பகுதி - 425

வள்ளி மலையிலுள்ள பெரிய தினைப்புனத்துக்குச் சென்று

பதச் சேதம்

சொற் பொருள்

சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே

 

சதங்கை மணி: சதங்கையும், ரத்தினம் முதலான மணிகளும்; சரங்கள்: மணி வடங்கள்; புயமீதே: தோள் மீது;

தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட

 

குவடு: மலை; பொறி: புள்ளி, தேமல், பசலை; மால்: ஆசை(யை விளைவிக்க); பொன்: அழகிய; சரம் கண்: அம்பைப் போன்ற கண்ணை; மறி: மறிக்கும், தடுக்கும்; குழை: குண்டலம்;

இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகுஆர் மை குழலாரோடு

 

மயில் ஏர்: மயிலின் அழகை; ஒத்து: கொண்டு; உகந்த நகை: மகிழ்ச்சியைத் தரும் புன்னகை; மைகுழல்: கரிய கூந்தல்;

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே

 

அமளி: மெத்தை;

சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே

 

கடம்பு தொடை: கடப்ப மாலை;

சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே

 

 

பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா

 

பெதும்பை: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று பெண்களுக்குச் சொல்லப்படும் பருவங்களுள் ஒன்று—8 முதல் 11 வயதுவரை உள்ளவள் பெதும்பை; ப்ரசண்ட: வலிய, வீரம் மிகுந்த; 

பெரும் புனமது ஏகி குற பெணொடு கூடி பெரும் புலியுர் வாழ் பொன் பெருமாளே.

 

புனம்: தினைப்புனம்; பொன்: அழகிய;

சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட... பாதச் சதங்கையும்; ரத்தினம் முதலான மணிகள் பதிக்கப்பட்ட வீரம்சிலம்பும் ஒலிக்க;

சரங்கள் ஒளி வீசப் புயம் மீதே தனங்கள் குவடு ஆட... (அணிந்துள்ள) மணி வடங்கள் ஒளியை வீச; தோளின் மேலே தனங்களாகிய மலைகள் அசைய;

படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட... (அந்தத் தனங்களின்மேல்) படர்ந்திருக்கும் பசலையானது ஆசையை ஊட்ட; அழகிய அம்பைப் போன்ற கண்களைத் தடுக்கின்ற காதுகளில் குழைகள் ஆட;

இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று... மயில் போன்றதும் இதம் செய்வதுமான அழகைக் கொண்டும்; மகிழ்ச்சியைத் தருவதான புன்சிரிப்போடு பேசியும்;

இரம்பை அழகு ஆர் மைக் குழலாரோடு... ரம்பையைப் போன்ற அழகும்; கரிய கூந்தலும் உடைய பெண்களோடு,

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை... நெருக்கமாக மெத்தையில் அழுந்திக் கிடக்கும் என்மேல்,

நீ சற்று இரங்கி இரு தாளைத் தருவாயே... சற்றே நீ மனமிரங்கி உன்னுடைய இரண்ட பாதங்களையும் அளித்தருள வேண்டும்.

சிதம்பர குமார கடம்பு தொடை ஆடச் சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே... சிதம்பத்து ஈசரான சிவனாருடைய குமாரா!  கடம்ப மலர்மாலை அசைய, மயிலின்மேல் வீற்றிருப்பவனே!

சிவந்த கழுகு ஆடப் பிணங்கள் மலை சாயச் சினந்து அசுரர் வேரைக் களைவோனே... சிவப்பான கழுகுகள் மகிழ்ந்து ஆடும்படியாக, பிணங்கள் மலைமலையாகக் குவியும்படியாக அசுரர்களை வேரறப் பறித்து வீசியவனே!

பெதும்பை எழு கோலச் செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா... பெதும்பைப் பருவத்தின் அழகுக் கோலம் வெற்றிகரமாக எழுந்து விளங்கும் சிவகாமியும் வீரம் செறிந்த அபிராமியுமான உமையின் ஒப்பற்ற மகவே!

பெரும் புனமது ஏகிக் குறப் பெணொடு கூடி பெரும் புலியுர் வாழ் பொன் பெருமாளே.... (வள்ளி மலையின்) பெரிய தினைப் புனத்துக்குச் சென்று அங்கிருந்த குறப்பெண்ணான வள்ளியோடு சேர்ந்து பெரும்புலியூரில் வீற்றிருப்பவனான பெருமாளே!

சுருக்க உரை

சிதம்பரேசரான பரமசிவனாரின் குமாரனே!  கடம்ப மாலை அசைந்தாட, மயில்மீது வீற்றிருப்பவனே!  சிவந்திருக்கும் கழுகுகள் மனம் களித்தாடும்படியாக மலைமலையாக அசுரர்களைப் பிணங்களாக வீழ்த்தி, அவர்களுடைய குலத்தை வேரறக் களைந்தவனே!  பெதும்பைப் பருவத்தின் அழகுக் கோலம் விளங்குகின்ற சிவகாமியும் வீரம் செறிந்த அபிராமியுமான உமையம்மையின் மகவே!  வள்ளி மலையிலுள்ள பெரிய தினைப்புனத்துக்குச் சென்று, அங்கிருந்த குறப்பெண்ணான வள்ளியோடு சேர்ந்துகொண்டு, பெரும்புலியூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

பாதச் சதங்கைகளும்; மணிகளால் செய்யப்பட்ட வீரச்சிலம்பும் கிண்கிணுக்க; மணிவடங்கள் ஒளிவீச; தோளின்மேல் தனங்கள் அசைய; அந்தத் தனங்களில் படர்ந்திருக்கும் பசலை ஆசையை விளைவிக்க; இதம்தருகின்ற மயிலைப் போல அழகுடனும் மகிழ்ச்சியை ஊட்டும் புன்சிரிப்புடனும் பேசுபவர்களான, ரம்பையை நிகர்த்த, கரிய கூந்தலையுடைய பெண்களோடு மெமத்தையில் நெருங்கி அழுந்திக் கிடக்கும் என்மீது நீ சற்றே மனமிரங்கி உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com