பகுதி - 542

வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது

இளைத்துத் துவண்டு போகின்ற இந்த உடலைப் போற்றுகின்ற பொய்யனான நான் உன்னுடைய தூய்மையான திருவடி ஆண்டுகொள்ளும் வழி எதுவென்று அறிகிலேன்; என்னை ஆண்டுகொண்டருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் அரக்கோணத்துக்கு 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒற்றொழித்து நான்கு குற்றெழுத்துகளாகவும்; கணக்கில் சேராத இரண்டாவது எழுத்து இடையின ஒற்றாகவும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இரண்டெழுத்துகளும் பயின்று வருகின்றன.

தய்யதன தான தய்யதன தான
      தய்யதன தான                      தனதான

இல்லையென நாணி யுள்ளதின் மறாம
         லெள்ளினள வேனும்             பகிராரை
      எவ்வமென நாடி யுய்வகையி லேனை
         யெவ்வகையு நாமங்             கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
         தொல்லைமுத லேதென்         றுணரேனைத்
      தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது
         துய்யகழ லாளுந்                 திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
         மையவரை பாகம்                படமோது
      மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
         வள்ளிமலை வாழுங்             கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
         வெள்ளிலுட னீபம்               புனைவோனே
      வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
         வெள்ளிநகர் மேவும்              பெருமாளே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com