ராஜதந்திரம் இல்லாத ராஜா மகன்: சும்மா அதிருது ஸ்டாலினின் வாக்குமூலம்

அரசியல் என்பது திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஒரு களம். அந்த திட்டம் என்பது மக்கள் நலன் சார்ந்தும் நாட்டின் வளம்
ராஜதந்திரம் இல்லாத ராஜா மகன்: சும்மா அதிருது ஸ்டாலினின் வாக்குமூலம்

அரசியல் என்பது திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஒரு களம். அந்த திட்டம் என்பது மக்கள் நலன் சார்ந்தும் நாட்டின் வளம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால் இன்றைய அரசியல் சூழல் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில் ஏகோபித்த குரலில் ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது.

தமிழகத்துக்கு இது போதாத காலாமோ என்னவோ தெரியவில்லை. சமீபகாலமாக நடக்கும் பல்வேறு தொடர் போராட்டங்களும் உண்ணா விரதங்களுக்கும் இடையில் ஆளும் தரப்பினர் உட்கட்சி பூசலால் பிளவுபட்டிருப்பதோடு, எந்த ஒரு மக்கள் பணியையும் முறையாக செய்யாமல் ஆட்சியையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் பிளவுபட்ட இரு அணிகளும் ஒன்று சேர்வதற்காக குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில் ஆடும் நாடகம் வேறு, மக்களை மேலும் வெறுப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இன்றைய ஸ்திரமற்ற ஆட்சியினால் அரசு திட்டங்களும் அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளும் கேலிக் கூத்தாக இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் இருக்கலாம். ஆனால் ஆளும் கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டு பிளவுப்பட்டால். அது அக்கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லதாக இருக்காது என்பது அனைவரும் அறிந்தது. அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சியின் செயலாடுகளைத்தான் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். இப்படியான ஒரு அசாதாரண சூழலில் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வருமே ஆனால் எதிர்கட்சி ஆளும் கட்சியாகும் வாய்ப்பை பெரும் என்பது பொதுவான ஒரு கருத்து. 

எனவே எந்த ஒரு எதிர்க்கட்சியும் இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்றுதான் எண்ணும். அதற்கான முன்னெடுப்புகளைத்தான் அந்த எதிர்கட்சி தலைவர் செய்வார். அதில் அரசியல் ரீதியான அநீதிகள் எதுவும் இருப்பதாக வரலாறு நமக்குச் சொல்லவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்றைய சூழலில் செயலற்ற அரசு என்பது மக்களுக்கு வாய்த்த ஒரு சாபம் என்றால் செயல் திறனற்ற எதிர்கட்சி இன்னொரு சாபமாக இருப்பதுதான் பரிதாமான ஒன்று.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவான நாளில் இருந்தே தமிழக அரசின் செயல்பாடுகளும் மூர்ச்சையாகி போனது என்று சொன்னால் அதுமிகையில்லை. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போதும், வந்த பின்னும் எத்தனையோ நலத்திட்டங்களை அறிவிக்கும் அரசு, அதேவேகத்தில் செயல்பட்டு திட்டங்களை நிறைவு செய்கிறதா என்றால் இல்லை என்பதை கிடப்பில் கிடக்கும் திட்டங்களே நமக்குச் சொல்லும். அவ்வாறு கிடப்பில் கிடக்கும் திட்டங்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக தேவையற்ற பிரச்னைகளை கையில் எடுக்கிறதே தவிர மக்களின் தேவைகளையும் சூழல்களையும் உணர்வதே இல்லை. இன்று நாம் கண்கூடாக பார்க்கக்கூடிய வறட்சி, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை தொடங்கி குடிநீர் விவகாரம் வரைக்கும் எல்லா விசயங்களுக்கும் மக்களே வீதியில் இறங்கி குரல் கொடுக்க வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளோம். 

எதிர்க்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் போதுமா.. ஒரு நாள் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தவிர மக்களுக்கு இதனால் என்ன நடந்து விடப்போகிறது. 40 நாட்களுக்கு மேலாக தில்லியில் விதவிதமாக போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்க எந்த எதிர்க்கட்சியும் களம்  இறங்க வில்லை. ஆளும்கட்சியும் இதில் அக்கறை செலுத்தவில்லை என்பதோடு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கேள்விக் குறியாக இருக்கும் வேளையில் அணி சேருவதற்கு குழு அமைத்து பேச்சு வார்த்தை நடப்பதும் அதற்காக மெனக்கிடுவதும் வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானதும் கூட.  

தமிழகத்தின் இந்த அசாதாரண சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாள் விழாவில் பேசும் போது 'தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் இன்று ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசுத் துறைகளில் ஊழல் நடைபெறுவது மக்களுக்கு தெரிந்தால், மக்கள் என்னிடம் தெரிவிக்கலாம். அதன் மூலம் ஊழலை வெளிக்கொணர முடியும். இதற்காக தி.மு.க உணர்வாளர்கள், மக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பேசுகிறார். ஊழல் இப்போதுதான் நடக்கிறதா. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் புதிதாக நீங்கள் இப்போது ஊழலை கண்டுபிடித்து விட்டது போல் பேசி உள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது. அதற்காக ஊழல் எதுவும் இல்லை என்பதல்ல வாதம்.

எல்லோருக்கும் தெரிந்த அந்த விசயத்தை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு தேர்தல் நேரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மக்களை சந்தித்த உத்வேகமான தளபதியாக இப்போது களம் இறங்கி வாருங்கள் மக்கள் பிரச்னை எத்தனையோ கிடப்பில் இருக்கிறது. அத்தனைக்கும் தீர்வு காண உங்களோடு மக்களும் அணிதிரள தயாராக இருக்கிறார்கள்.. ஆனால் அதை விடுத்து தற்போதுள்ள அரசியல் சூழலில் கருணாநிதி நன்றாக செயல்படும் நிலையில் இருந்தால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நீங்கள் பேசியிருப்பது.. உங்கள் செயல்திறன் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் தோல்வியை ஒப்புக் கொள்வது போல் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. உங்களின் இந்த பேச்சால் தொண்டர்களும் அதிருப்த்தியில் இருப்பதை உணர முடிகிறது. 

தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பங்கு மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்றே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக என்பது இப்போது மு.க.ஸ்டாலின்தான். அவர் தன் தந்தையை பாராட்டுவதிலும், பெருமிதம் கொள்வதிலும் தவறில்லை ஆனால் தாய் எட்டு அடி குட்டி 16 அடி என்று சொல்வது போல ஸ்டாலின் தன் முழு திறமையையும், ராஜ தந்திரத்தையும் காட்ட வேண்டிய தருணம். இந்த நேரத்தில் கருணாநிதி நலமுடன் இருந்திருந்தால் என்று அவர் பேசி இருப்பது அவரின் செயல்திறனை குறைத்து மதிப்பிடச் செய்யும் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மைதான் 

கருணாநிதி நலமுடன் இருந்திருந்தால் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த வேளையிலேயே தமிழகத்தை புரட்டிப் போட்டிருப்பார். 

கருணாநிதி நலமுடன் இருந்திருந்தால்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களம் இறங்கிய இளைஞர்களை திமுகவின் தேர் சக்கரங்களின் அச்சாணி ஆக்கி இருப்பார். 

கருணாநிதி நலமுடன் இருந்திருந்தால். தில்லியில் கருத்து முரண்பட்ட தலைமை இருந்தாலும் தன் வார்த்தைக்கு செவிசாய்க்க வைத்து விவசாயிகள் போராட்டத்தை முற்று  பெறச் செய்திருப்பார்.

கருணாநிதி நலமுடன் இருந்திருந்தால்.. வறட்சியால் வாடி நிற்கும் தமிழகத்திற்கு தன் வார்த்தைகளால் தண்ணீரை பெற வேண்டிய இடத்தில் பெற்று அரசியல் வெற்றிடத்தை நிரப்பி இருப்பார்.

இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.. அப்படி ஒரு பலம் பொருந்திய ராஜா மகன்  மு.கஸ்டாலினின்  ஒவ்வொரு செயல்பாட்டையும் அனைவரும் நுணுக்கமாக கவனித்து வருகின்றனர் என்பதையும்  கடந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்குப் பின்னால் கருணாநிதி இருக்கிறார் என்பதையும் உணரவேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் என்ற ஆளுமைக்குத்தான் வாக்குகள் காத்திருக்கின்றன. எனவே தன்னை தந்தைக்கு மிஞ்சிய தனையனாய் காட்டிக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. 

முன்பெல்லாம் திமுக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறது என்றால் ரஜினி பாணியில் சொன்னால் தமிழகம் சும்மா அதிருதில்ல என்று இருக்கும். மு.க. அழகிரி தென்மாவட்ட தலைவராக இருந்த போது தென் மாவட்டங்களில் திமுகவின் பலம் மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால் தற்போது எப்படி என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை உணரவேண்டும். அதே போல் திமுகவின் உட்கட்சி தேர்தல் வந்தால் அதே பழைய முகங்களை மக்களுக்கு காட்டாமல் புதிய உத்வேகமான அடுத்தக் கட்ட தலைவர்களை மக்களுக்கு காட்ட வேண்டிய அவசியமும் இருப்பதை கட்சி தலைமை உணரவேண்டும். 

மேலும் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க விரும்பும் கட்சி கால சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப போராட்ட யுக்திகளை மாற்ற வேண்டும். ஒரு கட்சியை, அரசை எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு மீண்டும் மீண்டும் பழைய பல்லவிகளை பாடிக் கொண்டிருப்பதை விடுத்து தேவைக்கேற்ப அரசியல் களத்தில் நின்று போராட வேண்டும் என்றே இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர்.

இன்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரிமாறும் இளைய தலைமுறையினருக்கு கட்சியின் கொள்கையும் செயல்பாடும் உடனுக்குடன் சென்று சேர்த்து இளம் தலைவர்களை உருவாக்குங்கள். தாய் மொழி என்பது அனைவரது உரிமை. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாய முதன்மைப் பாடமாக்கச் செய்வதோடு ஹிந்தி போன்ற பிறமொழி பாடங்களை விருப்ப பாடமாக தெரிவு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.

அந்நியனிடம் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு அந்த அந்நிய மொழி இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேசமயத்தில் சுதந்திர தேசத்தில் ஒரு தேசிய மொழியை உருவாக்கி அதை ஏற்க முடியவில்லை என்பது எவ்வளவு வெட்க கேடானது. எனவே ஹிந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து ஊழல் அற்ற சுயநலம் அற்ற ஒரு ஆட்சியை உருவாக்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் தன்னிறைவுக்கு உழைப்போம் என்று உறுதி மொழி எடுத்து வாருங்கள் இன்றும் என்றும். நமக்கு நாமே. உதய சூரியன்.
                                                                                         - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com