பகிதி - 635

பகிதி - 635

மை பூசிய கண்களால்

பதச் சேதம்

சொற் பொருள்

அருக்கி மெத்தென சிரித்து மை க(ண்)ணிட்டு அழைத்து இதப்பட சில கூறி

 

அருக்கி: அருமை பாராட்டி; மெத்தென: மென்மையாக;

அரை பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து

 

அரை: இடை; பணம்: பாம்பு—அல்குல்; அத்தை: அதை; அநுராகத்து: காமம் துய்த்தல்;

உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது

 

உருக்கி: உள்ளத்தை உருக்கி; மட்டற: குறைவில்லாமல்; ப்ரமை: மயக்கம்; கூராது: அதிகரிக்காது;

உரைத்து செய்ப் பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ

 

செய்ப்பதி: வயலூர்;

தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக

 

தருக்க: செருக்குடைய; மற்கட: வானர; பொருப்பு: மலை;

சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர்

 

பொட்டு எழவே: பொடிப்பொடியாகப் போகும்படி;

செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன்

 

விக்ரம: பராக்கிரமம் உள்ள;

திருத் தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே.

 

ஒருத்த: ஒப்பற்றவனே;

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக் க(ண்)ணிட்டு அழைத்து இதப்படச் சில கூறி... அருமை கொண்டாடி மென்மையாகச் சிரித்து; மை பூசிய கண்களால் அழைத்து; இதம் தருமாறு சில சொற்களைப் பேசி;

அரைப் பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து உருக்கி மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு... இடையின் அல்குலை விற்பனைக்குத் தந்து; அணிந்திருக்கும் பட்டாடையைக் கழற்றி; அணைத்துக் கொண்டு; இதழைத் தந்து; காமத்தைத் துய்க்கச் செய்து மனத்தை உருக்கி; குறைவில்லாமல் பணத்தைப் பறித்துக்கொள்ளும் விலைமாதர்களிடத்திலே,

உளக் கருத்தினில் ப்ரமை கூராது உரைத்து செய்ப் பதித் தலத்தினைத் துதித்து உனைத் திருப்புகழ் பகர்வேனோ... என்னுடைய உள்ளக் கருத்தில் மயக்கம் மிகுந்து; வயலூரைப் போற்றிப் பாடி உன்னைத் துதித்துத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவேனோ?

தருக்க மற்கடப் படைப் பலத்தினில் தடப் பொருப்பு எடுத்து அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து... செருக்கு நிறைந்ததான வானரப் படையின் பலத்தைக் கொண்டு பெரிய மலைகளைப் பெயர்த்தெடுத்து (அவற்றைக் கொண்டு) கடலுக்குக் குறுக்காக அடைத்து அணைகட்டி,

அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச் செயித்த உத்தமத் திரு மாமன் திருத் தகப்பன் மெச்சு ஒருத்த... (இலங்கையில்) இருந்த அரக்களைப் பொடிப்பொடியாகப் போகும்படிப் போரிட்டு; பராக்கிரமம் நிறைந்த அம்பைச் செலுத்தி அழித்து வெற்றிபெற்ற உத்தம மாமனும்; அழகிய தந்தையும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே!

முத்தமிழ் திருப் படிக்கரைப் பெருமாளே.... முத்தமிழ் மூர்த்தியே!  திருப்படிக்கரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

செருக்குமிக்க வானரப்படையின் பலத்தைக்கொண்டு பெரிய மலைகளைப் பெயர்த்துக் கடலுக்குக் குறுக்காக அணை எழுப்பி, அந்த அணைக்கு அப்பால் இலங்கையில் வாழ்ந்திருந்த அரக்கர்களைப் பொடிப்பொடியாக்கும்படியாகப் பராக்கிரமம் நிறைந்த அம்பைச் செலுத்தி; அரக்கர்களை அழித்து வெற்றிபெற்ற உத்தமனான மாமனும்; திருத்தந்தையும் மெச்சும்படியான ஒப்பில்லாதவனே!  முத்தமிழ் மூர்த்தியே!  திருப்படிக்கரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அருமை கொண்டாடியும்; மென்மையாகச் சிரித்தும்; மைதீட்டிய கண்ணால் அழைத்தும்; இதமான மொழிகளைப் பேசியும்; இடையில் உள்ள அல்குலை விற்பனைக்குத் தந்தும்; அணிந்திருக்கின்ற பட்டாடையை கழற்றி அணைத்தும்; இதழைத் தந்தும் (கையிலுள்ள) பணத்தை ஒரு குறையுமில்லாமல் பறித்துக் கொள்கின்ற விலைமகளிர்களிடத்திலே என் உள்ளத்தில் மயக்கம் பெருகாமல்; வயலூரைப் போற்றிப் பாடி; உன்னைத் துதித்துத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவேனோ?  (பாடுமாறு அருளவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com