காதலோடு மோதும் காவி..!: மதவாத அரசியலின் வெளிப்பாடா தாஜ்மகால் புறக்கணிப்பு!

பாரதிய ஜனதா கட்சி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் மதவாத பிரச்னை மேலெழுந்து காணப்படுவது இயல்பாகிப் போனது.
காதலோடு மோதும் காவி..!: மதவாத அரசியலின் வெளிப்பாடா தாஜ்மகால் புறக்கணிப்பு!

2பாரதிய ஜனதா கட்சி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் மதவாத பிரச்னை மேலெழுந்து காணப்படுவது இயல்பாகிப் போனது.

என்னதான் தேசிய ஒருமைப்பாட்டுடனும் மதசார்பற்று இருப்பதாகவும் பா.ஜ.க தன்னை காட்டிக் கொள்ள முயன்றாலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் சிறுபான்மையினர்களின் அங்லாய்ப்புகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையிலேயே பாஜகவின் சில நடவடிக்கைகளும் அமைந்து விடுகிறது.

சமீபத்தில் மத்திய அரசின் பசுவதை தடுப்பு நடவடிக்கை நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுபான்மையினருக்கு எதிரான அரசாகவே பாஜக இருக்கிறது என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஆய்வறிக்கையில், இந்தியாவில் கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சிறுபான்மை இனத்தவர்கள் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தவறிவிட்டது என்றும் விமர்சிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாஜக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ராமர் கோவில் கட்டுவது குறித்த தனது நிலைப்பாட்டை வலுவாக அறிவிப்பது அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு அரசியல் கொள்கை இருப்பது ஒன்றும் தவறில்லை. அதுபோல் பாஜக தன் கட்சி கொள்கையாக இந்துதுவத்தை முன்னிறுத்தி செயல்படுகிறது என்றாலும். நாட்டில் உள்ள  தேசிய ஒருமைப்பாட்டை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய கடமை இருப்பதை உணரவேண்டும் என்றே பிற கட்சிகளின், மக்களின் குரலாக இருக்கிறது. உலகப் பிரசித்திப் பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதன் மூலம்  தற்போது மீண்டும் இன்னொரு மதவாத பிரச்னையை உத்தரப் பிரதேச அரசு எழுப்பி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்  கடந்த 2014- ம் ஆண்டில் பா.ஜ.க. எம்.பி.யாக இருந்த போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், “10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் ஆங்காங்கே வகுப்புக் கலவரங்கள் இடம்பெறுகின்றன என்றும் 20 முதல் 35 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியில் அந்தக் கலவரம் கடுமையாகவும், அதுவே 35 சதவீதம் பேரை தாண்டினால் அந்த இடங்களில் முஸ்லிம் அல்லாதோருக்கு இடமில்லை என்ற நிலை உருவாகிறது என்றும் கூறி சர்ச்சைக்குள் சிக்கினார். 

இது முஸ்லிம்கள் மீது பாஜக கொண்டுள்ள வெறுப்புணர்வையே காட்டுகிறது என்றும் அப்போது கடுமையாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில்  யோகி ஆதித்ய நாத் தற்போது உத்தரப் பிரதேச முதல்வரான நிலையில் தாஜ்மகாலை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது மீண்டும் அவர் மீதான சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில்  நமது இந்திய கலாச்சாரத்திற்குட்பட்டது ராமாயணமும் கீதையும் தான் தாஜ்மகால் அல்ல என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலை காண 60 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகின்றனர்.

இந்த மாநிலத்திற்கு இதன் மூலமே அதிகபடியான வருவாய் வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது. அவ்வாறு மாநிலத்துக்கு அதிக வருவாய் தரக்கூடிய தாஜ்மகாலை முஸ்லிம் அரசர் ஒருவரால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவே  உத்தரப்பிரதேச அரசு சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதா என்ற கேள்வி எதிர்தரப்பில் இருந்து எழுகிறது.

அதேநேரத்தில் உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.க அரசின் மதசார்பு முகத்தை தெளிவாக காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

தாஜ்மகாலை சென்று பார்த்து ரசிப்போர்கள் யாரும் மதம் பார்ப்பதில்லை. காதலின் அடையாளமாகவும் கலைநுணுக்கத்தின் ரசனை போற்றவும் தான் மக்கள் தாஜ்மகாலை சென்று பார்க்கின்றனர். ஆனால் ஆளும் தரப்பின் கண்களுக்கு மட்டும் இதில் ஏன் மதச்சாயம் தெரிகிறது என்று புரியவில்லை.

இந்துக்களின் கலாச்சார மேம்பாட்டு விசயங்களை பேண நினைப்பதிலும், போற்றி பாதுகாக்க முனைவதிலும் தவறு  ஒன்றும் இல்லை. அதேவேளை ஜாதிமத பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சில விசயங்களை  பட்டியலில் சேர்த்துக் கொண்டு மக்களின் ரசனைக்கு மதிப்பளிப்பதுதானே சரியாக இருக்கும்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் சுற்றுலாத் தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகால் நீக்கப்படவில்லை என்று உ.பி.அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் தான் வெளியிடப்பட்டதாகவும்  தாஜ்மகாலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com