தமிழக தடாகத்தில் தாமரை!: மீண்டும் பெண் முதல்வர்? 

தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் அனைத்து தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறது
தமிழக தடாகத்தில் தாமரை!: மீண்டும் பெண் முதல்வர்? 

தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் அனைத்து தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஆளும் கட்சியினர் தரப்பில் இந்த அரசு சுமூகமாக இயங்குகிறது என்று கூறினாலும், உட்கட்சி பூசல், அணி சேர்வதற்கான முயற்சிகள், வருமானவரி சோதனையால் ஆளும் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, இவைகள்தான் மக்கள் கண் முன் வந்து செல்கின்றன.

எந்த ஒரு அரசு திட்ட செயல் முறைகளோ, புதிய தொலைநோக்கு திட்டங்களோ அதற்கான முன்னெடுப்புகளோ இந்த அரசு செயல்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அரசையும் ஆளும் தரப்பினரையும் விமர்சிக்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சியினர் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை குறை சொல்வதும், வம்புக்கிழுப்பதிலுமே கவனம் செலுத்துகிறது. இதைப் பார்க்கும் போது தமிழகத்தில் எங்கே பா.ஜ.க வளர்ந்து விடுமோ என்ற அச்சம் எதிர்க்கட்சியினருக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

தமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்று சூளுரைத்துக் கொண்டு களம் இறங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிக்கைகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் மிக நீண்ட நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி பதில் சொல்லாமலே இருந்தார். பின்னாளில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் சற்று உயர்ந்து வருவதை பார்த்தபின்தான் விஜயகாந்த் அறிக்கைகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார். ஆனால் இன்றைய சூழலில் பா.ஜ.கவின் ஒவ்வொரு அசைவிற்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதில் சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றக்கூடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தைத்தான் பா.ஜ.கவும் எதிர்நோக்கி உள்ளது. 

நாடு முழுவதும் விஸ்வரூப வளர்ச்சியை பா.ஜ.க பெற்று வருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. கடந்த 2016ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கிய பா.ஜ.க அதையெல்லாம் நிறைவேற்றியதோ இல்லையோ, காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கும் என்று சொன்ன வார்த்தையை மெய்பிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டும்  உண்மை.  

இந்நிலையில் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பணிகளையும் இப்போதே மிஷன் 400 என்ற பெயரில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி விட்டதாக தெரிகிறது. தில்லி மாநகராட்சியில் பா.ஜ.க.,வுக்கு கிடைத்த வெற்றி மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர் அதே உற்சாகத்தோடு புதிய வியூகங்களை அமைக்க தொடங்கி உள்ளார். 

அதன் அடிப்படையில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க, பா.ஜ.க., மேலிடம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அந்த மெகா கூட்டணியில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அணி, பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் த.மா.கா., புதிய தமிழகம் உட்பட பல்வேறு சாதிய கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சமீபத்தில் த.மா.கா., தலைவர் வாசன் தில்லி சென்று, பா.ஜ., தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் 'விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலிலேயே, இந்த மெகா கூட்டணியை அமைத்துவிட முடிவு செய்துள்ளதாகவும் தில்லி வட்டார தகவல் தெரிவிக்கிறன. மேலும் பா.ஜ.க பக்கம் சேருவதற்கான பச்சைக் கொடியை இப்போதே புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி காட்டியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழக முதல்வருக்கான, வேட்பாளர் தேர்விலும் இப்போதே பா.ஜ.க. கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அதற்காக நடிகர் ரஜினிகாந்தை கட்சிக்குள் இழுக்க பலகட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டார் இதுவரை பிடிகொடுக்கவில்லை என்பதால் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் வேட்பாளர்களின் 2-வது வரிசையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் அடிபடுவதாக தெரிகிறது. 

தற்போது அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தம் தரப்பு மக்கள் ஆதரவை நிரூபிக்க  திட்டமிட்டுருப்பதற்கு பின்னால் பா.ஜ.கவின் காய்நகர்த்துதல் இருக்கக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இப்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தமிழகத்தில் காலூன்ற எண்ணம் கொண்டுள்ள பா.ஜ.க தனது வாக்கு சதவீதம் குறித்தும் ஆய்வு செய்துவருகிறது கடந்த ஆண்டு அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது தலித் வாக்குகளை கவர திட்டம் தீட்டினார். அதேபோல் கொங்குமண்டல வாக்குகளுக்கு வானதி ஸ்ரீநினிவாசனை களப்பணியில் ஈடுபட வைத்திருப்பதோடு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.க வாக்குசதவீதம் குறித்த ஆய்வை மேற்கொள்ள தொடங்கி இருப்பதாக தெரிகிறது. 

இதற்கிடையில் தமிழக பா.ஜ.கவில் இல.கணேசன், ஹெச் ராஜா, சுப்பிரமணியன் சுவாமி போன்றோர்கள் கொடுக்கும் அறிக்கைகளும் அறிவிப்புகளும் பல நேரங்களில் தமிழக மக்களுக்கு எதிரானதாக போய் கொண்டிருப்பதையும் மேலிடம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக அண்மையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணுவுக்கும், பயங்கரவாதி அப்சல் குருவின் குழுவுக்கும்  தொடர்பு இருப்பதாக ஹெச் ராஜா கூறியிருப்பதும், ஒரு மாநிலத்தோட வளர்ச்சிக்காக ஒரு கிராமம் தியாகம் செஞ்சா பரவாயில்லை, ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலமே தியாகம் செஞ்சாலும் பரவாயில்லை''னு நெடுவாசல் போராட்டத்தின் போது இலகணேசன் கருத்து சொல்லியிருப்பதும் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.கவுக்கு பல்வேறு முரண் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஏன் அந்த தலைவர்கள் அறியவில்லை. 

இப்படி யார் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னாலும் கஷ்டப்பட்டு அதற்கு விளக்கம் அளிப்பதையே முழுநேரப் பணியாக கொண்டிருக்கும் மாநில தலைவர் தமிழிசை தமிழக மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான உரிய திட்டங்களை மேலிடத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு கிடைத்த மணிமகுடம். எல்லா இடங்களிலும் பொறுப்போடு பேசும் அவர் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு விளக்கம் அளிப்பதோடு நின்று விடமால் தமிழ்நாட்டின் சூழலை தேவையை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும் என்றே மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

தனிப்பட்ட கருத்துக்களை தனித்தனியாக பேசி முரன்பாடுகளை ஏற்படுத்தாமல் ஒரு ஆளுமை மிக்க தலைவரின் கீழ் ஒருமித்த கருத்தை மண்டலங்கள் வாரியாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன் வைத்து வாக்கு சதவீதத்தை உயர்த்த  திட்டம் தீட்டினால் மட்டுமே தமிழக தடாகத்தில் தாமரை மலரும் தருணம் பிறக்கும்.  
                                                                               - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com