பகுதி - 391

பூண் அணிந்த யானைத் தந்தங்களைப் போல

பதச் சேதம்

சொற் பொருள்

கிஞ்சுகம் என சிவந்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புனக்கொடிச்சி அதி பார

 

கிஞ்சுகம்: கலியாண முருக்கம், கிளி என இரண்டு பொருள்—பூ சிவப்பு, கிளியின் மூக்கு சிவப்பு என்பதால் இரண்டும் பொருந்தும்; தொண்டையள்: உதட்டை உடையவள்; கெண்டை: மீன்; கெண்டையள்: மீன்போன்ற கண்ணை உடையவள்; புனக்கொடிச்சி: புனத்தைக் காத்த, கொடிபோன்ற வள்ளி;

கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா

 

கிம்புரி: யானையின் தந்தத்தில் இடும் பூண்; மருப்பு: தந்தம்; கிங்கரன்: (ஏவியதைச் செய்யும் ஏவலன்; பேசா: பேசி;

நெஞ்சு உருகி நெக்கு நெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனையில் பத்தர் வெட்சி மலர் தூவும்

 

நிர்குணத்தர்: குணத்தைக் கடந்த பெரியோர்; நிந்தனையில் பத்தர்: நிந்திக்க முடியாத—குற்றமற்ற—பக்தர்கள்;

நின் பதயுகம் ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே

 

பதயுகம்: இரண்டு பாதங்கள்; தமிழ்த் த்ரயத்தை: முத்தமிழை;

கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும்

 

கஞ்சன்: கம்சன்; துட்ட: துஷ்ட; குஞ்சரம்: யானை; மருப்பு: தந்தம்; ஒசித்த: முறித்த; கங்கன்: கங்கம் என்றால் கழுகு, கருடன், ஆகவே கருடனை வாகனமாகக் கொண்ட திருமால் கங்கன்;

கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு

 

கந்து: கட்டுத்தறி; கந்தெறி களிறு: கட்டுத்தறியை முறிக்கும் யானை; நட்டம் இட்ட: நடனமாடிய; கம்பன்: ஏகம்பன், ஏகாம்பரன்;

அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமர் ஆடி

 

ஜகத்ரயத்தை: மூவுலகை; விக்ரமித்து: பராக்கிரமத்தைக் காட்டி; பொருப்போடு: (கிரெளஞ்ச) மலையோடு; அமராடி: போர் புரிந்து;

அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே.

 

அவுணரை: அரக்கரை; களத்தில்: போர்க்களத்தில்; உததி: கடல்; அண்டர்: தேவர்;

கிஞ்சுகம் எனச் சிவந்த தொண்டையள் மிகக் கறுத்த கெண்டையள் புனக் கொடிச்சி... கிளியைப் போல சிவந்த உதட்டையும்; கரிய மீனைப் போன்ற கண்களையும் கொண்டவளும்; தினைப் புனத்தைக் காத்த கொடிபோன்றவளுமான வள்ளியுடைய;

அதி பாரக் கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலைக் குறத்தி... பூண் அணிவிக்கப் பட்டதும் மிகுந்த பாரமுள்ளதுமான யானைத் தந்ததை ஒத்ததும்; குங்குமக் கலவையை அணிந்ததுமான மார்பகத்தை உடைய குறமகளான வள்ளியுடைய;

கிங்கரன்* எனப் படைத்த பெயர் பேசா நெஞ்சு உருகி நெக்கு நெக்கு நின்று தொழு நிர்க் குணத்தர்... (எடுபிடி) வேலைகளைச் செய்யும் ஏவலன் என்று நீ பெற்றிருக்கின்ற பெயரைச் சொல்லி; மனமுருகி, நெகிழ்ந்தபடி நின்று தொழுகின்ன, குணங்களைக் கடந்தவர்களான பெரியோர்களும்,

('கிம் கர்'?—என்ன செய்யவேண்டும்—என்று கேட்டபடி வந்து நிற்பதால் இவர்கள் கிங்கரர்கள்.  ஏனென்று கேட்காமல் இட்ட பணியைச் செய்பவர்கள்.  வள்ளிக்கு முருகன் அப்படிப்பட்ட அடியாள் என்கிறார் அருணகிரியார்.)

நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் நின் பதயுக(ம்) ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க... குற்றமற்றவர்களான பக்தர்களும் வெட்சி மலரைத் தூவி வழிபடும் உன்னுடைய இரண்டு திருவடிகளுடைய பெரிய புகழை தொகுத்துச் சொல்லவும்;

நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே... உனக்கும் பணிசெய்யவும் அடியேனுக்கு முத்தமிழைத் தந்தருள வேண்டும்.

கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனு(ம்)... கம்சன் அனுப்பிய குவலயாபீடம் என்னும் துஷ்ட யானையின் தந்தத்தை முறித்தவனும்; கருடவாகனனுமான திருமாலுடைய,

மதித் திகைக்க மதம் வீசும் கந்து எறி களிற்று உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும்... புத்தியும் கலங்கும்படியாக (வருவதும்); கட்டுத்தறியை முறித்தெறிந்து திரிவதுமான யானையின் தோலை உரித்து வென்று திருநடனம் புரிந்தவரான ஏகாம்பர மூர்தியே,

மதிக்க உக்ர வடி வேல் கொண்டு அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து... மதிக்கின்ற வண்ணமாக, உக்ரமும் கூர்மையும் நிறைந்த வேலைக் கொண்டு, (சூரனுக்கு) அஞ்சியிருந்த மூவுலகையும், ‘அஞ்சேல்’ என்று சொன்னவண்ணம் பராக்ரமத்தைக் காட்டியும்;

அன்பர் புகழப் பொருப்பொடு அமர் ஆடி... அடியார்கள் புகழும்படியாக கிரெளஞ்ச மலையோடு போர்புரிந்தும்;

அன்று அவுணரைக் களத்தில் வென்று உததியைக் கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே.... முன்னர் அரக்கர்களைப் போர்க்களத்தில் வென்று, கடலைக் கலங்கச் செய்து, தேவர்களை சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

சுருக்க உரை

கம்சன் அனுப்பிய குவாலயபீடம் என்னும் துஷ்டத்தனம் நிரம்பிய யானையின் கொம்புகளை ஒடித்து வென்றவரும் கருடவாகனருமான திருமாலுடைய சிந்தைகூட திகைக்கும் வண்ணமாக கட்டுத்தறியைப் பெயர்த்துக்கொண்டு எதிர்த்து வந்த யானையுடைய தோலை உரித்துப் போர்த்து திருநடனம் புரிந்தவரான ஏகாம்பரரே மதிக்கும் வண்ணமாக, சூரனைக் கண்டு கலங்கிய மூவுலகத்தையும் ‘அஞ்சேல்’ என்றபடி உக்ரமும் கூர்மையும் நிறைந்த வேலாயுதத்தை வீசிப் பராக்ரமத்தைக் காட்டியவனே!  அன்பர்கள் புகழும் வண்ணமாக கிரெளஞ்ச பர்வதத்தோடு போரிட்டவனே!  அரக்கர்களைப் போர்க்களத்தில் அழித்தவனே!  கடலைக் கலக்கியவனே!  தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தருளிய பெருமாளே!

பூண் அணிந்த யானைத் தந்தங்களைப் போல மிகவும் கனமானதும்; குங்குமக் கலவை பூசியதுமான வள்ளிக் குறத்திக்கு ஏவலாளன் என்று நீ பெற்றுள்ள பெருமையைப் புகழ்ந்து பேசுகின்ற; அப்படிப் பேசிப் பேசி நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகுகின்ற, குணங்ளைக் கடந்தவர்களான பெரியவர்களும் குற்றமற்ற பக்தர்களும் வெட்சி மலரைத் தூவி வழிபடும் உன்னுடைய இரண்டு திருவடிகளின் பெரிய பெருமைகளை நான் வகுத்தும் தொகுத்தும் உரைக்கும்படியாகவும்; உனக்கு சேவை செய்யவும் அடியேனுக்கு முத்தமிழைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com