பகுதி - 629

அனுபவிப்பதற்கே உரியவன்
பகுதி - 629

பதச் சேதம்

சொற் பொருள்

மாத்திரை ஆகிலும் நா தவறாள் உடன் வாழ்க்கையை நீடு என மதியாமல்

 

மாத்திரை: சிறிதளவு, அணுவளவு, இம்மியளவு; நா தவறாள்: சொல் தவறாதவள்; நீடு: நெடியது, பெரியது;

மாக்களை யாரையும் ஏற்றிடு(ம்) சீலிகள் மா பரிவு எய்தி அனுபோக

 

மாக்களை: மிருகங்களை(ஒத்த மனிதர்களை); சீலிகள்: ஒழுக்கமுள்ளவர்கள், வழக்கமுள்ளவர்கள்; பரிவு: அன்பு; அனுபோக: அனுபவிக்கும்;

பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள் பால் படு ஆடகம் அது தேட

 

பாத்திரம்: (அதற்கே) உரியது; ஈது: இது; ஆடகம்: பொன்;

பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ

 

கவி: கவிகளில், எனது பாடல்களில்; பாற்கடலான்: திருமால்;

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே

 

சாத்திரம் ஆறு: வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என சாத்திரங்கள் ஆறு; சாத்தியர்: சாத்தியமாக்கியவர்;

தாத்தரிகிட தாகிட சேக் எனும் நட தாள் பரனார் தரு குமரேசா

 

 

வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மிக்க அமுது ஆம் மயில் மணவாளா

 

வேத்திர(ம்) சாலம்: அம்புக் கூட்டம்;

வேத்த(ய)மதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே.

 

வேத்தமதாம்: வேத்தியமதாம்—அறியப்படுவதான; ஆர்த்திடு(ம்): முழங்கிடும்;

மாத்திரை யாகிலு நாத்தவறாளுடன் வாழ்க்கையை நீடென மதியாமல்... சொன்ன சொல்லை இம்மியளவேனும் பிசகாதவளான மனைவியோடு வாழ்கின்ற வாழ்க்கையைப் பெரிதென்று நினைக்காமல்,

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மாப்பரிவேயெய்தி... மிருகங்களாகத் திரிகின்ற மனிதர்கள் யாரானாலும் (அவர்களை) ஏற்றுக்கொள்கின்ற வழக்கமுள்ள பெண்களிடத்திலே பேரன்பு கொண்டு,

அநுபோக பாத்திரம் ஈதென மூட்டிடு மாசைகள் பாற்படு ஆடகம் அதுதேட... அனுபவிப்பதற்கே உரியவன் இவன் என்று (பிறர் சொல்லும்படியாக); இத்தகைய ஆசைகளால் ஏற்படும் (தேவையான) பொன்னைத் தேடுவதற்காக,

பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி பாற்கடலானென உழல்வேனோ...இந்தப் பாரிலிருக்கின்ற மூர்க்கர்களையெல்லாம் ‘பாற்கடலி பள்ளிகொண்ட திருமாலே இவன்’ என்றெல்லாம் பாடி வீணே திரிந்துகொண்டிருப்பேனோ?

சாத்திரம் ஆறையு நீத்த மனோலய சாத்தியர் மேவிய பதவேளே... (வேதாந்தம் முதலான) ஆறு சாத்திரங்களையும் கடந்து; மனம் வசப்படுவதைச் சாத்தியமாக்கிய பெரியோர்கள் போற்றுகின்ற திருப்பாதங்களை உடைய வேளே!

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட தாட் பரனார்தரு குமரேசா... தாத்தரி தாகிட என்று பலவிதமான தாளங்களுக்கேற்ப பெரும் நடனம் செய்கின்ற பாதங்களை உடைய நடராஜ மூர்த்தி(யின் பாலனான) குமரேசா!

வேத்திர சாலமது ஏற்றிடு வேடுவர் மீக்கு அமுதாமயில் மணவாளா...அம்புக் கூட்டங்களைத் தூக்கிக்கொண்டு திரிகின்ற வேடர்குலத்தவளும்; மிகுதியான அமுதத்தையும் மயிலையும் ஒத்த வள்ளியின் மணவாளா!

வேத்தம தாம் மறை ஆர்த்திடு சீர் திருவேட்கள மேவிய பெருமாளே.... அறியப்படுவதான வேதங்களின் முழக்கம் ஒலிக்கின்ற சிறப்பையுடைய திருவேட்களத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

ஆறு சாத்திரங்களையும் கடந்து, மனம்வசப்படுகின்ற ஆற்றலைக்கொண்ட பெரியோர்கள் போற்றுகின்ற திருவடிகளைக் கொண்ட வேளே! ‘தாத்தரிகிட’ என்று தாளம் தவறாமல் நடமாடுகின்ற சிவபிரானுடைய பாலனே!  அம்புக்கூட்டங்களுடன் திரிகின்ற வேடர்களின் குலத்தவளும்; அமுதத்தையும் மயிலையும் போன்றவளுமான வள்ளியின் மணாளனே! வேத கோஷங்கள் முழங்குகின்ற திருவேட்களத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

இம்மியளவேனும் வார்த்தை தவறாதவளாகிய மனைவியோடு நடத்துகின்ற இல்லற வாழ்க்கையைப் பெரிதாகப் போற்றாமல், விலங்குகளைப் போலத் திரிகின்ற யாரையும் ஏற்றுக்கொள்கின்ற விலைமாதர்களிடத்திலே அன்பு பூண்டு, அவர்களுக்குப் பொருள் தரவேண்டி, மூர்க்கர்களையெல்லாம் ‘பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலே’ என்றெல்லாம் வீணில் கவிபாடித் திரிவேனோ?  (அவ்வாறு திரியாதவண்ணம் ஆட்கொண்டு அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com