மாற்றம் முன்னேற்றம் போனதெங்கே மாம்பழம்! 

திராவிட கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் அரை நூற்றாண்டுகாலமாக நடந்து வருகிறது. திமுகவையும் அதிமுகவையும்
மாற்றம் முன்னேற்றம் போனதெங்கே மாம்பழம்! 

திராவிட கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது. திமுகவையும் அதிமுகவையும் தவிர இங்கு இன்னொரு மாற்று உருவாகவில்லையா அல்லது அதற்கு அவசியம் ஏதும் ஏற்படவில்லையா என்ற கேள்வியின் போதுதான் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கி நடிகர் விஜயகாந்த் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக தன்னை முன்னிறுத்தினார். ஆனால் அவரால் அதே பாதையில் நீடித்து நிலைபெற முடியாமல் போனது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம்தான் என்றே சொல்ல வேண்டும். 

அதேவேளையில் மீண்டும் ஒரு மாற்றாக யாராவது வரமாட்டார்களா என்று எண்ணி எதிர்பார்த்திருந்த போதுதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, மாற்றம் முன்னேற்றம் என்ற வீர முழக்கத்தோடு அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்தே களம் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி 1989ம் ஆண்டு உருவான நாளில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்திதிருக்கிறது என்றாலும் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பா.ம.கவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டதோடு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதுதான். வெற்றி தோல்வி என்பது வேறு கதை. 

இதற்கு முன்பு நெடுங்காலமாக அதிமுக, திமுக என மாறி மாறி இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பா.ம.க 2016-ல் தனித்துப் போட்டியிட்டதோடு மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்தோடு கட்சியை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல முனைப்போடு செயல்பட்டது. அந்த வேகம் ஏனோ தெரியவில்லை எழுந்த வேகத்தில் அமர்ந்து விட்டதாகவே தெரிகிறது. ஏன் என்றால் தேர்தலுக்கு பின் பா.ம.கவின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் வழக்கமான அறிக்கைகளின் அரசியலுக்கு வந்து விட்டது போல் தோன்றுகிறது.

தேர்தல் நேரத்தில் பா.ம.க வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் மிகுந்த எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்பது உண்மைதான் ஆனால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் கடந்த கால அரசியல் முன்னெடுப்புகள், மற்றும் விரும்பியோ, விரும்பாமலோ கட்சியின் மீது பூசப்பட்டிருக்கும் ஜாதிச் சாயமும் தான் என்றே கூற வேண்டும்.  

தொடக்கத்தில் ஒரு சாதி சங்கமாக தொடங்கி இருந்தாலும் அது ஒரு கட்சியாக உருவெடுத்தப் பின் சாதிய போக்கிற்கு அப்பாற்பட்டு ஏழை எளிய மக்களின் குரலாகவும், உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவும் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத ரீதியான சிறுபான்மையினரின் குரலாகவும் அது இருக்க வேண்டும் என்றே கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி என பெயர் வைக்கப்பட்டதோடு கட்சியின் கொடியை நீலம், மஞ்சள் சிவப்பு ஆகிய வண்ணங்கள் இணைத்து உருவாக்கினர்.

தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13-வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களைக் கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 15-வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பா.ம.க 7 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.

2009 வரை ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த பா.ம.க 14-வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா.வேலு இரயில்வே இணை அமைச்சராகவும் இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராகவும் இருந்தனர். எனினும் தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ம.க இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு மாற்று அரசியல் கட்சியாக, மாநிலம் முழுவதுக்கும் ஒரு வலுவான அரசியல் அமைப்பாக தன்னை உருவாக்கவில்லை. கடந்த தேர்தலுக்கு பின்னாவது அதை செய்யும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகப்பெரிய மாற்றத்துக்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளாமல் இருப்பதும், பரபரப்பான நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலை பா.ம.க புறக்கணித்திருப்பதும் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க தனித்து போட்டியிட்டு திராவிட கட்சிகளுக்கு தான்தான் மாற்று என்று அறிவித்த நிலையில் இப்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முற்றுமுழுதாக புறக்கணித்து ஒதுங்கி இருப்பதால் என்ன லாபம் கிடைத்து விடப்போகிறது. தோல்வி என்பது தெரிந்த நிலையிலும் துணிந்து போட்டியிட்டு தன் கட்சியின் நிலைப்பாட்டை நிலைநாட்ட வேண்டிய அவசியம் தனக்கு இருப்பதாக பா.ம.க உணராமல் போனது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். 

எப்போதும் நல்ல கொள்கைகளையும் சமூக அக்கறையுடனான கோட்பாடுகளையும் முன்வைக்கும் பா.ம.க வெகுஜன ஆதரவு பெற்ற வேட்பாளர்களையும் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தலைவர்களையும் உருவாக்க தவறி வருவதை இங்கே நாம் நினைத்து வருந்த வேண்டியதாக உள்ளது. ஆர்.கே.நகரில் பா.ஜ.க.வை போல் பா.ம.க.வும் ஒரு பிரபலமான வேட்பாளரை முன்னிருந்தி இருந்தால் அது எதிர்காலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்ட பணியாக இருந்திருக்கும் என்பதே பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான களப்பணியை தொடங்குவதிலும் காலதாமதம் செய்யாமல் வேட்பாளர்கள் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி  தமிழகம் முழுவதும் தனித்து களம் காண வேண்டும் என்பது மாண்புமிகு மகாஜனங்களின் எண்ணமாக இருப்பதை உணர்கிறோம். 

பா.ம.க பெல்ட் எனப்படும் வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள சேலம், நாமக்கல், கிழக்கில் உள்ள பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளை போல் தென்மாவட்டங்களிலும் தன் கட்சியை பலப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே மாற்றம் முன்னேற்றம் என்பது சாத்தியப்படும். மது விலக்கு, புகையிலை ஒழிப்பு ஆகியவற்றை லட்சியங்களாக கொண்டும், சமூகநீதி, சமச்சீர் கல்வி ஆகியவற்றிற்காக குரல் எழுப்பும் இயக்கமாகவும் உள்ள பா.ம.க, வேட்பாளர்களாக நின்று வென்றவர்களில் மிக முக்கியமானவர்களாக ஏ.கே. மூர்த்தி, அன்புமணி ராமதாஸ் ஆகியோரை குறிப்பிடலாம். 

ஏன் என்றால் அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்த போதுதான், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச் சட்டம்; திரைப்படங்களில் புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தது; புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடச் செய்தது; குட்காவுக்குத் தடை, போலியோ ஒழிப்புக்கான திட்டங்கள், எச்.ஐ.வி. - எய்ட்ஸ் நோயின் தாக்கம் 50% குறைகிற அளவுக்கான நடவடிக்கைகள் என்று கவனிக்கத்தக்க பணிகளைச் செய்தார். இக்காலகட்டத்திலேயே ‘தேசிய ஊரகச் சுகாதார இயக்கம்’, ‘108 ஆம்புலன்ஸ் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன. 

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகள் கிடைப்பது எப்போதாவதுதான். அந்தவகையில் ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் ஓ.வி. அழகேசன் ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். அதற்குப் பிறகு பா.ம.க.,வை சேர்ந்த ஏ.கே.மூர்த்திக்கு ரயில்வே இணை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த பதவியில்  இருந்த போது, சென்னை எழும்பூர்-சென்ட்ரல் இடையே 90.44 கோடி ரூபாய் செலவில் இணைப்பு ரயில் பாதை அமைக்கப்பட திட்டமிடப்பட்டது.

திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் பாதை அமைக்க முயற்சி செய்தார். இதற்காக புதிய திட்டம் அமைக்க ரயில்வே துறைக்கு உத்தரவிட்டார் இப்படியாக அவர் காலத்தில் ஏற்பட்ட பல வளர்ச்சிப் பணிகளும் நினைவுகூரத்தக்கது.

மங்குகிறதா சூரியன், வாடுகிறதா இலை, மலர்கிறதா தாமரை என்ற பேச்சுக்கிடையில் கனிகிறது மாம்பழம் என்றும் சொல்ல வேண்டாமா..? கொள்கைகளும் திட்டங்களும் தெளிவாக இருக்கிறது என்றபோது சில குறைபாடுகளை களைந்து விரைந்து செயல்பட்டால் கனிந்த மாம்பழத்தின் சுவையை தமிழக மக்கள் நுகரும் காலம் அருகாமையில் உள்ளது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. 
                                                                      - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com