பகுதி - 389

கரிய கண்களால் ஜாடை காட்டி

பதச் சேதம்

சொற் பொருள்

அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே

 

அருக்கி: சுருக்கமாக; மெத்தெனச் சிரித்து: மென்மையாகப் புன்முறுவல் பூத்து; அறக் கறுத்த கண்: முழுவதும் கரிய நிறத்தைக் கொண்ட கண்; பயிலாலே: குறிப்பாலே, ஜாடையாலே;

அழைத்து அகப் படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்து அபத்தம் உற்று வித்தகர் போல

 

ஒட்டற: ஒன்றையும் விடாமல், ஒட்டஒட்ட; பறிப்பவர்க்கு அடுத்து: பறிப்பவர்களை நெருங்கி, நாடி; அபத்தம்: பொய்; வித்தகர் போல: அறிவாளிகளை, ஞானியரைப் போல;

தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம்

 

தரிக்கும்: நடிக்கும்; வித்தரிக்கும்: விஸ்தாரமாக, விரிவாக; ப்ரசித்தி: புகழ், கீர்த்தி;

சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இப் பிறப்பு பெற்றிடலாமோ

 

சமைத்து உரைத்து: புனைந்து உரைத்து;

பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம்

 

பொருக்கு: காய்ந்த, வற்றி உலர்ந்த; அரக்கர் கொத்து: அரக்கர் கூட்டம்; பொருப்பினில்: (கிரெளஞ்ச) மலையில், பெருக்க உற்றிடு மாயம்: பெருகி, நிரம்ப இருந்த மாயம்;

புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா

 

அடல் கரம்: வலிமையுள்ள கரம்; கற்பகபுரி: கற்பக மரம் இருப்பதான தேவலோகம்;

திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை  குறத்தியை தினை புன கிரி தலத்து இடை தோயும்

 

திருத்த முத்தமிழ்: திருத்தமான, செம்மையுடைய முத்தமிழ்; மைக் குறத்தி: மை தீட்டிய கண்களை உடைய வள்ளி; தினைப்புன கிரி: தினைப்புனம் உள்ளதான வள்ளி மலை; தோயும்: தோய்ந்த, அணைத்த;

சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே.

 

குக்குடக் கொடி: சேவற் கொடி; செருக்க: பெருமிதம் கொள்ள; உற்பல சுனை: நீலோற்பலம்—கரு நெய்தல்;

அருக்கி மெத்தெனச் சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ளக் கருத்து அழித்து அறக் கறுத்த கண் பயிலாலே... சுருக்கமாகவும் (சின்னதாக) மென்மையாகவும் சிரித்து; பார்க்கின்றவர்களின் மனங்களை உருக்கி; மனத்திலே உள்ள கருத்தை அழித்து, மிகவும் கரியதாகிய கண்ணின் குறிப்பால்—ஜாடையால்,

அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்து அபத்தம் உற்று... கூப்பிட்டு, தம்முடைய வசப்படுத்திக் கொண்டு, ஒன்றும் மிஞ்சாதபடி பொருளைப் பறிக்கும் பொருட்பெண்டிரைத் தேடிச் சென்றும்; பொய்யை உற்று (பொய்யாக),

வித்தகர் போலத் தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி... ஞானியரைப் போல நடித்தும் விஸ்தாரமாகத் தத்துவங்களைப் பேசுகின்ற பெரும்புகழ்,

எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் சமைத்து உரைத்து... எந்த உலகத்திலும் யாருக்கும் இல்லை என்று ஞானம் உள்ளது போன்ற சொற்களைப் பொய்யாகப் பேசி (உண்டாக்கிப் பேசி);

இமைப்பினில் சடக்கெனப் படுத்து எழச் சறுக்கும் இப் பிறப்பு பெற்றிடலாமோ... கண் இமைக்கின்ற நேரத்துக்குள் சட்டென்று படுத்து எழுவதைப் போல சறுக்கி அழிகின்ற இந்தப் பிறவியைப் பெற்றிடலாமோ? (பெறாமல் இருக்க வேண்டும்.)

பொருக்கு எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற... வறட்சியடைந்து உலர்ந்த தன்மை வெளிப்படுமாறு கடற்பரப்பு வற்றவும்; அரக்கர் கூட்டம் மடியவும்;

பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் புடைத்து இடித்து அடல் கரத்து உறப் பிடித்த... கிரெளஞ்ச மலையில் நிரம்பி இருந்ததான மாயம் உடைந்து கெடும்படியாகவும், வலிய கரத்தில் பொருந்துமாறு (வேலைப்) பிடித்தவனே!

கற்பகப் புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா... கற்பக மரங்கள் நிறைந்ததான தேவலோகத்தின் மீது கருணைகொண்ட அழகும் ஒளியும் நிறைந்த வேலை ஏந்துபவனே!

திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த... திருத்தமான முத்தமிழில் பாடும் பாடலுக்கு (உரியவன்) ‘இவன் ஒருவனே’ என்று நிற்பவனே!

மைக் குறத்தியைத் தினைப் புனக் கிரித் தலத்து இடை தோயும்... மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை, அவளிருந்த தினைப்புனம் உள்ளதான வள்ளி மலையில் அணைத்தவனே!

சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.... (திருக்கரத்திலுள்ள) சேவற்கொடி(யிலுள்ள சேவல்) பெருமிதம் அடைந்து கூவுகின்றதும்; நீலோற்பலங்கள் மலரும் சுனைகளைப் பெற்றிருக்கும் சிறப்புள்ளதமான திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

கடற்பரப்பு பொருக்குத் தட்டியது போல உலந்துபோகும்படியும்; அரக்கர்கூட்டம் மடியும்படியும்; மாயம் நிரம்பி இருந்ததான கிரெளஞ்ச பர்வதம்—அந்த மாயையோடு—உடைந்து அழியும்படியும் (வீசிய) வேலை, வலிய திருக்கரத்தில் பிடித்தவனே!  தேவலோகத்தின் மீது கருணை செய்தவனே!  முத்தமிழாலே திருத்தமாகப் பாடப்படும் கவிக்கு உரிய (ஒரே) ஒருவனாக விளங்குபவனே!  மைதீட்டிய கண்களை உடைய வள்ளியம்மையை, தினைப்புனங்கள் நிறைந்ததான வள்ளி மலையில் அணைத்தவனே!  கையில் பிடித்திருக்கும் கொடியில் விளங்குவதான சிவந்த சேவல் பெருமிதத்துடன் கூவுவதும்; நீலோற்பலங்கள் மலக்கின்ற சுனைகளை உடையதுமான திருத்தணிகையில் எழுந்தருளியுள்ள பெருமாளே!

சின்னதாகவும் மென்மையாகவும் புன்னகைத்தும்; காண்பார் உள்ளங்களை உருக்கியும்; அவர்களுடைய உள்ளத்திலுள்ள கருத்தை அழித்தும்; கரிய கண்களால் ஜாடை காட்டி அழைத்தும்; தம் வசப்படுத்தியும்; கையிலுள்ள பொருளை மொத்தமாகப் பறிக்கின்ற பொருட்பெண்டிரை நாடிச் சென்றும்; பொய்யாக ஞானியர்போல நடித்தும்; விரிவாகப் பேசியும்; உயர்ந்த ஞானங்களை எடுத்துச் சொல்வதால தனக்கு ஏற்பட்டிருக்கிற புகழைப்போல உலகத்திலே யாருக்குமே இல்லை என்று பகட்டிக்கொண்டும்; இல்லாதனவற்றைப் புனைந்து ஞான மொழிகளைப் போலப் பேசியும்; இமைப் பொழுதில் படுத்து எழுவதைப் போல (பொய் இன்பத்தைத் தந்து கணத்தில் மறைகின்ற இந்தப்) பிறவியைப் பெறலாமோ?  (பெறாதபடி அருள் செய்திடல் வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com