பகுதி - 705

செய்ந்நன்றியை உணராத வீணர்
பகுதி - 705

பதச் சேதம்

சொற் பொருள்

அறிவு இலாப் பித்தர் உன்றன்
அடி தொழா கெட்ட வஞ்சர்
அசடர் பேய் கத்தர்
நன்றி அறியாத

 

பேய்க்கத்தர்: பேய்க் குணம் கொண்டவர்கள்;

அவலர் மேல் சொற்கள்
கொண்டு கவிகளாக்கி
புகழ்ந்து அவரை வாழ்த்தி
திரிந்து பொருள் தேடி

 

அவலர்: வீணர்கள்;

சிறிது கூட்டி கொணர்ந்து
தெரு உலாத்தி திரிந்து
தெரிவைமார்க்கு சொரிந்து
அவமே யான்

 

தெரிவைமார்க்கு: பெண்களுக்கு; அவமே: வீணே;

திரியும் மார்க்கத்து நிந்தை
அதனை மாற்றி பரிந்து
தெளிய மோக்ஷத்தை
என்று அருள்வாயே

 

பரிந்து: பரிவோடு;

இறைவர் மாற்று அற்ற
செம்பொன் வடிவம் வேற்று
பிரிந்து இடபம் மேல் கச்சி
வந்த உமையாள் தன்

 

வேற்றுப் பிரிந்து: வேறுபட்டுப் பிரிந்து; இடபம் மேல்: நந்தி வாகனத்தின் மேல்;

இருளை நீக்க தவம் செய்து
அருள நோக்கி குழைந்த
இறைவர் கேட்க தகும்
சொல் உடையோனே

 

 

குறவர் கூட்டத்தில் வந்து
கிழவனாய் புக்கு நின்று
குருவி ஓட்டி திரிந்த
தவ மானை

 

 

குணமதாக்கி சிறந்த வடிவு
காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே.

 

குணமதாக்கி: தன் வசப்படுத்தி;

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர்... அறிவற்ற பித்தர்களும்; உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சனை உடையவர்களும்; அசடர்களும்; பேய்க்குணம் கொண்டவர்களும்;

நன்றி யறியாத அவலர் மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து அவரைவாழ்த்தித் திரிந்து பொருள்தேடி... செய்ந்நன்றியை உணராத வீணர்களுமானவர்கள் மீது சொற்களைக் கொண்டு பாடல் புனைந்து அவர்களை வாழ்த்தி அலைந்து திரிந்து பொருள்தேடியும்;

சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து தெரிவைமார்க்குச் சொரிந்து... (அப்படி ஈட்டிய பொருளை) சிறிதளவுக்குச் சேர்த்து வைத்துக்கொண்டு தெருக்களில் அலைந்து திரிந்து பெண்களுக்குச் வாரியிறைத்து,

அவமேயான் திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே... வீணாகத் திரிகின்ற என் நடத்தையால் எனக்கு ஏற்படுகின்ற பழிச்சொல்லைப் போக்கி; அன்புகூர்ந்து நான் தெளிவடைவதற்கான மோட்சத்தை என்று எனக்கு அருளப்போகிறாய்? (அடியேனுக்கு மோட்சத்தை அளித்தருள வேண்டும்.)

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த உமையாள்... சிவபெருமானுடைய மாற்றுக் குறையாத செம்பொன் வடிவத்திலிருந்து தனியே பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சிக்கு வந்த உமையவள்,

தன் இருளைநீக்கத் தவஞ்செய்து அருளநோக்கிக் குழைந்த இறைவர் கேட்கத் தகுஞ்சொல் உடையோனே... தன்னைச் சூழ்ந்த பிரிவென்ற இருளை நீக்குவதற்காகத் தவம் செய்வதைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த ஈசரான சிவபெருமான் கேட்டு மகிழத் தகுந்ததான உபதேசச் சொல்லை உடையவனே!

குறவர்கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட்டித்திரிந்த தவமானை... குறவர்களுடைய கூட்டத்திலே தோன்றி கிழவனாக வேடம் தரித்துக்கொண்டு தினைப்புனத்தில் குருவிகளைக் கடிந்தோட்டிக்கொண்டிருந்த தவமானாகிய வள்ளியை,

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே.... தன் வசப்படுத்திக்கொண்டு; உன்னுடைய தெய்வ வடிவத்தைக் காட்டி அவளை மணந்துகொண்டவனே! ‘குமரகோட்டம்’ என்னும் காஞ்சித் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

மாற்றுக் குறையாத இறைவனுடைய திருமேனியிலிருந்து தனியாகப் பிரிந்து ரிஷப வாகனமேறிக் காஞ்சிக்குத் தவம்புரிய வந்த உமையம்மையின் தவக்கோலத்தைக் கண்டு மனம் குழைந்தவரான சிவபெருமான் கேட்டு மகிழத்தக்க உபதேச மொழிகளை உடையவனே!  குறவர்கள் கூட்டத்திலே கிழவன் வேடத்தில் தோன்றி, தினைப்புனத்தில் கிளி, குருவிகளை ஓட்டிக் கொண்டிருந்த வள்ளியை வசப்படுத்திக்கொண்டு, உன்னுடைய தெய்வக் கோலத்தை அவருக்குக் காட்டி மணந்துகொண்டவனே!  குமரகோட்டம் என்னும் காஞ்சித் திருப்பதியில் அமர்ந்திருக்கின்ற பெருமாளே!

அறிவற்ற பித்தர்களையும்; உன் திருவடிகளைத் தொழாத வஞ்சகர்களையும்; மூடர்களையும்; பேயின் குணம் கொண்டவர்களையும்; நன்றியறிதல் இல்லாத வீணர்களையும் புகழ்ந்து கவிபாடி பொருள் சேகரித்து; தெருக்களில் சுற்றித் திரிந்து அந்தப் பொருளைப் பெண்களுக்கு வாரியிறைத்து வீணே காலங்கழித்து வருகிற நான் இப்படித் திரிவதனால் ஏற்படும் பழிச்சொல் நீங்கும்படியாக அருளி, என்மீது அன்புகூர்ந்து, நான் தெளிவுபெறுமாறு மோட்ச இன்பத்தை என்றைக்குத் தருவாய்?  (தவறாமல் தந்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com