பரபரப்பாக வந்து விட்டு, பரபரப்பாக போய் விடுகிறார்கள் - எஸ்.பி.முத்துராமன்

கண்ணா - அம்மானு சொல்லிடப்பா - டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்
பரபரப்பாக வந்து விட்டு, பரபரப்பாக போய் விடுகிறார்கள் - எஸ்.பி.முத்துராமன்

திரையுலகில் எல்லோருக்கும் நல்லவராக திகழும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அன்று ஏ.வி.எம்மின் 'நல்லவனுக்கு நல்லவன்' படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார். சமீபத்தி ல் கண் ஆப்பரேசன் செய்து கொண்ட அவரை குசலம் விசாரித்து விட்டு, அடுத்த நாள் காலையில் அவரைப் பேட்டி காணச் சென்றேன்.    

பள்ளி நாட்களில் நீங்கள் எந்த இயக்குனரின் விசிறி?

'பராசக்தி' படம்பார்த்து இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சின் விசிறியானேன். அதையடுத்து 'நெஞ்சில் ஒரு ஆலயம்' பார்த்து ஸ்ரீதரின் ரசிகரானேன்.

நீங்கள் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரின் உதவியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.அவர் இயக்கிய படங்களில் உங்களை கவர்ந்த காட்சி ஒன்றினை கூற முடியுமா?

'ராமு' படத்தில் தனது கண் முன்னே தன் தாயார் நெருப்பில் எரிவதை பார்த்த பையன் (ராஜ்குமார்)       ஊமையாகி விடுவான். ராணுவத்திலிருந்து திரும்பி வரும் தகப்பன் ஜெமினி, மகனை மனைவியின் சமாதிக்கு அழைத்துச்  செல்வார். பையன் 'அம்மா..அம்மா' என்று சொல்ல முயற்சி செய்வான். கடைசி வரை மனதில் உள்ளத்தை சொல்ல முடியாமல் துடிப்பான். 

இந்த காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு கிழவி உணர்ச்சி வசப்பட்டவராக  "கண்ணா அம்மானு சொல்லி விடப்பா" என்றார். இதை தியேட்டரில் நேரில் பார்த்தோம்.  என்னால் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று.

இயக்குனர் என்று ஒருவர் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வேண்டுமென்பதற்காக டைரக்டர்கள் 'சிம்பாலிக் ஷாட்' வைக்கிறார்களே?

'சிம்பாலிக் ஷாட்' வைப்பதில் தவறவில்லை.அனால் படத்தில் அது சரிவரப் பொருந்த வேண்டும். நான் முதலில் இயக்கிய 'கனி முத்து பாப்பா' படத்தில் ஒரு குழந்தை தந்தியடிக்க வேண்டுமென்றதும் அப்பா தனது பெயரைக் காட்டுவது போல கட்டினோம். சுருக்கமாகச் சொன்னால் இந்த உத்தி இயற்கையாக இருக்க வேண்டும். .செயற்கையாக இருக்க கூடாது.

உங்கள் யூனிட்டுக்கு 'மினிமம் கேரண்ட்டி யூனிட்' என்று பெயராமே?

ஆமாம் ..ரசிகர்களும் பத்திரிகை விமர்சனங்களுமே எங்களை மேலும் மேலும் பாலீஷ் செய்து கொள்ள உதவுகிறது. கதை கெட்டுப் போகாமல் சொல்லப்பட வேண்டும். விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்படும் தவறுகளை கவனத்துடன் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரை ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கு மேல் இயக்க ஒப்புக் கொள்வதில்லை. அத்துடன் ஒவ்வொரு படத்துக்கும் தலா பத்து நாட்கள் ஒதுக்குகிறோம். மூன்றாவது படத்தின் டிஸ்கஷனையும் ஓய்வாக கவனிப்போம்.

அத்துடன் தொழிலில் நானும் எனது யூனிட்டும் முழு அளவில் சின்சியராக பணியாற்றுவதுதான் 'மினிமம் கேரண்ட்டி யூனிட்' என்ற பெயரைப் பெற முடிந்தது.

படப்பிடிப்பின் முதல் நாள் சென்டிமெண்டாக என்ன காட்சி எடுப்பீர்கள் ?

ஓப்பனிங் ஷாட்டில் நல்ல வார்த்தைகள் வருமாறு எடுப்போம். சில படங்களில் இந்த சீன் இடம்பெறும். கதையைப் பொறுத்தது.  

திரையுலகில் இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் வந்து விட்டார்களே? 

திரையுலகில் நிறைய இளைஞர்கள் இயக்குனர்களாக வருவது நல்ல விஷயம்தான். வரவேற்க தகுந்ததும் கூட.ஆனால் அவர்கள் பலர் நிலைபெற்றிருப்பது ரொம்பக் கம்மி. பரபரப்பாக வந்து விட்டு, பரபரப்பாக போய் விடுகிறார்கள்.

தங்கள் இயக்கிய படங்களில் பிடித்தமான லொகேஷன் எது?

புதுக்கவிதை படத்தில் இடம்பெறும் "மூணாறு" பகுதி. இடமும் சரி.பாடலும் சரி சிறப்பாக அமைந்தன. ரஜினிகாந்தும் ஜோதியும் சிறப்பாக நடித்திருந்தனர்.

தாங்கள் டைரக்ட் செய்த படங்களில் மனதை தொட்ட காட்சி எது?

'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் ரஜினிகாந்தும் அம்பிகாவும் சந்திக்கும் காட்சி.  ஓடிப்போன மனைவியை கணவன் பத்து வருடம் கழித்து சந்திக்கிறான். மனைவி தன்னுடைய தவறை மன்னித்து தான் இறந்து விட்டால் தன்னை அனாதைப்பிணம் ஆக்கி விடக் கூடாது என மன்றாடுகிறாள். இந்த சீனில் பஞ்சு அருணாசலத்தின் வசனமும், ரஜினி-அம்பிகாவின் நடிப்பும்  மெருகூட்டியது. மறக்க முடியாத காட்சி.

சவுரிராஜன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.84 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com