'இதை என்னிடம் முன்னாலேயே சொல்வதெற்கென்ன'?

அழகப்பா கல்லூரியில்  நான் படித்துக்  கொண்டிருந்த வருடம். கல்லூரியின் கலை விழாவிற்கு தலைமை தாங்கிய மக்கள் திலகத்தின் முன்னால் ..
'இதை என்னிடம் முன்னாலேயே சொல்வதெற்கென்ன'?

அழகப்பா கல்லூரியில்  நான் படித்துக்  கொண்டிருந்த வருடம். கல்லூரியின் கலை விழாவிற்கு தலைமை தாங்கிய மக்கள் திலகத்தின் முன்னால் ஒரு மாணவன் என்ற முறையில் தமிழ் திரைப்படங்கள் பற்றி ஒரு திறனாய்வு சொற்பொழிவு நடத்தும் வாய்ப்பு எனக்குக்  கிடைத்தது. 

என் பேச்சைக்  கைதட்டி ரசித்த அவர் மேடையை விட்டு இறங்கும் முன் என்னைப்  பாராட்டி ஒரு பாராட்டுக்கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். அதை இன்று வரை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். 

பின்னர் சென்னை வந்து சட்டக் கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். பொருளாதார நெருக்கடி என்னை படிக்க விடவில்லை.'இன முழக்கம்' என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக கொஞ்ச நாட்கள் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சமயம் எம்.,ஜி.ஆரை அவரது தோட்டத்தில் பத்திரிக்கையாளன் என்ற முறையில்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


"நம்மை  எங்கே அவருக்கு நினைப்பிருக்கப்  போகிறது?" என்று நினைத்துக் கொண்டு மற்ற பத்திரிக்கையாளர்களை  மத்தியில் அமர்ந்திருந்தேன். அந்த அபூர்வ மனிதரின் அன்புள்ளம் என்னைக் கண்ட மாத்திரத்தில், "நீங்கள்  அழகப்பா கல்லூரி மாணவர்தானே?" என்றாரே பார்க்கலாம். 

நான் என்னை மறந்தேன். என் எதிர்காலம் அங்கே தொடங்கியது.  என் நிலைமையைக் கேட்ட அவர் தாயுள்ளத்தோடு எனக்கு உதவி செய்ய முன்வந்தார். மறுநாளே என்னை ஸ்டூடியோவிற்கு வரச் சொல்லி டைரக்டர் காசிலிங்கத்திடம்  உதவி டைரக்டராகச் சேர்த்து விட்டார்கள். பிறகு இந்த அநாதையை தங்கள் வீட்டு மாடியில் தங்கச் சொல்லி கதை திரைக்கதை எழுதும்படி ஊக்குவித்தார்கள். 

நானும் உற்சாகத்தோடு எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னைப்  பார்த்ததும், "ஆமாம்,நான் எழுதச் சொன்னேன் என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், வருமானம் என்ன உங்களுக்கு?" என்று கேட்டார்  

நான் "இல்லை" என்று சொன்ன மாத்திரத்திலேயே ஒரு தாய் போல என்னைக் கடிந்து கொண்ட அவர், "இதை என்னிடம் முன்னாலேயே சொல்வதெற்கென்ன ?" என்றார். அடுத்த நிமிஷம் என் கை  நிறைய  பணம் தந்து அனுப்பினார். 

இப்படித் தொடங்கிய அவரது கருணை உதவிகள் போகப்போக என்னை ஒரு மனிதனாக கலைஞனாக மாற்றத் தொடங்கின. 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com