பகுதி - 536

இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது. 

மூச்சை அடக்கி யோகத்தில் ஈடுபடும் வகைகளை விவரிக்கும் இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.  இதுவே ‘தென்புலியூர்’ என்ற பெயரால் இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.  அம்பிகையினிடத்தில் பெரிதும் ஈடுபட்டவரான அருணகிரியார் மூன்றாமடியில் ‘என்றனை ஆளுமை பரத்தி சுந்தரி தந்த சேயே’ என்று பாடுவது, அவருக்கு அம்பிகை அருளிய வரலாற்றைப் பற்றிய குறிப்பு என்று குகத்திரு தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறிக்கிறார்கள்.  இப்பாடலைப் போலவே ‘ஆசைநாலு சதுரக் கமல’ என்று தொடங்குகின்ற பழமுதிர்சோலைக்கான பாடலிலும், ‘என் மாசுசேர் எழுபிறப்பையும் அறுத்த உமை’ என்று பாடுகிறார்.  இப்பாடலிலும் யோக முறைகளை விவரிக்கின்ற பாடல்.  இதைப் பின்னொரு நாளில் காண்போம்.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சிர்களில் ஒரு நெடிலோடு தொடங்குகிற நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒற்றொழித்துஇரண்டு குற்றெழுத்துகளும், இடைப்படும் ஒரு வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒற்றொழித்து மூன்று குற்றெழுத்துகளும் இடைப்படும் ஒரு மெல்லொற்றும் அமைந்துள்ளன. 

தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
      தானதன தத்த தந்தன                     தந்ததான

நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
         நாடியின டத்தி மந்திர                  பந்தியாலே
      நாரணபு ரத்தி லிந்துவி னூடுறஇ ணக்கி நன்சுடர்
         நாறிசைந டத்தி மண்டல               சந்தியாறிற்
கோலமுமு திப்ப கண்டுள நாலினைம றித்தி தம்பெறு
         கோவெனமு ழக்கு சங்கொலி           விந்துநாதங்
      கூடியமு கப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
         கோடிநட னப்ப தஞ்சபை                யென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலிகு லக்கொ ழுந்திலி
         ஆரணர்த லைக்க லங்கொளி           செம்பொன்வாசி
      ஆணவம யக்க முங்கலி காமியம கற்றி யென்றனை     
         ஆளுமைப ரத்தி சுந்தரி                 தந்தசேயே
வேலதையெ டுத்து மிந்திரர் மால்விதிபி ழைக்க வஞ்சகர்
         வீடெரிகொ ளுத்தி யெண்கட            லுண்டவேலா
      வேதசது ரத்தர் தென்புலி யூருறையொ ருத்தி பங்கினர்
         வீறுநட னர்க்கி சைந்தருள்              தம்பிரானே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com