பகுதி - 707

ஆயிர நாமங்கள் கொண்டவனும்
பகுதி - 707

பதச் சேதம்

சொற் பொருள்

அனித்தமான ஊன் நாளும்
இருப்பதாகவே நாசி அடைத்து
வாயு ஓடாத வகை சாதித்து

 

அனித்தமான: அநித்தியமான,
நிலையற்ற; ஊன்: உடல்;
நாளும் இருப்பதாகவே:
என்றும் நிலைத்திருக்க;

அவத்திலே குவால் மூலி
புசித்து வாடும் ஆயாச
அசட்டு யோகி ஆகாமல்
மலம் மாயை

 

அவத்திலே: பயனற்ற வழியிலே;
குவால்: (குவவு என்ற
சொல்லிலிருந்து வந்த சொல்)
குவியல் என்று பொருள்—மிகுதியாக
என்று இங்கே பொருள்படும்;
மூலி: மூலிகை;

செனித்த காரிய உபாதி ஒழித்து
ஞான ஆசார சிரத்தை ஆகி
யான் வேறு என் உடல் வேறு

 

செனித்த: ஜனித்த, தோன்றிய;
உபாதி: வேதனைகள்; ஞான
ஆசார: ஞானாசார, ஞான
ஒழுக்க, ஞான வழியில்;

செகத்தில் யாவும் வேறாக
நிகழ்ச்சியா மன அதீத சிவ
சொரூப மா யோகி என
ஆள்வாய்

 

மனோதீத: மன அதீத—மனத்துக்கு
எட்டாத;

தொனித்த நாத வேய் ஊது
சகஸ்ர நாம கோபால சுதற்கு
நேச மாறாத மருகோனே

 

வேய்: மூங்கில், புல்லாங்குழல்;
சகஸ்ரநாம: ஆயிரம் பெயர்களை
உடைய; கோபால சுதன்:
இடையர்களின்—நந்தகோபரின்—
மகன்;

சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த
லோக பூ பால தொடுத்த
நீப வேல் வீர வயலூரா

 

மீகாமன்: மாலுமி; தொடுத்த
நீப: தொடுக்கப்பட்ட கடப்ப
மலர்மாலை; நீப! என்று
விளியாகப் பயன்படுகையில் (மாலையை) அணிந்தவனே
என்று பொருள்படும்;

மனித்தர் ஆதி சோணாடு
தழைக்க மேவு காவேரி மக
ப்ரவாக பானீயம் அலை மோதும்

 

மனித்தர்: மனிதர்; சோணாடு:
சோழ நாடு; மக: மகா,
பெரிய; ப்ரவாக:
வெள்ளம் பெருகுகின்ற; பானீயம்: நீர்;

மணத்த சோலை சூழ் காவை
அனைத்து லோகம் ஆள்வாரும்
மதித்த சாமியே தேவர் பெருமாளே.

 

காவை: திருவானைக்காவை;

அனித்தமான ஊன் நாளுமிருப்பதாகவே நாசி யடைத்து வாயு ஓடாத வகைசாதித்(து)... அநித்தியமான இந்த உடல் என்றம் நிலைத்திருக்கச் செய்வதற்காக மூக்கை அடைத்து, மூச்சு ஓடாத வழியைப் பயிற்சி செய்து;

அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி யாகாமல்... வீணாக மூலிகைகளைக் குவியல் குவியலாக உண்டு வாடுகின்றதும்; ஆயாசத்தைத் தருவதும் மூடத்தனம் நிறைந்ததுமான யோகியாக மாறிவிடாமல்;

மலமாயை செனித்த காரிய உபாதி யொழித்து... மும்மலங்களாலும் மாயையாலும் உண்டாகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து;

ஞான ஆசார சிரத்தை யாகி  யான்வேறு எனுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவச்சொரூப மாயோகி யெனஆள்வாய்... ஞான மார்க்கத்திலே சிரத்தை கொண்டவனாக ஆகி; நான் வேறு, என் உடல் வேறு; உலகத்திலே எல்லாமும் வேறு என்ற (பற்றற்ற) நிலையை அடைந்து; மனத்துக்கு எட்டாத சிவ ஸ்வரூப மஹாயோகியாக நான் ஆகுமாறு அடியேனை ஆண்டருள வேண்டும்.

தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே... இசை தொனிக்கின்ற புல்லாங்குழலை ஊதுகின்றவனும்; ஆயிர நாமங்கள் கொண்டவனும்; இடையர் குலத்தில் தோன்றியவனுமான திருமாலின் மாறாத நேசத்தைப் பெற்ற மருகனே!

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால தொடுத்த நீப வேல்வீர வயலுரா... தேவலோக(மாகிய கப்பலுக்கு) மாலுமியே! எல்லா உலகங்களையும் பாலிப்பவனே! தொடுக்கப்பட்ட கடப்ப மலர்களை மாலையாக அணிபவனே!  வேல் வீரனே! வயலூரனே!

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மகப்ரவாக பானீயம் அலைமோதும்... மனிதர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களும் வாழுகின்ற சோழநாடு தழைப்பதற்காகப் பெருகிப் பாயும் காவேரியின் வெள்ள நீர் அலைமோதுகின்றதும்;

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே தேவர் பெருமாளே.... நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்ததுமான திருவானைக்காவில் விளங்குபவனே!  அனைத்துலகங்களையும் ஆள்பவர்களும் போற்றுகின்ற சுவாமியே!  தேவர்களின் பெருமாளே!


சுருக்க உரை:

 வேய்ங்குழலை ஊதுபவரும்; ஆயிரம் திருநாமங்களைக் கொண்டவரும்; இடையர்களின் மகனுமான திருமாலுடைய மாறாத அன்பைப் பெற்றவனே!  அனைத்துலங்களையும் புரப்பவனே! மனிதர் முதற்கொண்டு பல்வேறு உயிர்கள் தழைக்கும்படியாகப் பாயும் காவேரியின் நீர்ப்பெருக்கு சூழ்ந்திருக்கின்ற திருவானைக்காவில் விளங்குபவனே!  அனைத்துலகங்களையும் ஆள்பவர்களும் போற்றுகின்ற தலைவனே!  தேவர்கள் பெருமாளே!

 நிலையற்ற இந்த உடலை நிலைத்திருக்கச் செய்யும் நோக்கத்தோடு, மூக்கை அடைத்து, மூச்சோட்டத்தை நிறுத்தும் வழிமுறைகளைப் பயிற்சி செய்து பயனற்ற வழிகளை மேற்கொண்டு; குவியல் குவியலாக மூலிகைகளைத் தின்று வாழ்கின்ற அசட்டு யோகியாக நான் மாறிவிடாமலும் மும்மலங்களாலும் மாயையாலும் தோன்றுகின்ற காரியங்களையும் அவற்றால் ஏற்படும் வேதனைகளையும் ஒழித்து;  ஞானமார்க்கத்தைக் கைப்பிடித்து; நான் வேறு; இந்த உடல் வேறு; பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் வேறுவேறு என்ற பற்றற்ற நிலையை அடைந்து மனத்துக்கு எட்டாததாக விளங்குகின்ற ‘சிவ ஸ்வரூப மஹாயோகி’யாக நான் ஆகும்படியாக அடியேனை ஆண்டருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com