மற்றவர்களை அழித்து நான் முன்னுக்கு வரவில்லை

திறமையுள்ளவர்களை  ஒதுக்கலாமா?
மற்றவர்களை அழித்து நான் முன்னுக்கு வரவில்லை

டி .எம்.எஸ்ஸை சந்திக்க சென்றிருந்த பொழுது, வரவேற்பறையில் ஒரு மூலையில் ஹார்மோனியமும், சுவர் முழுவதும் அவர் பல சந்தர்ப்பங்களில் பெற்ற  பாராட்டு பத்திரங்களும் ப்ரேமில் காட்சியளிக்கின்றன.

முதலில் அவர் பேச்சைத் தொடங்கும் போது,  சில பத்திரிக்கைளில் தான் சொன்னதை திரித்து போட்டு விட்டதாக வருத்தப்பட்டுக் கொண்டார். அவரே தொடர்ந்து பேசினார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்பார்கள்.அது சரிதான்.ஆனால் இங்கு இருப்பவர்களை அது வாழ வைப்பதில்லையே? கலைக்கு மொழியேது, இனமேது என்று சொல்கிறார்கள். ஆனால் அதை செயலில் தமிழகம் மட்டும்தான் காட்டுகிறது. மற்ற மொழிக்காரர்கள் இங்கேயும் சிறப்பான இடத்தை பிடிக்க முடிகிறது.இங்குள்ளவர்கள்  அப்படி உயர்த்தி விடுகிறார்கள்.ஆனால் என்னால் பிற மொழிகளில் பாட வாய்ப்பு பெற முடிகிறதா என்றால் இல்லை. காரணம்  அவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று, இங்கே வந்து எப்படி பாடினாலும் நாம அதனை சகித்துக் கொள்கிறோம்.அந்த பாடலுக்கும்தான் கைதட்டுகிறோம். மற்ற மொழிகளில் இப்படிப் போய் தப்பும் தவறுமாக பாட அனுமதிக்க மாட்டார்கள்.

நான் படங்களில் பாட ஆரம்பித்த பொழுது எனக்கு முன்னே பலர் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் போட்டியிட்டு நானாகவே தான் முன்னுக்கு வந்தேன். மற்றவர்களை அழித்து நான் முன்னுக்கு வரவில்லை. மக்களாகவே விரும்பும்படி நான் பாடல்களுக்கு உயிர் கொடுத்தேன். மற்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை நான் தட்டிப் பறித்ததில்லை.

உதாரணமாக 'பாவை விளக்கு' படத்திற்காக சிவாஜி கணேசனுக்கு சி.எஸ்.ஜெயராமன் பாடியவைகள் ஒளிப்பதிவாகி  படமும் முடிந்து விட்டது. பிறகுதான் வியாபார ரீதியில் பார்த்த பொழுது என்னை பாட  விட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று ஏ.பி.நாகராஜன் உணர்ந்திருக்கிறார். அதற்காக என்னை அணுகினார்.

ஆனால்    நானோ ஜெயராமன் கைப்பட என்னைப் பாட சொல்லி எழுதித் தந்தால் ஒழிய நான் பாட மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.அவரால் அது முடியவில்லை. "நான் பாடியிருந்தால் ரூ 5 லட்சம் லாபம் வந்திருக்கும்; பாடாததால் ரூ 50000 நட்டம் வந்திருக்கும் என்றார். இப்போது யாரும் அப்படி இருப்பதில்லை. 

எனக்கு பந்தாவெல்லாம் செய்யத் தெரியாது.எளிமையாகத்தான் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் மற்றவர்களைக் கவர என்னால் முடியவில்லையோ என்று தோன்றுகிறது.

பேட்டி: ப்ரியா பாலு

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.12.82 இதழ்  )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com