பகுதி - 386

என்னிடத்திலே அன்பு புரிந்தருள வேண்டும்

‘என்னிடத்திலே அன்பு புரிந்தருள வேண்டும்’ என்று இறைவனை வேண்டும் இந்தப் பழநித் திருப்புகழ், அருணகிரிநாதர் பாடிய மூவரில் ஒருவரான கலிசைச் சேவகனாரைப் பற்றிய குறிப்புடன் கூடியது.  வீரை என்னும் தலத்தில் பழநி முருகனை எழுந்தருளச் செய்தவர் இவர் என்றும் அருணகிரியாருடைய நண்பரென்றும் அறிகிறோம்.  கலிசைச் சேவகனாரைக் குறிப்பிட்டுள்ள இன்னொரு பாடலான ‘சீறலசடன்’ என்று தொடங்கும் திருப்புகழை நம்முடைய 308ம் தவணையில் பார்த்தோம்.

இந்தப் பாடலில் கம்சன் அனுப்பிய குவாலயபீடம் என்ற யானையைப் பற்றிய குறிப்பும் வருணனையும் உள்ளன.  திருமாலுடைய கிருஷ்ணாவதாரம் பாடப்படுகின்றது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் முதலெழுத்தும் ஏழாவது எழுத்தும் நெடில்; ஒற்று சேர்த்து 6, 13 ஆகிய எழுத்துகள் (ஒவ்வொரு மடக்கிலும்) மெல்லொற்று.  

தானதன தந்த தானதன தந்த
      தானதன தந்த தானதன தந்த
      தானதன தந்த தானதன தந்த - தனதான

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
         மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
         தீநரிகள் கங்கு காகமிவை தின்ப - தொழியாதே
      தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
         மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
         சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து - நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
         நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
         யாகியவு டம்பு பேணிநிலை யென்று - மடவார்பால்
      ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
         தானுமிக வந்து மேவிடம யங்கு
         மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு - புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
         பார்முழுது மண்ட கோளமுந டுங்க
         வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை - யதனாலே
      வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
         நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
         வாரணஇ ரண்டு கோடொடிய வென்ற - நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
         மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
         வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து - பொடியாக
      வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
         கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
         வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் - பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com