உழவுக்கு வந்தனை! உழவனுக்கு நிந்தனை?

உழவுக்கு வந்தனை! உழவனுக்கு நிந்தனை?

நாட்டுப்புறம் என்ற சொல்லை இன்று நாம் மற்றவர்களைத் திட்டுவதற்காக பயன்படுத்த தொடங்கி விட்டோம். அந்த அளவுக்கு அதன் பொருள் மாறி இருக்கிறது

நாட்டுப்புறம் என்ற சொல்லை இன்று நாம் மற்றவர்களைத் திட்டுவதற்காக பயன்படுத்த தொடங்கி விட்டோம். அந்த அளவுக்கு அதன் பொருள் மாறி இருக்கிறது. ஆனால் அந்த நாட்டுப்புறத்தில் உருவான கலையும் மொழியும்தான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதை உணர மறந்திருப்பது எவ்வளவு வேதனையானது.

நாட்டுப்புற மக்களின் அனுபவ அறிவை கொண்டு  உருவான எத்தனையோ பழமொழிகள் வாழ்வின் உண்மையை, எதார்த்ததை அடுக்கு சொற்களால் நமக்கு சொல்கின்றன. ஆனால் பொருள் பொதிந்த அந்த மொழி, பழமொழி என்பது போய் பழைய மொழி ஆனதுதான் வேதனை. மொழியில் தொடங்கி உண்ணும் உணவு வரைக்கும் எல்லாவற்றையும் பழையது என்று ஒதுக்கி விட்டு புதுமையை தேடி அலையும் மனிதன் தன் புனிதத்தையும் மனிதத்தையும் இழந்தது தான் மிச்சம். 

நாட்டின் சாயம் எதில் வேண்டுமானாலும் வெளுக்கலாம் ஆனால் விவசாயம் வெளுத்து விட்டால் நாடு சுடுகாடாகும்  என்பதை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டிருந்தனர். விவசாயிக்கு உழவர் திருநாள் கொண்டாடி முதல் மரியாதையையும் செய்தனர்.  
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றார் பாரதி. "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்" என்றார் வள்ளுவர். இந்த நிலையை மாறிய போதுதான்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு 
பொங்கிவரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு 
சாதிக்கொரு சங்கமுண்டு 
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம் 

நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல" என்று பாடுகிறான் திரைக்கவிஞன். இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்றைய சூழலில் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாகி இருக்கிறது. 

போராட்டம் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் நம் உரிமைகளை பெறவும் உடமைகளை காக்கவும் சொந்த நாட்டிலேயே எல்லாவற்றுக்கும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அந்த வகையில் விவசாயப் போராட்டம் கடந்த 15 நாட்களாக தில்லியில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது" என்பது பழமொழி. அப்படி கணக்கு பார்த்த விவசாயி தன் விவசாய நிலத்தை விற்று விட்டு கிடைத்ததை கொண்டு பிழைப்பு  நடத்த தொடங்கி விட்டான். இப்படியே எல்லோரும் கணக்கு பார்த்தால், நாட்டில் உண்பதற்கு என்ன இருக்கும் என்று சிந்திக்க வேண்டியது அரசின் பொறுப்பு. 

2007ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகள் காலக்கட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் ஹெக்டேர் விவசாய விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் அதிக அளவில் விளை நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விவசாய விளை நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து 1997 மற்றும் 2003–ம் ஆண்டுகளில் தமிழக அரசு இரு அரசாணைகளை பிறப்பித்துள்ளன. 

இந்த அரசாணைகளை பின்பற்றாமல், விவசாய விளை நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றி வருவதாக நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய இடைக் கால தடைவிதித்து  உத்தரவிட்டது.

இந்த ஆணை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றுவோருக்கு மின்சார விநியோகம் தடைச் செய்ய உத்தரவிடுதல், குடிநீர் விநியோகம் தடை செய்தல் போன்ற உத்தரவின் மூலம் விவசாய நிலத்தை காக்க முடியும் என்றே விவசாய ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

தனியார் மற்றும் அரசு திட்டங்கள் மூலம் விவசாய நிலங்கள் உருமாறுவது ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 15 நாட்களாக தொடர்ந்து தில்லியில் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் வெறும் உரிமை மீட்பு போராட்டமோ, கொள்கை கோஷப் பேரணியோ இல்லை.  நாட்டின் வாழ்வாதர உணவு உற்பத்தி சம்பந்தப்பட்ட விசயம். இதை உணந்துதான் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த  விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உ.பி. மாநில பாரத் கிசான் யூனியன் விவசாய அமைப்பினர் கூறுகையில், இந்த போராட்டம் தமிழக விவசாயிகளுக்கானது அல்ல, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் போராட்டம். இதற்கு மத்திய அரசு சரியான தீர்வு காணவில்லை என்றால் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டமாக மாறும் என்று எச்சரித்தனர். 

இந்த ஒற்றுமை வரவேற்க தக்கதுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விசயத்துக்காக போராடும் நம்மவர்கள் தற்காலிக முடிவுடன் திருப்தி அடைந்து விடுகின்றனர். இந்த விசயத்திலாவது அப்படி அல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள நீராதாரத்தை பராமரிப்பது,  நதி நீர் இணைப்பு, விளை பொருட்களின் நேரடி லாபம் விவசாயிகளை சென்று சேருவது போன்ற அழுத்தமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நிரந்தர தீர்வு காண முற்பட வேண்டும்.  பிறதொழில் வளர்ச்சிக்கு நாட்டில் அளிக்கப்படும் முக்கியத்துவம் போல் விவசாய தொழில்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விளைநிலங்களையும் விவசாயிகளையும் அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். 

கோதாவரி–கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டத்தை ஆந்திர அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்து. கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதிதான் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் அதாவது அவ்வருட செப்டம்பர் மாதத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு 2 பெரிய நதிகளும் இணைக்கப்பட்டன.

‘‘இந்தியாவில் மிகப்பெரிய 2 நதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டது இருப்பது இதுவே முதல் முறையாகும்.  இதை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நதி நீர் இணைப்புத் திட்டம் விரைவுப் படுத்தப்பட வேண்டும். எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும், நாடுமுழுமைக்குமான விவசாய அமைப்புகள் உற்பத்தி சார்ந்த கொள்கைகளையும், தங்கள் நிலங்கள், நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை பேணுவதில் புதிய திட்டங்கள் யுக்திகளை முன்னிறுத்தி, அரசை நிர்பந்தித்து விவசாயத்தை நீர் ஆதாரத்தை பேணிகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

பஞ்சம் வறட்சி என்று வரும் போது மட்டும் கொடி பிடித்து கோஷங்கள் எழுப்பாமல், உங்கள் ஊரில் உள்ள ஆற்றில் மணல் எடுக்க வரும் போது, நிலத்தடி நீரை உறிஞ்சும் போது, விளைச்சலுக்கு சரியான விலை இல்லாதபோது என எல்லா நிலைகளிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டதொரு எதிர்ப்பு குரலை வைக்க வேண்டும்.

நமது கிராமம் நமது உரிமை, வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் எந்த திட்டம் வந்தாலும் புறக்கணிப்போம் என்ற உறுதி மொழி எடுங்கள். இப்போது நாம் பெற வேண்டியது வெறும் நிவாரணம் மட்டும் அல்ல.. தாய் மண்ணின் பச்சையத்தை மீட்டெடுக்கவும் கடமை பட்டுள்ளோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com