பகுதி - 429

மூங்கிலை ஒத்த தோள்களையுடைய

பதச் சேதம்

சொற் பொருள்

வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட வீணிலும் சில பாதகம் செய அவமே தான்

 

வேய்: மூங்கில்; இசைந்து: ஒத்து; தோள்கள் தங்கிய: தோள்களைக் கொண்ட; முயங்கிட: தழுவிட; அவமேதான்: பயனின்றி, வீணாக;

வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உள்ளம் கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம்

 

வீறு கொண்டு: செருக்கடைந்து; உலைந்து: நிலை குலைந்து; அவமே திரிந்து: வீணில் திருந்து; கவன்று: கவலை கொண்டு;

போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே பூதலம் தனிலே மயங்கிய மதி போக

 

உழல் ஆகி: அலைச்சலுற்று; மயங்கிய மதி போக: மயங்கிய அறிவு, மனநிலை என்னைவிட்டு நீங்க;

போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியே பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே

 

போது: மலர்; போது கங்கையின் நீர்: மலரையும் கங்கையின் நீரையும்; பாத பங்கயம்: பாதத் தாமரை; சிலவே புரிந்திட: சிலகாலமேனும் செய்திட

தீ அசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் சேனையும் செல மாள வென்றவன் மருகோனே

 

 

தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே

 

தேசம் எங்கணுமே: அண்டங்கள் எல்லாவற்றையும்; புரந்திடு சூர்: ஆண்ட சூரன்;

ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்

 

ஆயி: தாய்; நீலி: நீல நிறத்தவள்; பிங்கலை: பொன்னிறத்தவள்; அந்தரி: பராகாச வடிவத்தவள்; சூலி: சூலத்தை ஏந்தியவள்; குண்டலி: சுத்த மாயையாகிய சக்தி; வேத தந்திரி: வேதத் தலைவி;

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம் தனையே உகந்து அருள் ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.

 

ஆலம்: நஞ்சு; போதகம்: ஞானோபதேசம்;

வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட... மூங்கிலை ஒத்த தோள்களைக் கொண்ட மாதர்களுடைய மார்பகங்களைத் தழுவுவதற்காக,

வீணிலும் சில பாதகம் செய அவமேதான்... வீணாகச் சில பாதகச் செயல்களைச் செய்து, எந்தப் பயனும் இல்லாமல்,

வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உள்ளமே கவன்று... செருக்கடைந்தும்; உடனே மனம் வருந்தியும்; நிலைகுலைந்தும்; வீணாகத் திரிந்தும்; மனத்திலே கவலை கொண்டும்;

அறிவே கலங்கிட வெகு தூரம் போய் அலைந்து உழலாகி நொந்து... அறிவு கலக்கம் எய்திட, வெகு தொலைவுக்குப் போய் அலைந்து உழன்று நொந்தும்;

பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே பூதலம் தனிலே மயங்கிய மதி போக... அதன் பிறகு உடல் வாட்டமடைந்து; நைந்து; என்னுடைய ஆவியானது கொதித்து, வாடி; இந்தப் புவியின் மீது ஆசைகொண்டு மயங்கிப் போன என்னுடைய மனநிலை நீங்கிப் போய்,

போது கங்கையின் நீர் சொரிந்து இருபாத பங்கயமே வணங்கியே... உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளிலும் மலரையும் கங்கை நீரையும் சொரிந்து வணங்கியே,

பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே... சிலகாலமாவது பூசை செய்யும்படியாக அருள வேண்டும்.

தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து... இலங்கையில் தீப்பற்றி எழ; இராவணனுடைய தலைகளை அரிந்து;

அவர் சேனையும் செல மாள வென்றவன் மருகோனே... அவனுடைய சேனைகளும் அழிந்து மாளும்படியாக வென்ற ராமனுடைய மருமகனே!

தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ... அண்டங்கள் எல்லாவற்றையும் ஆண்டு வந்தவனான சூரபத்மன் மடியும்படியாக வேலைக் கொண்டு வென்றவனே!

தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே... தேவர்கள், தம்முடைய பதியான அமராபதியை மீண்டும் ஆளும்படி அருள் செய்தவனே!

ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி... தாயாக இருப்பவளும்; அழகியும்; கருநிறம் படைத்த காளியும்; பொன்னிறம் கொண்ட கௌரியும்; உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் பராகாச வடிவின(ளான அந்தரியும்); திரிசூலத்தைத் தரரித்தவளும்; சுத்த மாயையான சக்தியாக விளங்குபவளும்;

ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச... ஆதி முதல்வியான அம்பிகையும்; வேதத் தலைவியுமான உமையம்மையை இடது பாகத்திலே கொண்டிருப்பவரும்; ஆலகால விடத்தைப் பருகியவருமான பரமசிவனார் வணங்கிக் கேட்டுக் கொண்டபடி,

ஓர் போதகம் தனையே உகந்து அருள் ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே... ஒப்பற்ற ஞானோபதேசத்தை உவப்புடன் செய்தருளியவனே!  திருவாவினன்குடியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

இலங்கையில் தீப்பற்றி எழ; இராவணன் தலைகளை அரிந்து அவனுடைய சேனைகளைத் தொலைத்தழித்த இராமனுடைய மருமகனே!  அண்டங்களையெல்லாம் ஆண்டு வந்த சூரன் மாளும்படியாக வேலைக் கொண்டு பொருது வென்றவனே!  தேவர்கள் தம்முடைய ஊரான அமராபதியை மீண்டும் ஆளும்படிய அருள் செய்தவனே!  தாயும்; அழகியும்; கருநிறம் படைத்த காளியும்; பொன்னிறம் படைத்த பிங்கலையான கௌரியும்; உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் பராகாச வடிவினளாகிய அந்தரியும்; திரிசூலத்தை ஏந்தியவளும்; சுத்த மாயையாகிய சக்தியும்; ஆதி முதல்வியும்; அம்பிகையும்; வேதத் தலைவியுமான உமையம்மையைத் தன் இடது பாகத்திலே கொண்டவரும்; ஆலகால விஷத்தைப் பருகியவருமான பரமசிவனார் வணங்கிக் கேட்டுக்கொண்டதன்படி ஒப்பற்ற ஞானோபதேசத்தை உவப்புடன் செய்தருளியவனே!  திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!

மூங்கிலை ஒத்த தோள்களையுடைய மாதர்களுடைய கொங்கைகளைத் தழுவுவதற்காகச் சில பாதகச் செயல்களைச் செய்தும்; வீணாக கர்வம் கொண்டும்; வருந்தியும்; நிலைகுலைந்தும்; அலைந்து திரிந்தும்; மனக் கவலை அடைந்தும்; என் ஆவி கொதிப்புற்று வாடியும் (இருப்பதற்குக் காரணமான) இந்த உலகத்தின் மீது பற்று வைத்திருக்கும் என்னுடைய மனநிலையானது என்னைவிட்டு விலகும்படியாக மலரையும் கங்கை நீரையும் சொரிந்து உன்னுடைய இரண்டு பாதத் தாமரைகளையும் வணங்கிச் சிலகாலமேனும் பூசை செய்யும் பேற்றைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com