மலராத மறுமலர்ச்சியும் வைகோவின் வளர்ச்சிப் பாதையும்..!

"அரசியல்" இந்த ஒற்றைச் சொல்தான் உலகம் முழுமைக்குமான வரலாற்றை அன்றும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறது.
மலராத மறுமலர்ச்சியும் வைகோவின் வளர்ச்சிப் பாதையும்..!

"அரசியல்" இந்த ஒற்றைச் சொல்தான் உலகம் முழுமைக்குமான வரலாற்றை அன்றும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறது. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரையிலான வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கின்ற போது மக்களுக்கான நலன்களை சிந்தித்து, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்த மன்னர்களும், சமூகச் சீர்திருத்தங்களைச் செய்த, அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சி, சுதந்திரம் போன்றவற்றை புரட்சியின் வாயிலாக ஏற்படுத்திய தலைவர்களையும்தான் நாம் கொண்டாடுகிறோம். 

ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலை தலைகீழ் பாடமாக மாறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அறிக்கை அரசியல், பெட்டி அரசியல், பதவி அரசியல், ஜாதி அரசியல், வாக்கு அரசியல் என தரம் தாழ்ந்து போய் இருப்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. அதையும் தாண்டி இந்த அரசியல் நீரோட்டத்தில் தூய்மையானவர்களாக தங்களை காட்டிக் கொண்டிருப்போர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அவ்வாறு தமிழக அரசியல் வரலாறு குறித்து நாம் பேசும் போது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் வை.கோபால்சாமி. 

வைகோ என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் அவர் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் பிறந்தார். 1964 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் ஹிந்தி எதிர்ப்பு கருத்தரங்கத்தில் முதன் முதலாகப் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992-ல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று பழி சுமத்தப்பட்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அவரின் அரசியல் பயணம் மிக நீண்டதாக இருக்கிறது. அவர் மதிமுக தொடங்கிய போது திமுகவில் இருந்து பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அவர் கட்சியில் வந்து இணைந்தனர் என்றாலும் தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் அவர் இன்னும் வரவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

1996-ம் ஆண்டு முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் வைகோவின் மதிமுக போட்டியிட்டது. திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து அந்த தேர்தலை சந்தித்தது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. வைகோ தான் போட்டியிட்ட விளாத்திகுளம், சிவகாசி ஆகிய இரு தொகுதிகளிலும் தோற்றார். 

பின்னர் 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாயை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார். ஊழல் கட்சி என்று அ.தி.மு.க. வை விமர்சித்த வைகோ அ.தி.மு.க.வுடனேயே கூட்டு சேர்ந்து அத்தேர்தலில் சிவகாசியில் போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். அப்போது வாஜ்பாய் தலைமையிலான அரசில் வைகோவுக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்க தயாராக இருந்தனர். ஆனால்  அதனை அவர் தவற விட்டார். 

இதையடுத்து உடனடியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. அப்போது தன் மீது கொலைப் பழி சுமத்திய தி.மு.க. கூட்டணியில் வைகோ இடம் பெற்றமை கடும் விமர்சனத்துக்குள்ளானது.  2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியை சேர்ந்தவருக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

ஆனால் 2009-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத் தழுவினார். 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார். ஆனாலும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதா கூறி, பின்னர் கடைசி நேரத்தில் அந்த முடிவில் பின் வாங்கினார். அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியை விட்டு விலகினார். 

இது போன்ற சமரசங்களும், தவறான முடிவுகளும்தான் அவரின் வளர்ச்சியின்மைக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். என்றாலும்  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்த வைகோ, இரண்டாண்டுகள் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இதுவரை இவர் கையில் எடுக்காத மக்கள் பிரச்னைகளோ, போராட்டங்களோ இல்லை எனலாம். தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாக பார்க்கப்படும் வைகோ, தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளில் உடனுக்குடன் குரல் கொடுப்பவர். 

ஈழத்தமிழர் பிரச்னை தொடங்கி காவிரி நீர் விவகாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது ஒழிப்பு என தொடர்ச்சியாக எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து போராடிவரும் அவர் முதல்வர் பதவியை நோக்கி தன்னையும் தன்கட்சியையும் நகர்த்திச் செல்லாதது ஏன்..? தேசதுரோக வழக்குகள், மிசா, தடா, பொடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் சந்திதிருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர். என்றாலும் நடப்பு அரசியலுக்கு தகுந்த முடிவுகளை எடுக்காமல் அவர் தனியாக வேறு பாதையில் தன் பயணத்தை நடத்துகிறார். இது அவரது கட்சி சார்ந்த பிற தலைவர்களுக்குமே அதிருப்தியை கொடுத்து விடுகிறது. 

சமீபத்தில் அவரது அரசியல் நடவடிக்கைகளை கவனித்தாலே அது இன்னும் தெளிவாகவே தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுவாதாக சொல்லப்படுகிறது. அப்போது கூட வைகோ தன் கட்சியை பலப்படுத்தவோ, ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்திலோ அவரது செயல்பாடுகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தின் போது அவரது அரசியல் பணி சீமகருவேல மரம் அகற்றுதலில் இருந்தது. அது ஒரு நல்ல செயல்தான் என்றாலும் சூழலுக்கு பொருத்தமில்லாத ஒரு செயலாகவே அது பார்க்கப்பட்டது. 

அதுபோல் இப்போது தில்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தேசதுரோக வழக்கில் மனுத்தாக்கல் செய்து என்னை கைது செய்யுங்கள் என்றும் ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி சிறைக்கு சென்றிருக்கும் வைகோவின் அரசியலை என்னவென்று சொல்வது.

ஏற்கனவே வைகோ, பணம் வாங்கி கொண்டு ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் மீது பரவலான ஒரு குற்றச்சாட்டு தேர்தல் நேரத்தில் நிலவியது. அப்படி இருக்க தொடர்ந்தும் அவரது அரசியல் நடவடிக்கைகள் சூழலுக்கு ஒட்டாத ஏதோ ஒரு வெளிவட்டத்தில் சுற்றுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

தற்போது அவரது இந்த சிறை நடவடிக்கைக்கு பின்னால் வேறு ஏதும் நுண் அரசியல் இருக்குமோ என்றும் விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய சில மாறுதல்கள் நடக்க கூடும் அதில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளவே இவ்வாறு அவர் செயல்படுகிறாரோ என்ற ஐயப்பாடும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எது எப்படியோ கொள்கை அரசியல் என்பது  ஒருபக்கம் இருந்தாலும் தன் கொள்கைப் பிடியில் இருந்து கொண்டே கால நேரத்திற்கு ஏற்ப முடிவெடுத்தல், பிறக் கட்சிகளுடன் தேவைக்கேற்ப சரியான கூட்டணி அமைத்தல், சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ற மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுத்தல், போன்ற பல்வேறு சாணக்கியத்தனம்தான் அரசியலில் வெற்றி மகுடத்தை ஒரு தலைவனுக்கு கொடுக்கும் என்பதே உண்மை அத்தகைய சாணக்கியத்தனம் வைகோவிடம் இருக்கிறதா என்பதை கடந்த காலமும் எதிர்காலமும் சொல்லட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com