கண்ணீர் கடலில் மீனவர்கள்: தீராத துயரத்துக்கான தீர்வு எப்போது?  

நாட்டில் மக்களுக்கான அரசு, மக்களுக்கான தலைவர்கள் யார் என்ற பெருத்த சந்தேகம் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. ஏன்
கண்ணீர் கடலில் மீனவர்கள்: தீராத துயரத்துக்கான தீர்வு எப்போது?  

நாட்டில் மக்களுக்கான அரசு, மக்களுக்கான தலைவர்கள் யார் என்ற பெருத்த சந்தேகம் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. ஏன் என்றால் சாமானியனின் எந்த பிரச்னைகளுக்கும் தீர்வு என்று இதுவரை எதுவும் எட்டப்பட்டதாக தெரியவில்லை.

விலைவாசி உயர்வில் தொடங்கி மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை உள்ளிட்ட அனைத்திற்கும் எல்லா கட்சிகளும், தலைவர்களும் ஒவ்வொரு முறையும் கண்டன அறிக்கை வெளியிடுவது, அடையாள உண்ணாவிரதம், ரயில்மறியல் போன்ற போராட்டங்கள் என்றே அவரவர் தரப்பில் எதிர்ப்பு குரலை பதிவு செய்வதோடு நின்று விடுகிறார்கள்.

ஆட்சி மாறுகிறது, தலைமை மாறுகிறது. ஆனால் சாமானியனின் வாழ்க்கை மட்டும் மீண்டும் போராட்டமாகவே தொடர்கிறது. வாழ்வதற்கே போராடி போராடி  உயிரை விட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களை பற்றி சிந்திக்கும் அரசும், தலைவரும் எப்போது வருவார், எங்கிருந்து வருவார் என்ற ஏக்கதோடுதான் நாளும் கழிகிறது. 

ஒருபக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடகா அரசு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இன்னொருபக்கம் வறட்சி காரணமாக விவசாயிகள் மடிந்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் நெடுவாசல் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக தொடரும் போராட்டம்  இவை எல்லாவற்றிலும் அரசும் எதிர்க்கட்சிகளும் தங்கள் தரப்புக்கான வாதங்களை வைப்பதோடு போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கத்தான் செய்கிறார்கள்..

இப்படித்தான் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வந்தனர். உதாரணமாக கூடங்களம் அணு உலை எதிர்ப்பு, மதுஒழிப்பு, விலைவாசி உயர்வு என்பது உள்ளிட்ட சமூக பிரச்னைகளை பட்டியலிடலாம்  அந்த வகையில் மிக நீண்டகாலமாக மீனவர்கள் தங்கள் பிரச்னை குறித்து குரல் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ஆறுதல் கூறுவது, நிவாரனம் வழங்குவது, இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவது என்றே சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் மீண்டும் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது நடந்தேறிய சில மணி நேரத்திற்குள்ளே வழக்கம் போல் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூட்டை நாங்கள் நடத்தவில்லை என இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய பெருங்கடல், உலகின் மிக பெரிய மீன்களை பிடிக்கின்ற பகுதிகளை கொண்டுள்ளது. அதாவது மொத்த உலகின் மீன் பிடிக்கும் பகுதியில் 15% சதவீதம் இந்திய பெருங்கடலில் உள்ளது இந்தப் பகுதிகளின் பெரும் பகுதிகளில் தமிழக ஈழ மீனவர்கள் நெடுங்காலம் மீன்பிடித்து வருகிறார்கள். இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பில் தமிழக, ஈழ  மீனவர்களுக்கு இடையே மரபுவழி மீன்பிடி வழிமுறைகள் இருக்கின்றன. அதன் மூலம் நூறாண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர்.

ஈழப் போர் காலத்தில் இலங்கை - இந்திய கடற்படைகள் இக்கடற்பரப்பை தமது கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தன. அந்த காலகட்டத்தில் அக்கடற்பரப்பில் பயணிப்போர், தொழில் செய்வோர் மீது, இலங்கை கடற்படை போராளிகள் எனக் கூறி தாக்குதல் நடத்தியது. இத்தகைய தாக்குதல்களும் வன்முறைகளும் ஈழப் போர் முடிந்த பின்னரும் தொடர்வது அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

இத்தகைய பிரச்னைக்கு முடிவுகட்ட கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்று கூறியிருந்தது.  ஆனால் இன்று வரை அது நிறைவேறியபாடு இல்லை. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்க்க சில கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. மீண்டும் தொடர்சியாக துயரத்தை அனுபவத்து வரும் மீனவ மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கடலில் கரைத்த பெருங்காயமானது ஏன் என்பது  இன்றும் புதிராக இருக்கிறது.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்னைக்கு தீர்வு காணவேண்டிய மாநில அரசு நிவாரண தொகை வழங்குவது, கடிதம் எழுதுவது, கண்டனம் தெரிவிப்பது என்பதோடு தன் கடமை. முடிந்து விட்டதாக எண்ணுகிறதா? பதில் சொல்ல வேண்டிய ஆளும் கட்சியினர் கச்சத்தீவை தாரை வார்த்ததுதான் இந்த பிரச்னைக்கு காரணம்  தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவு நம்மை விட்டு போயிருக்காது. என்று எதிர்கட்சியை எத்தனை நாளைக்கு குறை சொல்லிக் கொண்டிருக்குமோ தெரிவில்லை.

பிரச்னைக்கு யார் காரணம் என்பதை விட அதை எப்படி தீர்ப்பது என்பது தானே முக்கியம். கச்சத் தீவை மீட்போம் என்று உறுதியளித்த அதிமுக அரசு இதுவரை அதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது ஒரு பிர்ச்னையை எவ்வளவு விரைவாக தீர்க்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

கச்சத் தீவை மீட்கும் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு இப்போதே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கச்ச தீவை மீட்கும் கோரிக்கையை பிரதானமாக முன்வைப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்த விவகாரத்தை அரசும் அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல், இலகுவாக கடந்து செல்ல நினைக்குமானால் எதிர்காலத்தில் இதுவும் இன்னொரு காஷ்மீர் விவகாரம் போல் ஆகக்கூடும். 
                                                                                    - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com