பட்டாசுத் தடை - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்!

'நீரி' தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும் என்றும் கூறுகிறார் டாக்டர் சாதனா.
பட்டாசுத் தடை - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்!

தீபாவளியின் போது டில்லி நகரம் புகை சூழ்ந்து மங்கலாக காட்சி அளித்தது. இரவில் மாசு இதை விடவும் அதிகமாக இருந்தது. டில்லியில் காற்றில் நுண்ணிய மாசுத் துகள்களின் அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 878 முதல் 1,179 மைக்ரோ கிராம் அளவுக்கு இருந்தாக டில்லி மாசுக்கட்டுப்பாட்டுக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் கடந்த ஆண்டு தீபாவளி அன்று பட்டாசு புகையால் காற்று மாசு இருமடங்கு அதிகரித்ததை அறிவோம். சரி, பட்டாசு தடையை பற்றிப் பார்ப்போம்.


பட்டாசுகளின் வளர்ச்சி...

முதலில் சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீறிப்பாய்ந்து சென்று வெடிக்கும் வாணங்களை உருவாக்கினர். 1279 ல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டனர். சீனாவுக்கு வந்து சென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். 7 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளை சீன அம்புகள் என்று குறிப்பிட்டுள்ளனர். 1240 ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர். ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயணி மார்கோகோபோலோ இந்த தொழில்நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றார் என்கிறார்கள். சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300 களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின. தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830 ல் துவங்கியது. பல வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாக சீனாவில் கொண்டாடுகின்றனர்.

தமிழகத்தில் பட்டாசு...

1922-இல் கல்கத்தாவில் ஜப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928-இல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது.

உச்சநீதிமன்ற வழக்கு...

டில்லியை சேர்ந்த 3 மாத குழந்தையும், 14 மாதக் குழந்தையும் தொடர்ந்த வழக்கு W.P (CIVIL) No. 728/2015 24, செப்டம்பர் , 2015 அன்று தாக்கல் செய்யப்பட்டது. டில்லியில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஆஸ்துமா, இருமல், நெஞ்சக நோய், நரம்புத் தளர்ச்சி, உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதால் இவ்வழக்கு தொடரப்பட்டது.

இந்திய உச்சநீதிமன்றத்தின் முன் வாதாடிய வழக்குரைஞரான பல்லவி பிரதாப் இது குறித்து பேசுகையில் ''சுத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்த இந்த தடையானது ஒரு சிறு தியாகம்'' என்கிறார். சில வருடங்களுக்கு முன் தீபாவளியன்று பட்டாசு விபத்தில் கிட்டத்தட்ட பார்வையற்றவராகவும் மற்றும் நிரந்தர தழும்புகள் கொண்டவராகவும் மாறியவர் பல்லவி பிரதாப். ''கலாசாரத்தை நிலைநிறுத்த பட்டாசு வெடிப்பது ஒரே வழியல்ல. என்னுடைய மருமகள் சுவாச கோளாறுகளால் குறிப்பாக தீபாவளியை ஒட்டிய நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுவார். அவள் மூச்சுவிட கையடக்க கருவியான நெபுலைசர் தேவைப்படுகிறது'' என்கிறார்.

தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்...

தீபாவளி மற்றும் தசராவின் போது காற்று மாசு உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள அளவை விட 29 மடங்கு அதிகரிக்கிறது.

பட்டாசு வெடிப்பதிலிருந்து சல்பர்-டை-ஆக்சைடு (SO2 . ) , நைட்ரஸ் ஆக்சைடு(NO2 , ) அலுமினியம்(Al), கந்தகம்(S),பொட்டாசியம் (K), குளோரின் Cl2, பேரியம்(Ba),ஸ்டோன்டியம் Sr,கால்சியம்(Ca,)தாமிரம்(Cu), துத்தநாகம்,(Zn), ஆண்டிமணி( Sb) போன்ற விஷ வாயுக்கள் மற்றும் வாயுக்கரைசல்கள் எனப்படும் துகள் பொருள் (Particulate Matter) PM10 மற்றும் PM2.5 வெளியீடு மிக அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய சுற்றுச் சூழல் சமர்ப்பித்த “தீபாவளி கண்காணிப்பு அறிக்கை 2018’ இதை உறுதி செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால், அந்த இடத்தின் காவல் நிலைய அதிகாரி பொறுப்பாக்கப்படுவார், பிறகு அவர்மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதி ஏ.கே சிக்ரி மற்றும் நீதிபதி அஷோக் பூஷண் அடங்கிய நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.


இவ்வழக்கில் தன்னை இடைவாதியாக சேர்த்துக் கொண்ட மரு. அரவிந்த குமார் சுவாச பிரச்சினை, கார்டியோ வாஸ்குலர் அமைப்பு (மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம்), நரம்பு மண்டலம் (பக்கவாதம் மற்றும் வளர்ச்சி குழந்தைகளில் அசாதாரணங்கள்) நோயாளிகள் இந்தப் பண்டிகை காலங்களில் அதிக எண்ணிக்கையில் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இவ்வழக்கில் தன்னை இடைவாதியாக சேர்த்துக் கொண்ட கௌரி மௌலேகி காற்று மற்றும் இரைச்சல் மாசினால் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நரம்பு மண்டல அமைப்பு, இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், இதய ஆரோக்கியம், அறிவாற்றல் மற்றும் தூக்கம், நோய் எதிர்ப்பு அமைப்பு, டிஎன்ஏ ஒருங்கிணைப்பு மற்றும் மரபணு வெளிப்பாடு, பால்கொடுக்கும் விலங்கினங்களின் பால் அளவு குறைந்துவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு 23.10.18 வெளியாகியது. அப்போது நீதிபதிகள், நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க முடியாது இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், அரசியலமைப்பு சரத்து 48A மற்றும்51(A)g இன் படி சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. சரத்து 19 (1) (g) இன் படி பாதிப்புகளை விளைவிக்கும் என்பதால் தொழில், வர்த்தகம் அல்லது வாணிகம் செய்யும் உரிமையை கோர முடியாது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். ( பாரா 49)

  • குறைந்த மாசுள்ள மற்றும் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்.

  • குறைந்த மாசுள்ள மற்றும் பசுமை பட்டாசுகள் தயாரிப்பு, விற்பனை தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

  • அதிக மாசுள்ள பட்டாசுகள் தயாரிப்பு, விற்பனை தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

  • ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடையாது, மீறினால் அது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.

  • பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் முழுதும் தடை செய்யப்படுகிறது.

  • உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.

  • விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

  • தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரையும், கிருஷ்துமஸ் , புத்தாண்டில் இரவு 11.55 - 12..00 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

'பசுமை பட்டாசு' என்றால் என்ன? 

பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு. இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம். பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசு, வெடிக்கும்போது குறைவாகவே மாசுபடுத்தும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், ஜனவரி மாதத்தில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பாக பேசினார். அதன்பிறகு, அவரது அறிவுறுத்தலின் பேரில் பசுமை பட்டாசு பற்றிய ஆராய்ச்சிகளை 'நீரி' தொடங்கியது

பசுமை பட்டாசுகளில் எத்தனை வகைகள் உள்ளன?

'நீரி' தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும் என்றும் கூறுகிறார் டாக்டர் சாதனா. பாரம்பரிய பட்டாசுகளில் இருந்து மாறுபட்ட பசுமை பட்டாசுகளை 'நீரி' நான்கு வைகைகளில் தயாரித்துள்ளதாக டாக்டர் சாதனா கூறுகிறார்.

  1. தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்: இந்த வகை பசுமை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு 'வாட்டர் ரிலீசர்' என்று 'நீரி' பெயரிட்டுள்ளது. மாசை குறைக்கும் முக்கியமான காரணியாக தண்ணீர் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் பல இடங்களில் மாசு அளவு அதிகரித்திருந்த சமயத்தில் மாசு அளவை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் தெளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

  2. கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக வெளியிடுகிறவை:இந்த வகை பசுமை பட்டாசுகளுக்கு STAR பசுமை பட்டாசு என்று 'நீரி' பெயரிட்டுள்ளது. அதாவது Safe thermite cracker என்பதன் சுருக்கமாக STAR என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidizing Agent) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு சிறப்பு வகை வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

  3. அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படுகிறவைசாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது இந்த வகை பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminum) என்ற பெயரிடப்பட்டுள்ளது.

  4. அரோமா பட்டாசு: இந்த வகை பட்டாசுகளை வெடிக்கும்போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.

வருடம் முழுதும் தயாரிக்கும் பட்டாசுகளை ஒரே நாளில் வெடித்து அதனால் ஏற்படும் மாசு பாதிப்பை அனுபவிப்பது மனித இனம் மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுமே ஆகும். இந்தியாவில் நூற்றாண்டுக்கும் குறைவாக பயன் பாட்டிலுள்ள, காசைக் கரியாக்கும், பட்டாசு வெடித்தலை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நிறுத்துவதே சாலச் சிறந்தது. புகைப்பிடித்தலால் வெளியிடப்படும் நச்சுக் காற்றை விட ஆபத்தான வாயுக்கள் வெளியேற்றும் பட்டாசுகளை பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்தது போல் தடை செய்வதே வருங்கால சந்ததியினருக்கு நல்ல சுற்றுச்சூழலை விட்டுச் செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com