பகுதி - 541

கருணை மேகமான திருமாலும்

பதச் சேதம்

சொற் பொருள்

சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம்

 

சிரம் அங்கம்: தலையாகிய உறுப்பு; அங்கை: அழகிய கை; செம்சலம்: சிவந்த நீர், இரத்தம்; என்பு: எலும்பு; திண்பொருந்திடு: திண்மையாகப் பொருந்தியிருக்கும்; மாயம்: மாயமான தேகம்;

சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி

 

 

விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்

 

விரைவின்கண்: விரைவாக; அந்தகன்: யமன்; பொரவந்தது: போரிட வந்துவிட்டான்;

வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே

 

 

அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன்

 

கொண்டல்: மேகம், கருமேகம், திருமால்; அண்டர்: தேவர்; மண்டி வந்திடு சூரன்: நெருங்கி வந்த சூரன்;

அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா

 

அகலம்: மார்பு; உடன்று: சினந்து;

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும்

 

மரை: தாமரை; வெம் கயம்: அழகிய குளங்கள்; மந்தி: குரங்குகள்; சந்துடன்: சந்தன மரங்களுடன், மரங்களில்;

வரையின் கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே.

 

 

சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம் என்பு திண் பொருந்திடு மாயம்... தலையாகிய அங்கமும்; அழகிய கையும்; கண்ணும்; காதும்; வஞ்சகத்துக்கு இடமான நெஞ்சமும்; சிவந்த ஜலமாகிய ரத்தமும்; எலும்பும் எல்லாமும் திண்மையாகப் பொருந்தியுள்ள மாயமாகிய இந்த உடலில்,

சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு... சில துன்பங்களும் இன்பங்களும் வந்து பொருந்தியிருந்த பின்னர் சாவு வர,

செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி... ஆவி பிரிந்திட, உடல் செந்தழலிலே சேர்ந்து வெந்து ஒழியுமாறு,

விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்... யமன் போரிடுவதற்காக விரைவாக வந்துவிட்டான் என்று துயரப்பட்டு நிலைகுலைந்து அழிவதற்கு முன்னால்,

வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே... நல்வினை, தீவினை எல்லாமும் தொலைந்து; நல்ல செய்கைகளே பொருந்தி; உன்னுடைய திருவடியைக் கேட்டறியவேண்டும் என்ற அன்பை எனக்குத் தந்தருள் புரியவேண்டும். 

அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு அமர் அஞ்ச... ஆதிசேடனாகிய பாம்பின் மேலே அறிதுயில் கொண்டபடி உயிர்களுக்கு அருள்பாலிக்கும் கருணைமேகமான திருமாலும் தேவர்களும் (விளைகின்ற) போரைப் பார்த்து அஞ்சும்படியாக,

மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட... நெருங்கி வந்தவனான சூரனுடைய நெஞ்சைப் பிளந்து; பொருந்திய உலகெங்கிலும் (அவனுடைய உடல் விழுகின்ற ஓசை) பெரிதாக ஒலிக்குமாறு,

அன்று உடன்று கொன்றிடும் வேலா... அன்று சினங்கொண்டு அவனைக் கொன்ற வேலனே! 

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற... தாமரை மலர்கள் நிறைந்த குளங்களிலே வண்டுகளின் கூட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து ரீங்கரித்து இசைக்க,

மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற மங்கை... சந்தன மரங்களிலே குரங்குகள் விளையானடுகின்ற (வள்ளி) மலைக்கு வந்து வளமான குறக்குலத்தைச் சேர்ந்த வள்ளியுடைய,

பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே.... தாமரைப் பாதமானது வருவதைக் கண்டு கும்பிட்ட பெருமாளே!

சுருக்க உரை

ஆதிசேடனாகிய பாம்பின் மீது அறிதுயிலில் இருந்தவாறு அருள்புரிகின்ற கருணை மேகமான திருமாலும் தேவர்களும் கண்டஞ்சுமாறு போருக்கு நெருங்கி வந்து எதிர்த்த சூரனுடைய மார்பைப் பிளந்து, அது விழுகின்ற பேரோசை பொருந்திய உலகங்களிலெல்லாம் கேட்கும்படியாக அவனைக் கொன்ற வேலனே!  தாமரைகள் நிறைந்த குளங்களிலே வண்டின் கூட்டங்கள் ஒன்றாகக்கூடி ஒலிப்பதும்; சந்தன மரங்களிலே குரங்குகள் விளையாடுவதுமான வள்ளி மலையிலே வளமான குறக்குலத்து வள்ளியம்மையாருடைய தாமரைப் பாதம் வரவும் அவரைக் கும்பிட்டு நின்ற பெருமாளே!

தலை, கை, கண், காது, வஞ்சனைக்கு இடம் தருகின்ற நெஞ்சு, ரத்தம், எலும்பு எல்லாமும் திண்மையாகப் பொருந்திய மாயம் நிறைந்ததாகிய இந்த தேகத்தில் சில காலத்துக்குச் சில இன்பங்களும் சில துன்பங்களும் சேர்ந்திருந்தபின் முடிவு வந்து சேர; செந்தழலிலே உடல் அழியும்படியாக ஆவி பிரிய; போரிடுவதற்காக யமன் விரைந்து வந்துவிட்டான் என்று துக்கத்தில் வீழ்ந்து நிலைகுலைந்து அழிவதற்கு முன்னால்,

நல்வினை, தீவினை யாவும் தொலைய, நற்செய்கைகளே பொருந்த, உன்னுடைய திருப்பாதங்களை அறிந்துணரவேண்டும் என்ற அன்பை எனக்குள்ளே ஊன்றியருள்வாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com