குந்தகமின்றி, கல்வி நிறுவனமொன்றின் தலைவரிடமோ, அல்லது அக்கல்வி நிலையத்தின் மேலாண்மைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரெவரிடமுமோ, மாணவரெவரும், கேலிவதை செய்வது குறித்து முறையீடு செய்கிறபோதொல்லாம், அத்தகைய கல்வி நிறுவனத்தின் தலைவரானவர் அல்லது அக்கல்வி நிறுவனத்தின் மேலான்மையைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரானவர் அது குறித்து உடனடியாக விசாராணை செய்தல் வேண்டும் என்பதோடு அது உண்மையானதென அறியப்படுமானால், அக்குற்றச் செயலைச் செய்துள்ள மாணவரை அக்கல்வி நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்தலும் வேண்டும். 

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி மாணவர் எவரும் கேலிவதை செய்வதில் ஈடுபட்டுள்ளார் என்னும்படியான, கல்வி நிறுவனத் தலைவரின் அல்லது கல்வி நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரெவரின் முடிவானது இறுதியானதாகும். 

பிரிவு 7. 
உடந்தையென கொள்ளப்படுதல்:

கேலிவதை செய்தல் குறித்த முறையீடொன்று செய்யப்படுகிற போது, கல்வி நிறுவனத்தின் தலைவரானவர் அல்லது அக்கல்வி நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரானவர், 6 –ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், குறித்துரைக்கப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதற்கு தவறுவராயின் அல்லது அது குறித்து அசட்டையாக இருப்பாராயின் “கேலிவதை செய்தல்” எனும் குற்றச் செயலைச் செய்வதற்கு அத்தகைய நபரானவர் உடந்தையாக இருந்தாரெனக் கொள்ளப்பட்டு அவர் 4 ஆம் பிரிவில் வகை செய்யப்பட்டவாறு தண்டிக்கப்படுதல் வேண்டும். 

பிரிவு 8. 
விதிகளை செய்வதற்கான அதிகாரம்: 

(1) மாநில அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படிச் செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வரும் என வெளிப்படையாக தெரிவிக்கப்படாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும். 
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும், அது செய்யப்பட்டதற்குப் பின்பு, கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும், அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ, அல்லது அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு, அப்பேரவை, அந்த விதியில் மாறுதல் எதனையும் செய்யுமாயின் அல்லது அப்பேரவை, விதி செய்யப்படக்கூடாது என்று முடிவு செய்யுமாவின், அவ்விதி, அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராமலே போகும். எனினும், அத்தகைய மாறுதலோ நீக்கமோ அந்த விதியின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமில்லாமல் இருத்தல் வேண்டும். 

பிரிவு 9. 
நீக்கமும் காப்பும்: 

(1) 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத் தடுத்தல் அவசரச் சட்டமானது, இதன் மூலம் நீக்கஞ் செய்யப்படுகிறது. 
(2) அவ்வாறு நீக்கஞ் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவும், அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்படுள்ளதாகவோ அல்லது எடுக்கப்பட்டுள்ளதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும். 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com