பகுதி - 627

திருவருளாலே பார்க்க மாட்டாயா? 
பகுதி - 627

பதச் சேதம்

சொற் பொருள்

கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே

 

கார் சார் குழலார்: மேகத்தை ஒத்த குழலை உடையவர்கள்; விழி ஆர் அயிலார்: கூரான வேலைப் போன்ற கண்களை உடையவர்கள்;

காழ் காதலது ஆம் மனமே மிக வார் காமுகனாய் உறு சாதக மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே

 

காழ்க் காதல்: திண்மையான காதல்; மிகவார்: மிகப் பெரிய; சாதக(ன்): ஜாதகன் (பிறவியை உடையவன்);

பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா

 

பார்ப்பாய் அலையோ: பார்க்க மாட்டாயா; ஆர் அருள்: நிரம்பிய அருள்; கூர்ப்பாய்: மிகுதியாக (கூர்ப்பு: உள்ளது சிறந்து மிகுதல்);

பார் பாவலர் ஓது சொ(ல்)லால் முது நீர் பாரினில் மீறிய கீரரை ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே

 

ஓது சொல்லால்: புகழ்ந்து பாடும் பாடல்களால்; பாரினில் மீறிய: மற்ற அனைவரையும் மீறிய, முதன்மை வாய்ந்த; கீரரை: நக்கீரை; ஆர்ப்பாய்: மகிழ்ந்து (ஏற்பாய்); ஒருசொல் அருள்வாயே: உபதேசம் செய்தருள்க;

வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா(ம்) மத ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப

 

வார்ப் பேரருள்: வார்க்கின்ற பேரருள்; ச காரணமா(ம்): துணைக் காரணமாம்; மத: சமண மத; ஏற்பாடிகள்: ஏற்படுத்தியவர்கள்—இங்கே குருமார்கள்; அறை: சொன்ன—தேவாரப் பாடல்களைச் சொன்ன; (கோப என்பதை அடுத்த அடியின் வாக்கா என்பதோடு கூட்டி, கோப வாக்கா—கோபம் நிரம்பிய வாக்கை உடையவனே என்று கொள்ள வேண்டும்);

வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே

 

ஊக்கு: ஊக்குகின்ற; மாத்தா: பெரியோனே;

வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திரு வேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே

 

வேல் காட: வேல மரங்கள் நிறைந்த காட்டில் வசிக்கும்; ஆர்வ: அன்புடையவனே; மகிணா: மகிழ்நா, கணவனே;

வேட்டார் மகவான் மகளானவள் ஏடு ஆர் திரு மா மணவா பொ(ன்)னின் நாட்டர் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே.

 

வேட்டார்: வேள்வி நிரம்பிய; மகவான்: இந்திரன்; மகவான் மகளானவள்: தேவானை; பொன்னி நாட்டார்: தேவ லோகத்தார்;

கார்ச் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல்.... மேகத்தைப் போன்ற கருங்கூந்தலையும்; வேல்போன்ற கூரிய விழியையும்; பால்போன்ற இனிய சொற்களையும்; நூல்போன்ற இடையயும்;

எழுவார்  சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே... இளநீரை ஒத்த மார்பகங்களைய்ம் கொண்ட பெண்களின்மேல் ஏற்பட்ட மையலினால்;

காழ்க் காதலது ஆம் மனமே மிக வார்க் காமுகனாய் உறு சாதக மா பாதகனாம் அடியேனை...(அவர்களின்மேல்) உறுதியான அன்பைக் கொண்டுள்ள மனத்தையும்; மிகுந்த காமுகனாக இருக்கின்ற பிறப்பையும்; பெரிய பாதகனுமான அடியேனை,

நின் அருளாலே பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ... உனது திருவருளாலே பார்க்க மாட்டாயா?  உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயா?

உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா... பரிபூரணமான உனது அருளை மிகுதியாகப் பெருகும்படித் தரமாட்டாயா?  உமாதேவியார் அருளிய குமரேசனே!

பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால் முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை... பாரிலே உள்ள புலவர்களில், உன்னைப் பாடுகின்ற பாடல்களால் முதன்மைகொண்டு விளங்கும் நக்கீரரை,

ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே... மகிழ்ந்து ஏற்றவனே! உன்னுடை திருவளாலே ஒப்பற்ற ஒரு சொல்லை எனக்கு உபதேசித்தருள வேண்டும்.

வார்ப்பேர் அருளே பொழி காரண நேர்ப் பாவ ச காரணமா(ம்)... உலகுக்கு வார்க்கின்ற பேரருளைப் பொழிவதான மூல காரணனே!  நேர்ந்து எதிர் வந்த பாவத்துக்குத் துணைக் காரணமான,

மத ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப வாக்கா... சமண மதத்தை ஏற்படுத்திய குருமார்கள் அழியும்படியாக(த் தேவாரப் பாடல்களை, திருஞான சம்பந்தராக வந்து) பாடிய, கோபம் மிகுந்த திருவாக்கை உடையவனே!

சிவ மா மதமே மிக ஊக்க அதிப யோகமதே உறும் மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே ....சிவமதமாகிய பெருநெறி பெருகும்படியாகப் பெரிதும் முயன்ற தலைவனே!  யோக நிலையில் விளங்கும் பெரியவனே!  சிவ பாலா! குகா! அடியவர்களுடைய செல்வமே! 

வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா... வேங்கை மரங்கள் மிகுதியாக இருக்கும் காட்டிலே வாழ்கின்ற வேடர்களுடைய மகளான வள்ளியின்மீது அன்புகொண்ட கணவனே!

திருவேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே... திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேதபுரீஸ்வரர் அருளிய சேயே!

வேட்டார் மகவான் மகளானவள் ஏடு ஆர் திரு மா மணவா பொ(ன்)னின் நாட்டார் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே.... வேள்விகள் நிரம்பிய இந்திரனுடைய மகளான தேவானையின் மணாளனே!  அமராவதியிலுள்ள தேவர்களுடைய செல்வமாக வீற்றிருக்கின்ற பெருமாளே! 


சுருக்க உரை:

உலகுக்குப் பேரருளைப் பொழிந்து வார்க்கின்ற மூல காரணனே!  எதிர்த்து வந்த பாவத்துக்குத் துணைக்காரணமான சமண மதத்தின் குருமார்கள் அழியும்படியாகப் பாடல்களைச் சொன்ன திருஞானசம்பந்தராக அவதரித்த, கோபம் நிறைந்த வாக்கை உடையவனே!  சிவநெறி செழித்தோங்கும்படியாகப் பெரிதும் முயன்றவனே!  யோக நிலையில் விளங்குகிற பெரியவனே!  சிவ பாலா!  குகா!  அடியார்களுடைய செல்வமே!  வேங்கை மரங்கள் மிகுதியாக இருக்கும் காடுகளிலே வாழும் வேடர்களுடைய மகளான வள்ளியின்மேல் அன்புகொண்ட மணாளனே!  திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேதபுரீஸ்வரர் அருளிய சேயே!  பல வேள்விகளைச் செய்த இந்திரனுடைய மகளான தேவானையின் மணாளனே!  பொன்நாட்டவர்களான தேவர்களுடைய செல்வமாக வீற்றிருக்கின்ற பெருமாளே!

மேகத்தை ஒத்த கருங்கூந்தலையும்; வேலைப் போன்ற கூரிய விழியையும்; பாலைப் போன்ற இனிய சொற்களையும்; நூலைப் போன்ற இடையையும்; இளநீரை ஒத்த மார்பகங்களையும் கொண்ட பெண்களின் மேலே ஏற்பட்ட காதலாலே அவர்கள்மீது மாறாத அன்பைக் கொண்டிருக்கின்ற மனத்தையும்; பெரிய காமுகனாக இருக்கின்ற பிறப்பையும் உடைய பாதகனான அடியேனை உன்னுடைய திருவருளாலே பார்க்க மாட்டாயா?  அடியார்களோடு சேர்க்க மாட்டாயா?  உன்னைப் பாடுகின்ற பாடல்களால் பாரிலுள்ள புலவர்கள் அனைவருக்கும் முதன்மையாக விளங்கிய நக்கீரரை மகிழ்ந்து ஏற்றவனே!  ஒப்பற்ற ஒரு சொல்லை அடியேனுக்கு உபதேசித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com