ஓபிஎஸ் - இபிஎஸ்: ஓர் ஒப்பீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதற்குப் பிறகு  தமிழகத்தில் எந்த நேரமும் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற பேச்சு ஒருபக்கம் பரவலாக ..
ஓபிஎஸ் - இபிஎஸ்: ஓர் ஒப்பீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதற்குப் பிறகு  தமிழகத்தில் எந்த நேரமும் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற பேச்சு ஒருபக்கம் பரவலாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாத காலங்களில் எப்படி எல்லாம் மக்கள் பணி ஆற்றியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான் தான் என்று சொல்லிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலத்தை விட எடப்பாடி காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று மக்கள் சிந்தித்து வைத்திருப்பதோடு ஆங்காங்கே டீ கடை போன்ற பொது இடங்களில் சில கருத்துக்களை முனுமுனுப்பதையும் கேட்க முடிகிறது. 

ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பி.எஸ் முதல்வராக பொறுப்பேற்றப்பின் ஜல்லிக்கட்டு பிரச்சனையை கையாண்ட விதம் சற்று தாமதமானாலும் அதன் முடிவு வரவேற்கத்தக்க வகையில் அமைந்தது என்றும் அதேசமயம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த அரசு பல்வேறு பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக  திருப்பூரில் மாணவர்கள்  போராட்டம் நடத்தினர்.  அப்போது  போராட்டத்தை கலைக்க முயன்ற  போலீசார் மாணவர்களின் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதே போன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாயிகளுக்கு  ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் போலீசார்  அத்துமீறி நடந்துக் கொண்டனர்.  

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற  இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டார். கத்திப்பாரா சாலைக்கு பூட்டு போட்டு நடத்திய போராட்டத்திலும் கெளதமன் உட்பட போராட்டக்காரகள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்மணியை கன்னத்தில் அறைந்து தாக்கிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்படி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கான உதாரணமாக நாம் பல விஷயங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதற்கிடையில் மக்களுக்கு அடிப்படை தேவையான பருப்பு வகைகளை ரேஷன் கடைகளில் வழங்குவதை எடப்பாடி பழனிச்சாமி அரசு நிறுத்தியுள்ளது. தமிழக விவசாயிகள் கடந்த 31 நாட்களாக தில்லியில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி அரசு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

அதே போல் நீட் தேர்வு , ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கிடப்பில் போட்டுள்ளதாகவே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதும், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம், மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற வகை செய்யும் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதற்கான பணிகளாவது தொடங்கியதா, மூடிய டாஸ்மாக் கடைகளின்  ஊழியர்களுக்கான மாற்று வேலை குறித்து அறிவிக்காதது ஏன், என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசியல் ஞானமோ, அனுபவமோ இல்லாதவர் இல்லை. 

1972ல், அ.தி.மு.க.,வில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளை செயலாளராகவும், 1983ல் ஒன்றிய இணை செயலாளராகவும், அ.தி.மு.க.,வில் பதவி வகித்தார். 1989ல், அ.தி.மு.க.,வில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. ஜெ., அணியில், இடைப்பாடி தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். 1991ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். 

கடந்த, 2016ல், நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்து பழுத்த அனுபவமும் அரசியல் ஞானமும் பெற்ற அவர் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தன்னிச்சையாக செயல்பட்டதாகவோ முடிவுகள் எடுத்ததாகவோ தெரியவில்லை.

ஆனாலும் தென் தமிழகத்தில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க உத்தரவிட்டிருப்பதையும் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு குடிநீர் திட்ட பணிக்களுக்கு ரூ.100 கோடியை ஓதுக்கீடு செய்திருப்பதையும் மறுக்க முடியாது. அந்த வகையில் சிறப்பாக செயல்பட முடிந்த ஒரு முதல்வருக்கு இருக்கும் தடைகள் என்ன என்ற கேள்வியோடு ஓ. பன்னீர் செல்வம் மீதும் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். 

பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்து சிறப்பு சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் வர்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யக் கோரி ரூபாய் 22,573 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும், வறட்சி நிவாரண நிதியாக ரூபாய் 39,565 கோடியும் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பினார்.

தற்போது மத்திய அரசு வர்தா புயல் நிவாரன நிதியாக ரூபாய் 266 கோடியும், வறட்சி நிவாரண நிதியாக ரூபாய் 2014 கோடி  ஒதுக்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு ஒதுக்கியுள்ள இந்த நிதி போதுமானதாக இல்லை என்பதே அனைத்து தரப்பினரின் கருத்து. எனினும் வர்தா புயலின் போது நிவாணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு சென்னையை புயலின் சுவடே தெரியாமல் மிக விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மக்களின் பாராட்டையும் பெற்றார்.

மேலும் எண்ணூரில் எண்ணெய் படலம் அகற்றும் பணியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தன்னை ஒரு எளிமையான முதல்வராகவும் காட்டிக் கொண்டார். இவையெல்லாம் ஓரளவு அவர் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதேசமயத்தில் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகியதும் அவரின்  செயல்பாட்டில் உள்ள முரண்களையும் மக்கள் கவனிக்க தவறவில்லை.

முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்காமல் பதவி பறிபோன பின் அதை அரசியலுக்காக கையில் எடுத்து நாடகமாடுவது ஏன்.. கே.பி முனுசாமி முதலில் சொல்லும் போதெல்லாம் அதன் உண்மையை உணராத பன்னீர் செல்வம் பதவி பறிபோனதும் உணர்ந்தது மெளன அஞ்சலி செலுத்தியது எப்படி..

வாக்கு அரசியலுக்காக உங்களின் பெரும்பதிப்பிற்குரிய அம்மா அவர்களின் சவப்பெட்டி மாதிரியை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் போது மனசாட்சி உங்களை எந்த கேள்வியும் கேட்க வில்லையா என்பது போன்ற பலகேள்விகளையும் அதே சாமானியர்கள்தான் முன்வைக்கின்றனர். இதெற்கெல்லாம் எந்த அரசியல் உத்தமர்களிடம் பதில் இருக்குமோ காலத்திற்கே வெளிச்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com