பகுதி - 533

இளமை நிறைந்த கருமுகிலை

பதச் சேதம்

சொற் பொருள்

அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச  திரள் தோளும்

 

 

அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும்

 

அலம்: திருப்திகரமான, போதுமான அளவு; தாமம்: மாலை; மணி திரளை: மணி மாலைகளின் திரள், கூட்டம்; ஆழி: மோதிரம்; கடக(ம்): கங்கணம்;

சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம்

 

சலங்கு: சலங்கை; மணத்த மலர்: மணம் வீசும் மலர்;

திமிந்தோதி.................................................................தனனத் தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ

 

நடிப்பது: நடனமாடுவது; மன்: மன்னி, நன்றாக, நிரம்ப;

இலங்கேசர் வனத்துள் வனக்குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும்

 

வனத்துள்: அசோக வனத்துள்; வனக்குரங்கு: அனுமன்; இளம் தாது: மென்மையான மகரந்தம்; மலர்த்திரு: இலக்குமி, சீதை;

இளங் காளமுகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே

 

காளமுகில்: கருமுகில் (காள: கரிய); கடுமைச் சரம்: வேகம் மிகுந்த அம்பு; கோடு: வளைந்த(தாகிய வில்); கானம் நடக்கும்: காட்டில் நடக்கும்;

குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா

 

குலம்: கூட்டம்; கோடு: கொடிய; தாரை: கூர்மை; வெயிற்கு: வெயிலுக்கு, ஒளிக்கு; அயிலை: வேலை;

கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடு துறை குமரப் பெருமாளே.

 

புணர்க்கும் இசை: இயக்கத்தால் உண்டாகும் ஓசை;

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கு அசைந்தாடு குழை... அலங்காரம் நிறைந்த மகுடமும்; ஒளி திரண்டதாகிய ஆறு முகங்களின் அழகோடு அசைந்தாடுகின்ற செவிக் குண்டலங்களும்;

கவசத் திரள் தோளும் அலந்தாம... கவசமும்; திரண்ட தோள்களும்; அவற்றின் மீது போதுமான அளவுக்குச் (முழுமையாகச்) சூடியிருக்கும் மலர்மாலைகளும்;

மணித்திரளை புரண்டாட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனைக்கடகச் சுடர்வேலும்... புரண்டு ஆடுகின்ற வரிசையான ரத்தின மாலைகளும்; திருக்கரங்களிலே அணிந்துள்ள மோதிரங்களும்; அணிந்ததிருக்கும் வீர கங்கணமும்; ஒளிபடைத்த வேலோடு;

சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதம்... (பாதங்களிலே) சிலம்பையும் வேதகோஷத்தை எழுப்பும் சலங்கையையும் அணிந்துள்ள சிவந்தததும் மணம் வீசுவதுமான திருப்பாதங்கள்,

திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன      திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன... திமிந்தோதி திமித்திமி என்ற தாளகதியிலே

தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ... எப்போதும் நடனம் செய்கின்ற அழகை நன்றாக எடுத்துச் சொல்ல மாட்டேனா?  (எடுத்துச் சொல்ல அருள்புரிய வேண்டும்.)

இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்டு இளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்... இலங்கேசனான ராவணனுடைய அசோகவனத்திலே அனுமனை ஏவிவிட்டு இலங்கையைப் புகையடர்ந்த நெருப்பால் எரிக்கச் செய்தவரும்; மென்மையான மகரந்தங்களைக் கொண்ட தாமரையில் வீற்றிருக்கும் திருமகளான சீதையைச் சிறையிலிருந்து மீட்டவரும்;

இளங்காள முகில் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்து இருங்கான நடக்கும் அவற்கு இனியோனே... இளமை நிறைந்த கருமுகிலைப் போன்றவரும்; வேகம் நிறைந்த அம்பையும் வளைந்த வில்லையும் கையிலே ஏந்தி பெரிய காட்டிலே நடந்தவருமான ராமனுக்கு (திருமாலுக்கு) இனியவனே!

குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக் கொடுந்தாரை வெயிற்கு அயிலைத் தொடும்வீரா... பெருங்கூட்டத்தின் வலிமையையும் கொடுமையையும் கொண்டிருந்த அசுரர்களுடைய பெரிய சேனையை அழிப்பதற்காகப் போர்க்களத்திலே கொடியதும் கூர்மையானதும் ஒளிமயமானதுமான வேலாயுதத்தை எறிந்த வீரனே!

கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசை குரங்காடு துறைக்குமரப் பெருமாளே... செழிப்பு நிறைந்த பூங்காக்களும்; மலர்ச் சோலைகளும்; இயங்குவதால் பேரொலியைச் செய்யும் கரும்பு ஆலைகளும் நிறைந்த திருக்குரங்காடுதுறையிலே வீற்றிருக்கின்றன குமரப் பெருமாளே!

சுருக்க உரை

இலங்கேசனுடைய அசோகவனத்துக்கு அனுமைன ஏவி, இலங்கைக்கு அடர்த்தியான புகையுடன் கூடிய தீயை வைக்கச் செய்தவரும்; மென்மையான பூந்தாதுகளைக் கொண்ட தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியான சீதையைச் சிறை மீட்டவரும்; இளமை நிறைந்த கருமுகிலைப் போன்றவரும் வேகம் நிறைந்த சரங்களையும் வளைந்த வில்லையும ஏந்திய வண்ணமாக அடர்ந்த காடுகளில் நடந்தவருமான ராமருக்கு இனியவனே!  பெரிய கூட்டத்தின் வலிமையையும் கொடுமையையும் கொண்டிருந்த அசுரர்களுடைய சேனைகளை அழிப்பதற்காகப் போர்முனையிலே கொடியதும் கூர்மையானதும் ஒளிநிறைந்ததுமான வேலை வீசிய வீரனே!  செழிப்பான பூங்காக்களும்; மலர்ச் சோலைகளும்; பேரோசையோடு இயங்குகிற கரும்பாலைகளையும் கொண்ட திருக்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் பெருமாளே!

அலங்காரமான திருமுடியும்; ஒளிவீசுகின்ற ஆறு திருமுகங்களில் அணிந்துள் செவிக்குண்டலங்களும்; கவசமும்; திரண்ட தோள்களின்மேலே நிறைந்திருக்கின்ற பூமாலைகளும்; வரிசையான ரத்னமணி மாலைகளும்; விரல்களிலே அணிந்துள்ள மோதிரங்களும்; தரித்திருக்கின்ற வீர கங்கணமுமாக—

வேத கோஷத்தை எழுப்புவதாகிய சிலம்பையும் சலங்கையையும் அணிந்திருக்கும் திருப்பாதங்கள் திமிந்தோதி திமித்திமி தனந்தான தனத்தன என்ற தாளத்தில் எப்போதும் நடனமாடும் அழகை என் மனமாரச் சொல்லி வாயார வாழ்த்த அடியேனுக்கு அருள் செய்யவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com