பகுதி - 639

பிறப்பு என்னும் இடரையும்

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே

 

கருப்பம் தங்கு: கருப்பம் தாங்குவதற்கு; அரைப்புண்: இடையிலுள்ள புண் போன்ற உறுப்பு;

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும் கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி

 

கலப்பு: கூடல்; சிலுப்பு: ஊடல்; துவக்கு: இணக்கம்;

செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும் திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும்

 

செருத் தண்டம்: போருக்கு ஏற்ற தண்டாயுதம்; அண்டம் புக: பூமியில் புகுந்து; தண்டு(ம்); வருத்தும்; அந்தகற்கு: யமனுக்கு; அஞ்சும்: ஐம்புலனும்;

தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்(பு) பங்கம் சிறை பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே

 

தியக்கம்: சோர்வு; உயக் கொண்டு: உய்வடையச் செய்து;

அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரை கண் சென்று அரக்கன் பண்பு அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர்வேலா

 

அருக்கன்: சூரியன்; தெண்திரை: தெள்ளிய அலை; கன்றும்: சினக்கும்;

அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் செந்திலில் தங்கும் குமரேசா

 

தண்டு அலை: எழுந்து (வீசும்) அலை; கொந்தளிக்கும்: மேம்பட்டு விளங்கும்;

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம் புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய்

 

சுதன்: மகன்;

புன குன்றம் திளைக்கும் செம் தினை பைம்பொன் குற கொம்பின் புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே.

 

 

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களைக் கண்டு அங்கு அவர்ப் பின் சென்று... கருத் தரிப்பதற்குக் காரணமானதும் இரத்தப் பெருக்குள்ளதும் இடையிலே தோன்றிய புண்ணைப் போன்றதுமான உறுப்பினால் மனத்தை உருக்குகின்ற பெண்களைப் பார்த்து, உடனே அவர்களுக்குப் பின்னாலே சென்று;

அவரோடே கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும் கலிப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி... அவர்களோடு கலந்தும்; ஊடல் கொண்டும்; (மனம்) ஒன்றுபட்டும்; வேறுபட்டும்; இன்பமுற்றும்; துன்பமடைந்தும் தடுமாற்றம் ஏற்பட்டு;

செருத் தண்டம் தரித்து அண்டம் புகத் தண்டு அந்தகற்கு என்றும் திகைத்து... போருக்கான தண்டாயுதத்தை ஏந்தியபடி பூமியில் புகுந்து வருத்துகின்ற யமனை எப்போதும் அஞ்சி;

அம் திண் செகத்து அஞ்சும் கொடு மாயும் தியக்கம் கண்டு உயக் கொண்டு... அழகியதும் மண் திணிந்ததுமான இந்த பூமியிலே ஐம்புலன்களையும் வைத்துக் கொண்டு மாய்ந்து போகின்ற என்னுடைய சொர்வினைக் கண்டு, நான் உய்யும்படியாக,

என் பிறப்(பு) பங்கம் சிறைப் பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே... என்னுடைய பிறப்பு என்னும் இடரையும்; சிறையில் அடைத்ததைப் போன்ற துன்பத்தையும் போக்கி உன்னுடைய திருவடிகளிலே இன்பம் தந்தருள வேண்டும். 

அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக் கண் சென்று அரக்கன் பண்பு அனைத்தும் பொன்றிடக் கன்றும் கதிர்வேலா... சூரியன் திரிவதம் தெள்ளிய அலைகள் வீசுவதுமான கடலிடத்திலே (போய் மறைந்த) சூரனுடைய பெருமைகளெல்லாம் அழியும்படியாகச் சினந்த கதிர்வேலா! 

அணிச் சங்கம் கொழிக்கும் தண்டு அலைப் பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் செந்திலில் தங்கும் குமரேசா... அழகிய சங்கினங்களைக் கரையிலே புரட்டியெறிந்தபடி அலைகள் எழுந்து வீசுகின்ற பெருமை எட்டுத் திசைகளிலும் உயர்ந்தோங்கி விளங்குகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரேசா!

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம் புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய்...உயிர்களைப் பரிபாலிக்கும் சங்கரிக்கும் சிவனாருக்கும் அவருடைய இன்பத்தைப் புதுப்பிக்கின்ற கங்காதேவிக்கும் மகனானவனே!

புனக் குன்றம் திளைக்கும் செம் தினைப் பைம்பொன் குறக் கொம்பின் புறத் தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே... தினைப்புனங்கள் நிறைந்த வள்ளி மலையில் விளையாடியவளும்; தினையைக் காத்த பசும்பொன்னைப் போன்ற குறமகளுமான வள்ளியின் குளிர்ச்சியான மார்பகத்தில் துயில்கொள்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

சூரியன் உலவுவதும் அலைகள் வீசுவதுமான கடலிலே சென்று மறைந்துகொண்ட சூரனுடைய பெருமைகளெல்லாம் கெடுமாறு சினந்த கதிர்வேலா!  சங்குகளைக் கரைகளில் வீசியெறிகின்ற அலைகள் நிறைந்த கடலின் பெருமை எட்டுத் திக்கிலும் மேம்பட்டு விளங்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரா!  உயிர்களைப் பரிபாலிக்கின்ற சங்கரிக்கும் சிவனாருக்கும் அவருடைய இன்பத்தைப் புதுக்குகின்ற கங்காதேவிக்கும் மகனானவனே!  தினைப்புனங்கள் நிறைந்த வள்ளிமலையில் விளையாடியவளும்; தினையைக் காத்த பசும்பொன்னைப் போன்றவளும் குறமகளுமான வள்ளியின் குளிர்ந்த மார்பகத்தில் துயில்கொள்ளும் பெருமாளே!

பெண்களுடைய உடலழகில் மயங்கி, அவர்கள் பின்னே சென்று இன்பம் அனுபவித்தும்; நிலைதடுமாறியும்;  உயிரைக் கொண்டு போவதற்காக யமன் வரும்போது கலங்கியும் ஐம்புலன்களுடன் இந்த பூமியில் அழிவுறுகின்ற என்னுடைய சோர்வினைக் கண்டு; என் பிறப்பாகிய இடரை நீக்கி உன்னுடைய திருவடி இன்பத்தைத் தந்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com