ஒவ்வொரு நிலையிலும் ரத்தக்கண்ணீர் சிந்தினேன் - இயக்குனர் மவுலி

நான் கற்றுக் கொண்ட பாடம் - டைரக்டர் மவுலி
ஒவ்வொரு நிலையிலும் ரத்தக்கண்ணீர் சிந்தினேன் - இயக்குனர் மவுலி

'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம் திரை உலகில் 1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நுழைந்த இவர் மூன்று வருடங்களில் ஏழு படங்களை இயக்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் எல்லா அறிமுக இயக்குநர்களுக்கும் இருக்கும் உத்வேகம் வெறி ஆகியவை அவருக்கு இன்னுமிருக்கிறது.

மவுலியிடம் உள்ள விசேஷ அம்சம் தவறை சுட்டிக் காட்டினால் சட்டென்று ஒப்புக் கொண்டு விடுவார். அவருடன் பேசியதிலிருந்து:

என்னுடைய முதல் படமான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' படத்தின் தலைப்பை போலவே வித்தியாசமாக எடுக்க நினைத்தேன். முதலில் நான் அந்தப் படத்தை இயக்குவதாக இல்லை. ஏனென்றால் நாடகம் மட்டுமே எழுதி நடித்துக் கொண்டிருந்த எனக்கு சினிமாத துறை பற்றிய அறிவு ஒன்றுமே இல்லை என்றுதான் நான் கூற வேண்டும். தயாரிப்பாளர்கள் படத்தை நீங்களே இயக்குங்கள் என்று கூறியவுடன் பலமாக சிந்தித்தேன்.கடைசியில்தான் சரி என்று முடிவெடுத்தேன்.

இந்தப் படத்தின் மூலம் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? ஒவ்வொரு நிலையிலும் ரத்தக்கண்ணீர் சிந்தித்தான் இந்தப் படமே வளர்ந்தது.ஒரு வகையில் பார்த்தால் அந்த அனுபவங்கள்தான் என்னை வளர்த்தன.

கற்றுக் கொண்ட பாடங்களையெல்லாம் வைத்து நானே நடிகனாக மாறி எடுத்த படம்தான் 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது' . இன்றுள்ள நிலையில் மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் அதுதான்.

ஒரு படத்தின் வெற்றிற்கு அதன் டைரக்டர்தான் முக்கிய காரணம் என்றாலும் அதில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது. பிரதாப்புக்கு மார்க்கெட் இல்லாத நிலையில் என்னுடைய 

படம் வெளியானது. மக்கள் அதை மவுலியின் படமாக பார்க்காமல், பிரதாபின் படமாக பார்த்தார்கள். அதனால்  படம் தோல்வியுற்றது.

இனி என்னை பொறுத்த வரை ஒரு படத்தை ஆரம்பித்து முடித்த பிறகுதான் அடுத்த படத்தை ஆரம்பிப்பேன்.வெறும் இயக்குநராக மட்டுமே இருந்தால் ஒரே நேரத்தில் 5, 6 படங்கள் செய்யலாம். ஆனால் கதாசிரியர் இயக்குனரால் அப்படிச் செய்வது கஷ்டமான ஒன்றுதான். அது மட்டும் அல்லாமல் மற்ற நட்சத்திர நடிகர்கள்  என்  படத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். இனி நான்தான் என் படத்தைப்பொறுத்த வரை 'salable artist'.

திரைப்படமே ஒரு பொழுது போக்கு சாதனமே அன்றி படிப்பறிவூட்டும் கல்விக் கூடம் அல்ல. இன்றுள்ள நிலையில் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படங்களே அதிகம். மவுலி படங்கள் என்றால் வாய் நிறைய சிரித்து விட்டு  வரலாம் என்று மக்கள் பேசும் வண்ணம் படம் எடுப்பது மட்டும் தான் என் வேலை 

சந்திப்பு: சலன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.04.83 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com