சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் அல்லோகலப் பட்டுக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் அல்லோகலப் பட்டுக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கினால் அரசு இயந்திரம் இயங்குகிறதா என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

தொட்டதெற்கெல்லாம் தெருவில் வந்து போராடவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு திட்டங்கள் வெறும் திட்டங்களாகவே மட்டும் உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலும் கட்சியை கைப்பற்றவும் மட்டுமே திட்டம் போட்டு அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆளும் தரப்பினரிடம் கோடை நேரத்திற்கான ஒரு தண்ணீர் பந்தலை கூட எதிர்பார்க்க முடியாமல் மக்கள் தவித்துள்ளனர்.

நாற்காலி சண்டையில் சசிகலா தரப்பு, ஓ. பன்னீர் செல்வம் தரப்பு,  தீபா தரப்பு என மூன்று கால்களை பார்த்த நமக்கு இப்போது நாற்காலியின் 4 வது காலாக முளைத்திருப்பது சசிகலா புஷ்பா. ஆம் இவருக்கும் முதல்வர் நாற்காலி மீது இப்போது ஆசை வந்திருப்பதுதான் விந்தையான ஒன்று. 

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த அவருக்கு அ.தி.மு.க பிரமுகர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் அரசியல் ஆசை ஏற்பட்டு கட்சியில் தன்னை மிகுந்த பிரயத்தனத்திற்கு பிறகு இணைத்துக் கொண்டார்.

அதுமுதல் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை பெற்ற அவர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட  நெருக்கம் காரணமாக  மேயர் பொறுப்பு, மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு, மாநில மகளிரணி செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இப்படி வளர்ச்சிப் படியிலேயே சென்று கொண்டிருந்த அவருக்கு ஒரு ஆடியோ கசிவுக்குப் பின் வீழ்ச்சி ஏற்பட்டது.

சொந்த கட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய அந்த ஆடியோ பதிவு கட்சியின் தலைமைக்கு கிடைத்ததோடு வலைத்தளங்களிலும் பரவி அவரது இமேஜை கெடுத்தது. அதன்பிறகு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள், அவருடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் போன்ற நிகழ்வுகளும் அவரது அரசியல் செல்வாக்கை அசைக்க தொடங்கியது.

இதையடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக மறுத்ததோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை ஊடங்களில் பேசி தன்னை ஒரு நியாயவாதியாக காட்டிக் கொள்ள முயன்றார். இந்த பரபரப்புக்கிடையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

அதன்பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு, ஆட்சி அதிகார வர்க்கத்தின் மோதல், அரசியல் பரபரப்பு, வருமான வரி சோதனை, இடைத் தேர்தல் ரத்து, என அடுத்தடுத்து பல்வேறு சுனாமி அலைளுக்குள் சிக்கி தமிழகம் தவித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் அடுத்து என்ன நடக்குமோ என்று யோசிக்க கூட முடியாத நிலையில் முதல்வர் நாற்காலியின் நான்காவது காலை கரம்பற்றி எனக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சசிகலா புஷ்பா வார இதழுக்கு பேட்டி கொடுத்திருப்பதை பார்த்து நகைப்பதா, திகைப்பதா என்று தெரியாமல் மக்களும் விக்கித்துள்ளனர்.

வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், அக்கட்சி நிலைத்திருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால், எந்தக் கட்சியிலிருந்து முதல்வராக வருவேன் என்பதையெல்லாம் சொல்லமுடியாது. ஆனால், தமிழகத்தின் முதல்வர் ஆவதே என் லட்சியம். தமிழக மக்கள் அனைவரது எதிர்பார்ப்பும் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தக்க சூழ்நிலை வரும்போது பெரிய அளவில் களத்தில் இறங்குவேன். நீங்கள்தான் எங்கள் சி.எம்-மாக வரவேண்டும்' என்றெல்லாம் நிறைய இடங்களில் மக்கள் என்னிடம் சொல்கிறார்கள் என்று அவர் கூறியிருப்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்றுதான் தெரியவில்லை.

அவரது இந்த பேட்டியின் பின்னணியில் இருக்கும் முக்கிய பிரமுகர் யார், ஆரம்ப காலகட்டத்தில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சிக்கு உதவி புரிந்ததாக சொல்லப்படும் வைகுண்டராஜன் தற்போது டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிகிறது. அப்படி இருக்க இவரின் முதல்வர் கனவுக்கு பக்கபலமாக, செயல்படும் பெரும் புள்ளி யாராக இருக்க கூடும் என்றும் மக்கள் வினவ தொடங்கியுள்ளனர்.

அதோடு தமிழக முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் சசிகலா புஷ்பாவின் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மக்கள் அவரிடம் சில கேள்விகளையும் முன்வைக்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் முறையான குடிநீர் வசதி, சாலை வசதி அங்கு அமைக்கப்படவில்லை. 

திருச்செந்தூர், உவரி, மணப்பாடு, எட்டையபுரம் போன்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த போதும், மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தும் இதுவரை அவர் என்ன செய்து கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் - ஆறுமுகநேரி இடையே 10 கிலோமீட்டர் தொலைவில் ரயில் இணைப்பு பாதை ஒன்றை ஏற்படுத்தினாலே திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க முடியும் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆனால் தமிழக முதல்வர் நாற்காலிக்கு மட்டும் அனைவரும் ஆசைப்படுகின்றனர். அந்தவரிசையில் தற்போது சசிகலா புஷ்பாவும் சேர்ந்திருப்பது உண்மையில் அந்த நாற்காலியை நகைப்புக்குள்ளாக்கி இருப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். 
                                                                           - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com