பகுதி - 431

தோகை மயிலைச் செலுத்தும் முருகன் இவன்தான்

பதச் சேதம்

சொற் பொருள்

நீரு(ம்) நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான

 

நீரும் நில(மு)ம் அண்டாத: நீரும் பூமியும் சம்பந்தப் படாத; தாமரை: மூலாதாரம் தொடங்கி ஆக்ஞா வரையில் விரிந்திருப்பதான தாமரைகள் (விளக்கத்தில் காண்க);

நேச மலரும் பூவைமாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி

 

பூவை மாது: சிவ மாது; மாதின் மணமும் போல: சிவமாதைத் திருமணம் செய்துகொண்டதைப் போல; நேர் மருவி: நேராகப் பொருந்தி; உண்: உண்ணும், அனுபவிக்கும்;

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவை ஊடே

 

சோமன்: சந்திரன்; நீழல்: ஒளி, கதிர்; அண்டாத: அணுகாத, எட்டாத;

தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே

 

மயிலின் பாகனாம்: மயிலைச் செலுத்துபவனான முருகன் இவனே என்னும்படியாக; அயில்: வேல்; தார்: மாலை, கடப்ப மாலை;

வாரி அகிலம் கூச ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல

 

வாரி: கடலின்; அகிலம்: எல்லாப் பக்கங்களும்; கூச: நிலைகுலைய; பணம்: படம்; வாய்விட: வாயைப் பிளக்க; ஒடு: ஓட; எண்பாலும்: எட்டுத் திசைகளிலும்; உடு போல: நட்சத்திரங்களைப் போல;

வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே

 

வார்: உயர்ந்த; வார்மணி: உயர்ந்த மணி; கவின்: அழகு; மயில் விடும்: மயிலைச் செலுத்தும்;

ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா

 

ஆரியன்: பிரமன்; அவன் தாதை: திருமால்; இனமும்: இன்னமும், இப்போதும்; அருணஞ் சோதி: சிவந்த ஜோதியாகிய அருணாசலேசர்;

ஆனை முகவன் தேடி ஓடியே அ(ண்)ண  அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே.

 

ஆனைமுகவன்: யானை முகன், விநாயகன்; அண: அண்ண, அணுக, நெருங்க;

நீரு(ம்) நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி... நீரும் நிலமும் சம்பந்தப்படாமல் தழைத்திருப்பதாகிய தாமரைகளாகிய* (ஆறு) ஆதாரங்களின் வழியாக (சிவயோக நெறியில்) படர்ந்து;

(* மூலாதாரம் என்னும் நாலிதழ்த் தாமரை; சுவாதிஷ்டானம் என்னும் ஆறிதழ்த் தாமரை; மணிபூரகம் என்னும் பத்து இதழ்த் தாமரை; விசுத்தி என்னும் பதினாறு இதழ்த் தாமரை; இரண்டு அல்லது மூன்றிதழ்களை உடைய ஆஞ்ஞை என்னும் தாமரை எனப்படுபவனை நீரும் நிலமும் சம்பந்தப்படாமல் தழைக்கும் தாமரைகள் என்பது உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்களின் விளக்கம். இந்த ஆறு ஆதாரங்களின் வழியாகச் சிவயோக நெறியிலே படர்ந்து,)

நீளம் அகலம் சோதி வடிவான... நீளத்திலும் அகலத்திலும் எல்லையற்றதாக விளங்கும் ஜோதி வடிவான,

நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி... சிவநேசம் மலர்வதால் கிடைக்கின்ற பூவைமாதான சிவமாதை மணஞ்செய்துகொண்டதைப் போன்ற உரிமையோடு, நேராகப் பொருந்தி;

உண் காதலுடன் மேவி... அனுபவிக்கும் ஆசையோடு அடைந்து; 

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவை ஊடே... சூரிய சந்திரர்களுடைய ஒளிக் கிரணங்களால் அணுகவும் முடியாத அளவுக்குப் பேரொளியாக இருக்கின்ற அந்த ஒளிமயமான இடத்திலே,

தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட... ‘தோகை மயிலைச் செலுத்துபவ(னான முருகன்) இவனே’ என்று அடியேன் மகிழ்ச்சியால் கூத்தாடும்படியாக,

சோதி அயிலும் தாரும் அருள்வாயே... ஒளிபடைத்ததாகிய உன்னுடைய வேலையும் கடப்ப மாலையையும் தந்தருள வேண்டும்.

வாரி அகிலம் கூச ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒடு... கடலுடைய எல்லாப் பகுதிகளும் நிலைகுலைந்து போகும்படியாகவும்; ஆயிரம் பணாமுடிகளை உடைய ஆதிசேடன் வாய்பிளக்கவும்; (அப்படிப் பிளக்கும்போது),

எண் பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே... (அந்த வாயிலிருந்து) உதிரும் மணிகள் எட்டுத் திக்கிலும் நட்சத்திரங்களைப் போல உதிர்ந்தோடும்படியாகவும்;

கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே... நிறைந்த அழகோடு ஆடுகின்ற பெரிய மயிலைச் செலுத்துபவனே!  சேவற் கொடியை உடையவனே!

ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும்... பிரமனும் அவனுடைய தந்தையான திருமாலும் தேடிய, (அப்படித் தேடியும்) இன்னமும் (காணாமல்) பாடிப் போற்றுபவரும்;  

ஆடல் அருணம் சோதி அருள் பாலா... நடனம் செய்பவரும்; சிவந்த ஜோதியுமான அண்ணாமலையார் அருளிய பாலா!

ஆனை முகவன் தேடி ஓடியே அ(ண்)ண... யானைமுகனான விநாயகன் (வள்ளி இருக்கும் இடத்தைத்) தேடிவந்து அணுகும் அளவுக்கு

அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே.... வள்ளியிடத்திலே பெருத்த காதலையுடைய ஜோதி ஸ்வரூபமான பெருமாளே!

சுருக்க உரை

கடலின் எல்லாப் பக்கங்களும் நிலைகுலையும்படியாகவும்; ஆயிரம் படங்களை—பணாமகுடங்களை—உடைய ஆதிசேடன் வாய் பிளக்கும்படியாகவும்; அவன் அப்படி வாய்பிளக்கின்ற காரணத்தால் அந்த வாயிலிருந்து அவனுடைய நாகரத்தினங்கள் எட்டு திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல தெறித்துச் சிதறியோடும்படியாகவும் அழகு நிறைந்த மயிலைச் செலுத்துபவனே!  சேவற் கொடியை உடையவனே!  பிரமனும் அவன் தந்தையான திருமாலும் எவ்வளவு தேடினாலும் இன்னமும் கிடைக்காதவரும், அவர்களால் போற்றிப் பாடப்படுபவரும்; நடனமாடுபவரும்; செஞ்சுடருமான அண்ணாமலையார் அருளிய பாலனே!  ஆனைமுகனே வள்ளி இருக்கும் இடத்தைத் தேடிவந்து அவரை நெருங்கும் அளவுக்கு வள்ளியம்மை மீது பெருத்த காதலையுடையவனே!  ஜோதி ஸ்வரூபமான பெருமாளே!

நீரும் பூமியும் சம்பந்தப்படாமல் தழைத்திருப்பதான ஆறு ஆதாரங்களாகிய தாமரைகளின் வழியாகச் சிவயோக நெறியில் படர்ந்து சென்று; நீள அகலங்களால் எல்லையற்றதாக விளங்குகின்ற ஜோதி வடிவமான சிவநேசத்தால் அடைவதான சிவமாதைத் திருமணஞ் செய்துகொண்ட உரிமையோடு நேராகப் பொருந்தி அனுபவிக்கும் ஆசையோடு நின்று; சூரியனாலோ சந்திரனாலோ தம்முடைய ஒளிக்கிரணங்களால் சற்றும் அணுக முடியாததான ஒளிமயமான இடத்திலே,

‘தோகை மயிலைச் செலுத்தும் முருகன் இவன்தான்’ என்று அடியேன் மகிழ்ந்து கூத்தாடும்படியாக உன்னுடைய ஒளிபடைத்த வேலையும் கடப்ப மாலையையும் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com