தமிழக அரசியலில் புதிய புயல்: கமலின் பிரவேசம் புழுதியை கிளப்புமா புரட்டிப் போடுமா..!

தமிழக அரசியலில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் எடப்பாடி
தமிழக அரசியலில் புதிய புயல்: கமலின் பிரவேசம் புழுதியை கிளப்புமா புரட்டிப் போடுமா..!

தமிழக அரசியலில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் எடப்பாடி  தலைமையிலான அரசு சில மைல்கல்களை இலகுவாகவே கடந்து வந்துள்ளது.

கல்வித் துறை தொடங்கி பலதுறைகளில் மிக முக்கிய அறிவிப்புகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அடுக்கடுக்காய் நலத்திடங்கள், என காதுகுளிரும் செய்திகளை வாசித்து, சுமூகமாகவே சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தி இருப்பதை பார்க்கும் போது இந்த அரசு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது. 

ஆனால் ஓ. பன்னீர் செல்வம், குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்  மாற்றங்கள் வரும் என்று வழக்கமான ஆருடம் கூறிக்கொண்டு இருக்கையில், ஆட்சி கலைக்கப்பட்டு விடுமா, ரஜினி அரசியலுக்கு வந்து விடுவாரா. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற என்ன திட்டம் தீட்டியுள்ளது, பன்னீர் செல்வத்தின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்,  தீபா அரசியல் ஆதாயம் பெறுவாரா, என்ற பல ஆயிரம் கேள்விக் குறிகளோடு அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி இருக்கும் வேளையில் நடிகர் கமல்ஹாசனும் அரசியல் குறித்த தனது பார்வையை பொது வெளியில் வைத்து வருகிறார். 

அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் வரிசைக்கட்டி நடிகர் கமல்ஹாசனை திட்டி தீர்த்தனர். ஊழல் புகார்களை ஆதாரத்துடன் முன் வைக்க வேண்டும் என்றனர். அதோடு அரசியலுக்கு வெளியில் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பது தவறான பார்வை என்றும் துணிவிருந்தால் அவர் அரசியலுக்கு வரட்டும் என்றும் சவால் விட்டனர். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரெல்லாம் கேட்ட அதிமுக அரசின் ஊழல் அதற்குள் மறந்திருந்தால் அதனை மக்களே நினைவுபடுத்துவார்கள் என கூறியுள்ளார். மேலும்  மக்கள் சந்திக்கும் ஊழல் பிரச்னைகள் குறித்து இணையதளம் மூலமாக தங்களின் புகார்களை அனுப்ப வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான் என்றும் எல்லா துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத்தவிர, மற்றவர் எல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். 

ஊழலுக்கு எதிராக இப்போது அவர் திடீர் என எழுப்பியுள்ள போர் குரல் அவரது வயதுக்கு வந்த அரசியல் பிரவேசமாக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் இதுவே அவர் தேர்தல் களத்தை எதிர்கொள்வார் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும் என்றும் குறிப்பிட்டுள்ள கமலின் குரலுக்கு பொதுவெளியில் இருந்து ஆதரவு குரல் எழும்ப தொடங்கியுள்ளதும் கவனிக்கத் தக்கது. அதே சமயத்தில் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய ரஜினி, ஆளும் தரப்பினருக்கும் தன் சக நடிகரும் உற்ற தோழருமான கமலுக்கும் இடையே வார்த்தை போர் நடக்கும் இந்த தருணத்தை கவனத்தில் கொள்ளாமல் விடுவது ஏன் என்றும் சிலரின் கேள்விகள் காற்றில் கலப்பதையும் உணர முடிகிறது.. 

ஒரு திரைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு ரசிகனுக்கும் அந்த சினிமாவை விமர்சிக்கும் உரிமை உண்டு என்பது எவ்வளவு நிதர்சனமோ அதே போல் வாக்களிக்கும் ஒவ்வொருவனுக்கும் அரசியலை விமர்சிக்கும் உரிமையும், அரசியல்வாதிகளை குற்றம் சொல்லும் உரிமையும் இருக்கிறது என்பதை எல்லா அரசியல்வாதிகளும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.

வாக்கு என்ற அங்கிகாரம் கிடைக்காமல் எத்தனையோ உத்தமர்கள் சுயேட்சையாக களம் கண்டு, காணாமல் போகியிருக்கிற இந்த அரசியல் களத்தில் சில புகழ்மிக்க தலைவர்களின் நிழலில் நின்று வெகுஜன ஆதரவை பெற்று விட்டு நானும் அரசியல்வாதி என்று பெருமிதம் பேசிக்கொள்பவர்கள் எல்லோரும் தனிமனிதனாக அவரவர் தொகுதியில் தங்களுக்கான செல்வாக்கை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் செல்வாக்கு என்பது அத்துனை எளிதாக கிடைக்க கூடிய ஒன்று அல்ல. சினிமா துறையானாலும், அரசியல் களமானாலும், கடின உழைப்பும் திறமையும் இருந்தால் மட்டுமே வெகுஜன ஆதரவை பெற முடியும். திரைத்துறையின் புகழ் மட்டுமே ஒருவருக்கு அரசியல் களத்தில் வெற்றியை பெற்றுத் தந்து விடாது என்பதற்கு வரலாற்று உதாரணங்கள் உண்டு. 

அரசியலில், தேர்தல் களத்தில் நின்று வென்றுதான் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதோ, சமூக நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதோ இல்லை. சுதந்திர வேட்கையில் மக்களோடு பேசிய வரலாற்று நாயகர்கள் யாரும் சினிமா புகழ் பெற்றவர்கள் இல்லை, அரசியல் ஆதாயம் தேடியவர்கள் இல்லை. 

அப்படி ஒரு தலைவர்களைத்தான் இன்றைய சமூகம் தேடிக்கொண்டிருக்கிறது. யாராவது திடீரென தேவதூதராக வந்து சமூக நலனை காக்கமாட்டார்களா என்று எதிர்நோக்கி இருக்கும் அப்பாவி மக்களுக்கு கமல் போன்றவர்களின் குரல் அசரீரியாக இருப்பதோடு எங்கோ தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிவதாகவும் பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டோ திட்டமிடாமலோ அரசியல் விவாதத்திற்குள் வந்துவிட்ட கமல் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இல்லாமல் தன் வாக்குப்படி சினிமாத் துறையின் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதே வெகுஜனங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதோடு அந்த ஊழல் விஷயங்களை ஆளுநர், பிரதமர், மற்றும் நீதிமன்றம் வரை கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தன் வார்த்தைகளை பின் வாங்காமல் இருக்க வேண்டும். பொதுவாக அரசியல் கட்சிகள் ஆளும் தரப்பினர் மீதான ஊழல் புகார்களை ஒரு மனுவாக எழுதி ஆளுநரிடம் கொடுத்து விட்டு தன் கடமை முடிந்தது என்று ஒதுங்கி விடுவது போல் நின்று விடாமல் கமல், தன் கையில் எடுத்துள்ளது அட்டை கத்தி இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com