முதல் பட அங்கீகாரத்துல கொஞ்சம் கர்வப்பட்டுத்தான் போனேன்: சுஜாதா

டிசம்பர் 10 சுஜாதாவின் பிறந்த நாளன்று காலை ஏழு மணிக்கு அவரது வீட்டுக்கு சென்றேன் .
முதல் பட அங்கீகாரத்துல கொஞ்சம் கர்வப்பட்டுத்தான் போனேன்: சுஜாதா

டிசம்பர் 10 சுஜாதாவின் பிறந்த நாளன்று காலை ஏழு மணிக்கு அவரது வீட்டுக்கு சென்றேன் . சுஜாதா திருவேற்கடு கருமாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். கீழே இறங்கி வந்து எங்களை வரவேற்ற அவரது கணவர் ஜெயகர், "இன்னைக்கு பூரா அவளோட இருக்கப்  போறீங்களா? ஓகே, கேரி ஆன் என்று சொல்லி விட்டு 'இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்த தன் பால்ய கால நண்பர்களைப் பற்றி விசாரித்தார்.

அப்பொழுது வீடு திரும்பிய சுஜாதா உடனடியாக சமையல் செய்யத் தொடங்கினார். இடையில் வெளியில் வந்து, இன்னிக்கு பூராவும் 'நாயக்கர் மகள்'  படப்பிடிப்பு. என்னதான் ஷூட் அது இதுன்னு இருந்தாலும் அவரையும், என் பையனையும் தயார் பண்ணிட்டுதான் நான் புறப்படுவேன். அத யாருக்கும் விட்டுக் கொடுக்கறதில்ல' என்றார்.

மேக்கப் முடிந்து சுஜாதா புறப்படுகிற  வரை இருந்து வழியனுப்பி வைத்தார் அவரது கணவர் ஜெயகர் . காரில் போய்க் கொண்டிருக்கும் போது சுஜாதா சொன்னார். 

சிலோன்ல சின்ன வயசுல நான் கழிச்ச காலங்கள் ரொம்ப பசுமையா பல நேரங்கள்ல எனக்கு நினைவுக்கு வரும். நடிகையாவேன்னு என்னைக்குமே நான் நினைச்சதில்லை. அதுல எனக்கு விருப்பமும் இருந்ததில்லை. சாவித்திரி, பதமினி மாதிரி ஒரு பெரிய நட்சத்திரமா பிரகாசிக்கணும்னு என் வீட்ல ரொம்ப ஆசைப்பட்டாங்க.வீட்ல உள்ளவங்க ஆசையும் விருப்பமும்,மெதுவா என்னையும் தொத்திக்கிச்சு. பேமிலி பிரண்ட் ஒருத்தர்தான் என்னை முதல்ல மலையாளத்துலா அறிமுகம் செஞ்சு வைச்சார். கிட்டத்தட்ட ஒரு முப்பது மலையாளப் படங்களில் நடிச்சு முடிச்சிருந்த  சமயத்துலதான், பாலச்சந்தர்  மூலமா 'அவள் ஒரு தொடர்கதையில தமிழ்ல  அறிமுகமானேன்.

தமிழ்ல முதல் படம் பிரமாதமான வெற்றி. படத்துல கவிதா மாதிரி இவளும் கஷ்டப்பட்டிருப்பாளோனு நினைச்சு நிறைய பேரு  எனக்கு லெட்டர்ஸ்  எழுதினாங்க.தமிழ் ரசிகர்கள் என்னை அங்கீகரித்த விதத்துல கொஞ்சம் கர்வப்பட்டுத்தான் போனேன்.

கற்பகம் ஸ்டூடியோவுக்குள்  கார் நுழைந்தது. ஷாட் இடைவெளியில் சுஜாதா மீண்டும் பேசத்  தொடங்கினார்.

"ஒரே சீரா இண்டஸ்ட்ரில என்னோட வளர்ச்சி அதிகமாயிட்டே வந்தது.இதுக்கெல்லாம் பின்னால ஆழமான குடும்ப பின்னணி உண்டு. குடும்பத்துல ஏற்படுற எந்த  சலசலப்பும், ஒரு நடிகையோட  நடிப்புணர்ச்சியை பாதிக்கவே செய்யுது. ஒருத்தரைக்  காதலிப்பதிலும் சரி;இல்ல ஒருத்தரைக் கணவரா தேர்தெடுக்கறதிலயும் சரி, ஒரு பொண்ணுக்கு முழு சுதந்தரம் வேணும். அதுவும்  பலரோடு பேசிப்பழகுற, நல்லது கெட்டது  தெரிஞ்ச ஒரு நடிகைக்கு, தான் நினைக்கிறவர மணக்க பரிபூரண சுதந்திரம் அவசியம் தேவை.  

வீடு திரும்பும்  வழியில் காரில் சுஜாதா மீண்டும் தொடர்ந்தார். "இருபத்தொரு வயசிலிருந்து இருத்தைந்து வயசு வரைக்கும் படாத கஷ்டமெல்லாம் பட்டுட்டேன். அது தொடர்ந்து இருந்ததுன்னா எப்படியோ ஆகியிருப்பேன். கலயாணம்கிற சந்தோஷம் வந்து என்னை திசை திருப்பி விட்ருக்கலைன்னா 'பர்ஸ்ட்' ஆகியிருப்பேன்.

எனக்கு நடிகையா பேசத்  தெரியாது. மனசு உணர்றத வாய்  சொல்லிடுது.அதிகப்படியா ஏதாவது சொல்லிருந்தேன்னா நீங்க எழுதிட வேண்டாம். எத்தனையோ கஷ்டங்கள் நான் பட்டிருந்தாலும், என்னால யாரும்     கஷ்டப்பட வேண்டாம்.

சந்திப்பு: உத்தமன்

படங்கள்: சங்கர் கணேஷ்

(சினிமா எக்ஸ் பிரஸ் 01.01.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com